This article is from Dec 22, 2018

கர்நாடகா கோயில் பிரசாதத்தில் விஷம் வைத்தது கிறிஸ்துவ பெண்ணா ? | உண்மை என்ன ?

பரவிய செய்தி

கர்நாடகாவில் கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்து 15 பேரைக் கொன்ற கிறிஸ்துவ பெண் கிரிப்டோ சில்வியா கைது.

மதிப்பீடு

சுருக்கம்

டிசம்பர் 14-ம் தேதி கர்நாடகாவின் மரம்மா இந்துக் கோயிலில் பக்தர்கள் உண்ட பிரசாதத்தில் விஷம் கலந்ததற்கு கோயில் ஜீயர் உள்பட நிர்வாகிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதில், அம்பிகா என்ற பெண் நிர்வாகி புகைப்படத்தை கிறிஸ்துவ பெண் என வதந்தி பரப்பியுள்ளனர்.

விளக்கம்

கர்நாடகாவின் சுல்வாண்டி கிராமத்தில் உள்ள கிச்குத் மரம்மா கோயிலில் டிசம்பர் 14-ம் தேதி பக்தர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரசாதத்தை உண்டதில் இரண்டு குழந்தைகள் உள்பட 15 பேர் உயரிழந்தனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், பிரசாதத்தை உண்ட காகங்களும் இறந்தன.

இந்நிலையில், பக்தர்களுக்கு அளித்த பிரசாதத்தில் விஷம் கலந்தது யார் என்ற விசாரணையில் உண்மைக் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், அந்த விவகாரத்தை வைத்து மதவெறியை உருவாக்கும் தவறான செய்தியை பரப்பி வருகின்றனர்.

கோவில் விசாரணையில் நிர்வாகி கிரிப்டோ சில்வியா என்ற கிறிஸ்துவ பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என வதந்தியைப் பரப்பியுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் கோவில் அறக்கட்டளையில் உள்ள மேனேஜரின் மனைவி அம்பிகா ஆவார்.

விஷம் வைக்க காரணம் என்ன ?

மரம்மா கோயில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அமைந்து உள்ளது. இக்கோயிலின் ஆண்டு வருமானம் 12 லட்சம் ஆகும். இக்கோயிலுக்கு என்று அறக்கட்டளை ஒன்று 2017-ல் உருவாக்கியுள்ளனர்.

” கோயில் அறக்கட்டளையில் உள்ள ஜூயர் இம்மாடி மகாதேவா சுவாமியின் (52) 1.5 கோடி மதிப்பிலான கோயிலின் கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு நிர்வாகியான சின்னாபி என்பவர் ஒப்புதல் அளிக்காமல் 75 லட்சத்தில் திட்டத்தை உருவாக்கி இம்மாடி மகாதேவா சுவாமியின் ஒப்புதல் இல்லாமலேயே பிற நிர்வாகிகள் உடன் பணிகளை துவங்கியதால் கோபமடைந்து உள்ளார் “.

தனிப்பட்ட காரணங்களால் சின்னாபி மீது கொண்ட கோபத்தில் ஜீயர் இம்மாடி மகாதேவா சுவாமி, தோட்டையா (அருகே உள்ள கோயிலின் அர்ச்சகர்), கோயில் மேனேஜர் மாதேஷா , மாதேஷாவின் மனைவி அம்பிகா உள்ளிட்டோர் இணைந்து பக்தர்களுக்கு அளித்த உணவில் பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்துள்ளனர். இதனால் சின்னாபி பெயர் கெட்டு அறக்கட்டளையில் இருந்து நீக்கப்படுவார் என எண்ணியுள்ளனர்.

இவை அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கோவில் நிர்வாகிகளே பக்தர்களுக்கு விஷத்தைக் கலந்துள்ளனர் என்பதே உண்மை.

கைது செய்யப்பட்ட அம்பிகா புகைப்படத்தை கிறிஸ்துவ பெண் என வீண் வதந்தியைப் பரப்பி மத வெறியை விதைக்கின்றனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader