கர்நாடகாவில் விசப் பூச்சி கடித்து 5 நிமிடத்தில் விவசாயிகள் உயிரிழப்பு எனப் பரவும் வாட்ஸ்அப் வதந்தி !

பரவிய செய்தி
பருத்தி வயலில் ஒரு பச்சை ஓட்டம் வருகிறது. கடித்த ஐந்தே நிமிடங்களில் இறந்து போனது. கர்நாடகாவில் நடந்தது. இது பாம்பை விட விஷ பூச்சி. வாட்ஸ்அப்பில் உள்ள அனைத்துக் குழுக்களுக்கும் பகிரவும். குறிப்பாக, விவசாயிகளுக்கு தெரியப்படுத்துங்கள்.
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பருத்தி வயலில் பாம்பை விட விசத்தன்மைக் கொண்ட பூச்சியால் கடிபட்டவர்கள் 5 நிமிடத்தில் உயிரிழந்து உள்ளதாக பூச்சி ஒன்றின் புகைப்படமும், விவசாய நிலத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இருக்கும் புகைப்படமும் இணைக்கப்பட்டு வாட்ஸ் அப், முகநூல் என சமூக வலைதளங்களில் இத்தகவல் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் புகைப்படங்களில் உள்ள பூச்சியின் படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், இவை stinging nettle caterpillar வகையைச் சேர்ந்தவை என அறிய முடிந்தது. இந்த பூச்சியின் முதுகுப் பகுதியில் உள்ள ரோமங்கள் போன்ற பகுதி அதன் தற்காப்பிற்காக உள்ளது. அதை யாராவது தொடும் பட்சத்தில், அவற்றில் இருந்து வரும் ரசாயனங்களால் தோல் அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும். இந்தியாவிலும் காணப்படும் இவ்வகை பூச்சிகளால் மனித உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக எங்கும் பதிவாகவில்லை.
மேலும், வைரல் படத்தை வைத்து மேற்கொண்டு தேடிய போது, கோனாஸ் புழு (ghonas worm) என்ற தகவல் ஒன்று கிடைத்தது. இந்த கோனாஸ் புழு பற்றித் தேடுகையில், மகாராஷ்டிராவின் சங்கிலி மற்றும் பீட் மாவட்டத்தில் விவசாய நிலங்களில் இந்த புழுக்களால் பயிர்களுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
புல் மற்றும் கரும்புகளில் காணப்படும் கோனாஸ் புழுக்களால் பதிக்கப்பட்டவர்கள் அரிப்பு, வீக்கம் மற்றும் வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த புழுவின் தாக்குதல் அதிகம் காணப்பட்டால் குளோரோ சைபரை தெளிக்குமாறு பீட் மாவட்ட வேளாண் அதிகாரி தெரிவித்து இருக்கிறார். எனினும், இந்த புழுக்களால் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை.
அடுத்ததாக, வைரல் பதிவில் உள்ள உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” மகாராஷ்டிராவின் செலிஸ்கான் தாலுக்காவில் உள்ள நாவே கிராமத்தில் பருத்திக்கு உரமிட சென்ற அப்பா மற்றும் மகன் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக ஜூம் மராத்தி எனும் யூட்யூப் சேனலில் வீடியோவும், மகாராஷ்டிரா டைம்ஸ் எனும் இணையதளத்தில் புகைப்படங்களும் செய்தி வெளியாகி இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பருத்தி நிலத்தில் அப்பா, மகன் மின்னல் தாக்கி உயிரிழந்த புகைப்படங்களையும், அதே மாநிலத்தில் கோனாஸ் புழுக்களால் மக்கள் பாதிக்கப்பட்ட செய்தியையும் இணைத்து விசப் பூச்சிக் கடித்து உயிரிழந்ததாக வதந்தியை உருவாக்கி இருக்கிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், கர்நாடகாவில் பருத்தி வயலில் விசப் பூச்சிக் கடித்து 5 நிமிடத்தில் விவசாயிகள் உயிரிழந்ததாக பரப்பப்படும் தகவல் வதந்தியே. மகாராஷ்டிரா மாநிலத்தில் இரு மாவட்டங்களில் கோனாஸ் புழுக்களால் விவசாயிகளுக்கு தோல் சார்ந்த பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல், வைரல் பதிவில் உள்ள இறந்தவர்களின் படங்கள் மகாராஷ்டிராவில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் என அறிய முடிகிறது.