This article is from Apr 17, 2020

கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான மக்கள் தேர் இழுத்த சம்பவம்| தவறான புகைப்படத்தை வெளியிட்ட ஒன்இந்தியா.

பரவிய செய்தி

இதுதான் லாக்டவுனா? கர்நாடகாவில் தேரை இழுத்த ஆயிரக்கணக்கான மக்கள்! வேடிக்கை பார்த்த பாஜக போலீஸ்.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

கோவிட்-19 நோய்த்தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்காகவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கோவில் திருவிழாவில் தேரை இழுத்துச் சென்றதாக புகைப்படத்துடன் கூடிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Facebook link | archive link 

வைரலாகும் புகைப்படத்தைக் கொண்டு செய்தி வெளியிட்டது யார் என்பதை தேடிப் பார்க்கையில், ஒன் இந்தியா தமிழில் வெளியான செய்தியின் பக்கத்தை அடிப்படையாக வைத்து தகவலை பகிர்ந்து வருகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

ஒன் இந்தியா தமிழில், ” கர்நாடகா கலாபுராகி மாவட்டத்தின் சித்தாபூர் தாலுகாவில் உள்ள சித்தலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை மீறி கோயில் திருவிழாவில் மக்கள் பங்கேற்றதுடன் சமூக இடைவெளி மற்றும் கொரோனா பற்றி துளியும் கவலைப்படாமல் தேரை இழுத்துச் சென்றனர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் எந்தவொரு அனுமதியும் அளிக்கவில்லை, விழாவை தடை செய்யவில்லை ” என புகைப்படத்துடன் வெளியாகி இருக்கிறது.

ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் வெளியான செய்தி உண்மையாக இருந்தாலும், இணைக்கப்பட்ட புகைப்படம் சமீபத்தியவை அல்ல. தேர் புகைப்படத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இல்லை பார்ப்பதற்கு லட்சத்தை தொடும் அளவிற்கு மக்கள் கூட்டம் இடம்பெற்று இருக்கிறது. அப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் 2018 தி வீக் இணையதளத்தில் அப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.

அதில், புகைப்படத்தின் கீழே கவி சித்தேஸ்வரா கோவில் திருவிழா என இடம்பெற்று இருக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் கோப்பல் மாவட்டத்தில் உள்ள கவி சித்தேஸ்வரா கோவில் தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் ஜனவரி மாதத்தில் தேரோட்ட திருவிழா நிகழ்ந்து இருக்கிறது என்பதை ட்விட்டர் வாசி ஒருவரின் பதிவில் இருந்து அறிந்து கொள்ள முடிந்தது.

Twitter link | archive link

ஊரடங்கில் திருவிழா : 

ஏப்ரல் 16-ம் தேதி இந்தியா டுடேயில், கலாபுராகி மாவட்டத்தின் சித்தலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதாக புகைப்படம் மற்றும் வீடியோ உடன் செய்தி வெளியாகி இருக்கிறது. அதில் இடம்பெற்ற தேர், பகுதி வெவ்வேறாக உள்ளது.

Twitter link | archive link

இது தொடர்பாக ட்விட்டர் வாசி ஒருவர் வீடியோ உடன் பதிவிட்ட பதிவிற்கு, சம்பவம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டு உள்ளதாக கலாபுராகி மாவட்ட காவல்துறை ட்விட்டரில் பதில் அளித்து உள்ளது. ஊரடங்கில் திருவிழாவை நடத்திய கோவில் நிர்வாகம் மீது வழக்கு பதிந்து உள்ளார்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த துணை ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

நம்முடைய தேடலில் இருந்து, கர்நாடகாவில் நடைபெற்ற திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தேரை இழுத்த சம்பவம் குறித்து செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அது உண்மையே. ஆனால், வைரல் செய்யப்படும் புகைப்படம் தவறானது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader