கர்நாடகாவில் மின்கட்டணம் செலுத்த மாட்டேன் என ஊழியரைத் தாக்கியதாகப் பரவும் தவறான வீடியோ !

பரவிய செய்தி
கர்நாடகாவில் மின் கட்டணம் வசுலிக்க வந்த அதிகாரிகளின் நிலமை இப்படி தான் இருக்கு… இலவச மின்சாரம் தருவதாக சொல்லி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்.Archive Link
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடக சட்ட சபை தேர்தலின் போது அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் (GRUHA JYOTHI SCHEME), ஒவ்வொரு குடும்பத்தின் பெண் தலைவருக்கும் ரூ. 2,000 மாதாந்திர உதவி (GRUHA LAKSHMI SCHEME), வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ இலவச அரிசி (ANNA BHAGYA SCHEME) உட்பட பல்வேறு முக்கிய திட்டங்களை காங்கிரஸ் கட்சி வாக்குறுதியாக அறிவித்தது.
இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு மின்கட்டணம் செலுத்த மாட்டோம் என சில இடங்களில் மக்கள் மறுத்து வருவதாக செய்திகளில் வெளியாகியது. இதையடுத்து, மின் கட்டணம் வசூலிக்க சென்ற மின் ஊழியரை தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பாஜகவினரால் பரப்பப்பட்டு வருகிறது.
கர்நாடகா கோப்பாலில் மின் கட்டணம் வசூலிக்க சென்ற மின் ஊழியருக்கு அடி உதை 😂😂😂 pic.twitter.com/pU7uD1oZgL
— Savukku Shankar Army (@Mahi1987Mass) May 24, 2023
உண்மை என்ன ?
கர்நாடகாவில் பெஸ்காம் (BESCOM), மெஸ்காம் (MESCOM), ஹெஸ்காம் (HESCOM), கெஸ்காம் (GESCOM) மற்றும் செஸ்காம் (CESCOM) ஆகிய ஐந்து மின்சார விநியோக நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு மின்தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. எனவே இதற்கான மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் பணியை கர்நாடகா மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (KERC) செய்து வருகிறது.
எனவே இதுதொடர்பாக பரவி வரும் வீடியோவில் உள்ள கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், South First எனும் ஊடகம் நேற்று (மே 24) தன்னுடைய யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோ குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், கர்நாடகாவின் கோப்பால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரான யசோதா வந்தகோடி IPS கூறுகையில், “கெஸ்காம் எனப்படும் Gulbarga Electricity Supply Company Limited (GESCOM) நிறுவனத்தின் மின் ஊழியரான மஞ்சுநாத்தை தாக்கிய அந்த நபரின் பெயர் சந்திரசேகர் ஹிரேமத். கடந்த 6 மாதங்களாக 9,000 ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டிய மின்கட்டண பாக்கியை செலுத்தாததால், மின்சார நிறுவன ஊழியர் சந்திரசேகரின் மின் இணைப்பைத் துண்டித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து மீண்டும் அவர் சட்ட விரோதமாக மின் இணைப்பை இணைத்துள்ளார். இதற்கு எதிராக மின் ஊழியர் மஞ்சுநாத் கேள்வி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மின் ஊழியரை தாக்கியுள்ளார். எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்” எனக் கூறியதாக வீடியோவில் இடம்பெற்று உள்ளது.
இதுகுறித்து இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தி, “கோப்பாலில் உள்ள குகனபள்ளியைச் சேர்ந்த சந்திரசேகர் ஹிரேமத், கெஸ்காம் ஊழியரான மஞ்சுநாத்தை, தனது மின் நிலுவைத் தொகையைக் கேட்டதற்கு தாக்கியுள்ளார். மேலும் இந்த சம்பவத்தை மஞ்சுநாத்தின் சக ஊழியர் ஒருவர், கேமராவில் பதிவு செய்து முனிராபாத் காவல் நிலையத்தில் சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது.” என்று கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அதில், மின்கட்டணம் செலுத்த மறுக்கும் பல சம்பவங்கள் கர்நாடகாவில் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக பெலகாவி கிராம மக்கள், கடந்த புதன்கிழமை மின் கட்டணம் செலுத்த மறுத்தனர். இலவச மின்சாரம் வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளதால், மின்மீட்டர்களை எடுத்துச் செல்லுமாறு அவர்கள் அதிகாரிகளை கேட்டுக் கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாகவும் கொப்பல், கலபுர்கி, சித்ரதுர்கா போன்ற மாவட்டங்களில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மின் கட்டணம் செலுத்த மறுத்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : சித்தராமையா தன்னை திராவிடர் என அழைக்கக் கூடாது எனக் கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !
முடிவு:
நம் தேடலில், கர்நாடகாவில் இலவச மின்சாரம் தருவதாகக் கூறி விட்டு, தற்போது மின் கட்டணம் செலுத்த சொல்வதால் மின் ஊழியரைத் தாக்கியதாகப் பரவும் வீடியோ தவறானது. வீடியோவில் தாக்குதலில் ஈடுபட்ட நபர் கடந்த 6 மாதங்களாக தான் செலுத்தாத 9,000 ரூ மின்கட்டணத்தை மின் ஊழியர் கேட்டதற்காகவே அவரை தாக்கியுள்ளார், கைதும் செய்யப்பட்டு உள்ளார் என்பதை அறிய முடிகிறது.