கர்நாடகாவில் டயரில் பணம் பதுக்கி பாஜகவினர் கடத்தியதாகப் பரவும் தவறான செய்தி !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடகா மாநிலத்தின் 16வது சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று (மே, 10ம் தேதி) நடைபெற்று வருகிறது. பல கட்சிகள் களத்தில் இருப்பினும், பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டியாகவே இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது.
அம்மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவின் மீது தேர்தல் பிரச்சாரத்தின் போது முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் ‘40 சதவீதம் கமிஷன்’ என்பது குறிப்பிடத்தக்கது. அரசு வெளியிடும் ஒப்பந்தங்களை எடுக்கும் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து 40 சதவீதம் கமிஷனாக ஆளும் கட்சியினர் பெறுகின்றனர் என்பதே அக்குற்றச்சாட்டு.
Wheels of Change.. Forget RTGS, NEFT,IMPS, mobile banking ….. here is funds transfer on wheels! 😀😀 pic.twitter.com/EqDoZFs955
— Logical Thinker🇮🇳🇮🇳🇮🇳 (@logicalkpm) May 5, 2023
இந்நிலையில் டயரில் பணம் வைத்துக் கொண்டு செல்லும் புதிய தொழில்நுட்பத்தைக் கர்நாடக பாஜக மேற்கொண்டுள்ளதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
கர்நாடகாவில் வாகனத்தின் டயரில் மறைத்து வைத்து பணம் கடத்தப்பட்டதாகப் பரவும் வீடியோவின் கீப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடினோம். அது 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது நிகழ்ந்தது என்பதை அறிய முடிந்தது.
இது குறித்து 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தேதி ‘Deccan Herald’ என்னும் இணையதளத்தில் ரூ.2.30 கோடி பணத்தினை வருமானத் துறையினர் பறிமுதல் செய்ததாகச் செய்தி வெளியாகியுள்ளது. அதில், கர்நாடகா மாநிலம் பெங்களூரிலிருந்து சிவமோகா பகுதிக்குச் சட்டத்திற்குப் புறம்பாகப் பணம் கொண்டு செல்லப்படுவதாகப் பறக்கும் படையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றின் ஓட்டுநரை விசாரித்ததில் காரின் டயரில் பணம் பதுக்கி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
#WATCH: Rs 2.30 cr in cash stuffed inside the spare tire in a car seized by Income-Tax officials. The cash was being transported from Bengaluru to Shivamogga. #Karnataka pic.twitter.com/yUeRdKVyzY
— ANI (@ANI) April 20, 2019
அந்த டயரில் இருந்து பணத்தினை அதிகாரிகள் வெளியில் எடுக்கும் வீடியோ ANI டிவிட்டர் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. அதே போல், ‘HW News English’ என்னும் யூடியூப் பக்கம் வெளியிட்ட செய்தியிலும் இத்தகவலை உறுதி செய்ய முடிகிறது.
மேலும் இது குறித்து NDTV வெளியிட்டுள்ள செய்தியில், இப்பணம் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு அளிக்கக் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். பரவக் கூடிய வீடியோ 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது கர்நாடகா பகுதியில் நிகழ்ந்தது. ஆனால், இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டது எக்கட்சியினர் என்பது குறித்த எந்த தகவலும் அச்செய்திகளில் இடம்பெறவில்லை.
மேலும் படிக்க : கர்நாடகாவில் பாஜகவிற்கு வாக்களிக்குமாறு நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியதாகப் பரப்பப்படும் போலிச் செய்தி !
முன்னதாக கர்நாடக தேர்தல் குறித்துப் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகள் குறித்த உண்மைத் தன்மையினையும் யூடர்ன் கட்டுரைகளாக வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி என பிபிசி கருத்துக் கணிப்பு வெளியிட்டதாகப் பரப்பப்படும் போலிச் செய்தி !
முடிவு :
நம் தேடலில், கர்நாடக மாநிலத்தில் டயரில் பணம் பதுக்கிக் கடத்தியதாகப் பரவும் வீடியோ 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது நிகழ்ந்ததாகும். அதனை தற்போது நிகழ்ந்ததுபோல தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.