கர்நாடகாவில் சோனியா காந்தி உட்கார சொல்லாததால் கார்கே நிற்பதாக துக்ளக் குருமூர்த்தி பகிர்ந்த எடிட் வீடியோ !

பரவிய செய்தி
உட்காரலாமா அல்லது உட்காரக்கூடாதா.. சோனியா காந்தி தன்னிடம் உட்காரலாம் என்று சொல்ல மறந்துவிட்டாரா அல்லது உட்காரலாம் என்று சொல்லாமல் அவரைப் புறக்கணித்துவிட்டாரா என்று வியப்புடன் மல்லிகார்ஜுன கார்கே கைகளை பிசைகிறார்.
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடகா மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் மற்றும் பாஜக தரப்பில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இரு கட்சிகளுக்கு இடையே கடுமையான விமர்சனங்களும் முன் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகா பிரச்சாரத்திற்கு வந்த சோனியா காந்தி மேடையில் அருகே இருந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவமதித்ததாக 18 நொடிகள் கொண்ட வீடியோவை கர்நாடகா பாஜக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது.
To sit or not to sit.
A forlorn Mr @kharge wringing his hands, wondering whether Sonia Gandhi forgot to tell him he can sit or snubbed him by not telling him he could sit.pic.twitter.com/qTH0wEl7o0— Kanchan Gupta 🇮🇳 (@KanchanGupta) May 8, 2023
Three generations of the Gandhi family have consistently disrespected Karnataka and its leaders: Indira humiliated Nijalingappa, Rajiv demeaned Veerendra Patil, and now Sonia-Rahul belittle Mallikarjun Kharge. This cycle of unrelenting humiliation will end on 10th May. pic.twitter.com/MNxCceFyXU
— BJP Karnataka (@BJP4Karnataka) May 7, 2023
இந்த வீடியோவை ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த ஆலோசகரான கஞ்சன் குப்தா ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இவர் பதிவிட்ட பதிவை துக்ளக் குருமூர்த்தி ட்விட்டரில் பகிர்ந்து விமர்சித்து இருக்கிறார்.
உண்மை என்ன ?
2023 மே 6ம் தேதி கர்நாடகாவின் ஹுப்ளி பகுதியில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட பேரணியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றிய வீடியோ இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது.
மேற்காணும் வீடியோவில் 50வது நொடியில், அனைவரும் மேடைக்கு வந்த பிறகு யார் யாருக்கு எந்த இருக்கை என உதவியாளர்களிடம் பேசி கார்கே மற்றும் சோனியா காந்தி அமரும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.
இதற்கு அடுத்ததாக 22.34வது நிமிடத்தில் சோனியா காந்தி தனது உரையை முடித்து விட்டு இருக்கையில் அமர வருகையில் அனைவரும் எழுந்து நின்று கை தட்டும் போது எடுக்கப்பட்ட காட்சிகளே தற்போது சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
முழுமையான வீடியோவில் சோனியா காந்தி தனது உரையை முடித்து விட்டு இருக்கையில் அமர்ந்த பிறகு அருகே நிற்கும் மல்லிகார்ஜுன கார்கே அடுத்ததாக தனது உரையை பேச நடந்து செல்கிறார். ஆனால், வைரல் வீடியோவில் அந்த பகுதி நீக்கப்பட்டு அவர் சோனியா காந்தி அமர சொல்லாத காரணத்தினால் நிற்பதாக தவறாக பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : நெற்றியில் உள்ள குங்குமத்தை கார்கே துடைத்தால் இந்துமத வெறுப்பு.. இதையே அமித்ஷா, பாஜக முதல்வர்கள் செய்தால் ?
இதற்கு முன்பாக, கர்நாடகா தேர்தல் களத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் முன்பாக மல்லிகார்ஜுன கார்கே தனது நெற்றியில் உள்ள குங்குமத்தை துடைக்கும் காட்சியை பாஜகவினர் இந்துமத வெறுப்பு எனக் கூறி வைரல் செய்தனர். ஆனால், இதுபோன்ற செயல்களை பாஜக தலைவர்களும் செய்திருக்கும் நிகழ்வுகளை தொகுத்து கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : நாட்டுப்புற நடனம் ஆடிய கலெக்டர் எனத் தவறான தகவலைப் பகிர்ந்த துக்ளக் குருமூர்த்தி !
இதற்கு முன்பாக, ராஜஸ்தானின் கலெக்டர் நாட்டுப்புற நடனம் ஆடுவதாக தவறான தகவலை துக்ளக் குருமூர்த்தி பகிர்ந்து இருந்தது தொடர்பாகவும் கட்டுரை வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் சோனியா காந்தி உட்கார சொல்லாத காரணத்தினால் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நிற்பதாக பரப்பப்படும் வீடியோ தவறானது.
பிரச்சாரத்தின் முழுமையான வீடியோவில் சோனியா காந்தி தனது உரையை முடித்து விட்டு இருக்கையில் அமர்ந்த பிறகு அருகே நிற்கும் மல்லிகார்ஜுன கார்கே அடுத்ததாக தனது உரையை பேச நடந்து செல்கிறார். அவர் நடந்து செல்லும் காட்சியை நீக்கி விட்டு, அதற்கு முன்பாக இருந்த பகுதியை மட்டும் எடுத்து தவறாக பரப்பி உள்ளனர் என்பதை அறிய முடிகிறது.