கர்நாடகாவில் இஸ்லாமியரின் கடைக்குள் புகுந்து கொலை செய்ய முயன்றதாக பரவும் தவறான வீடியோ !

பரவிய செய்தி
கர்நாடகவில் ஒரு இஸ்லாமிய கடையில் புகுந்து கொலை செய்ய முயன்ற இந்து தீவிரவாதியை அடித்து வெளுக்கும் காட்சி.
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடகா மாநிலத்தில் ஒரு இஸ்லாமியர் நடத்தி வந்த கடைக்குள் புகுந்து கொலை செய்ய முயன்ற இந்து மதத்தைச் சேர்ந்தவரை திருப்பி அடிக்கும் காட்சி என 34 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று ட்விட்டரில் பரப்பப்பட்டு வருகிறது.
கர்நாடகவில் ஒரு இஸ்லாமிய கடையில் புகுந்து கொலை செய்ய முயன்ற இந்து தீவிரவாதியை அடித்து வெளுக்கும் காட்சி pic.twitter.com/kRi2xQ0iCO
— BJP troll mafia ✴️✴️ (@bjptrollmafia35) March 25, 2022
பரப்பப்படும் சிசிடிவி வீடியோவில், கத்தி, கட்டை உள்ளிட்ட ஆயுதத்துடன் கடைக்குள் புகுந்து தாக்க வரும் நபரின் மீது பொருட்களை வீசி தடுக்க முயல்கின்றனர். பின்னர் சில இஸ்லாமியர்கள் கடைக்குள் இருந்து வெளியே வந்து அந்த நபரை தடுப்பதும், திருப்பி தாக்குவதும் இடம்பெற்று இருக்கிறது.
உண்மை என்ன ?
சிசிடிவி வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், மார்ச் 20-ம் தேதி நியூஸ் 18 குஜராத்தி இணையதளத்தில் இந்த சிசிடிவி காட்சியின் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியாகி இருக்கிறது.
செய்தியில், குஜராத் மாநிலம் சூரத்தின் பத்தேனாவில் உள்ள சலாபத்புரா பகுதியில் சமூக விரோதிகள் கடைக்காரர் மீது தாக்குதலை நடத்திய சம்பவம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடைக்காரர் ” தவணை ” முறையில் கொடுக்க மறுத்துவிட்ட காரணத்தினால் சம்பவம் நிகழ்ந்து உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கடைக்காரர் மீது தாக்குதலை நடத்தியவர் மீது புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், தாக்குதலை நடத்தியவர் எந்த மதம் என்றும், மதம் சார்ந்த மோதலா என்றோ செய்தியில் குறிப்பிடவில்லை.
இதுகுறித்து சலாபத்புரா காவல் நிலைய ஆய்வாளர், ” இந்த சம்பவம் மார்ச் 15-ம் தேதி நிகழ்ந்தது. சம்பவத்தில் தாக்குதல் நடத்தியவரும், கடைக்காரரும் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்களே ” என பூம்லைவ் இணையதளத்திற்கு தெரிவித்து இருக்கிறார்.
கடைக்குள்ளே அமைக்கப்பட்ட சிசிடிவி மூலம் எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோவும் யூடியூப் சேனல் ஒன்றில் சூரத் பகுதி எனக் குறிப்பிட்டே வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், கர்நாடகாவில் இஸ்லாமியர் கடைக்குள் புகுந்து கொலை செய்ய முயன்ற இந்து தீவிரவாதியை அடிக்கும் காட்சி எனப் பரவும் வீடியோ தவறானது. அந்த வீடியோ குஜராத் மாநிலம் சூரத்தில் எடுக்கப்பட்டது, தாக்கியவரும் இஸ்லாமியர் என்பதை அறிய முடிகிறது.