This article is from Jul 28, 2019

கருணாநிதியின் கோபாலபுரம் வீடு அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டதா ?

பரவிய செய்தி

என் மறைவிற்கு பிறகு கோபாலபுரம் வீடு மருத்துவமனையாக மாற்றப்படும்..ஓ இதுவும் திமுக சொல்லும் பொய்களில் ஒன்றா ?

மதிப்பீடு

விளக்கம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரான மறைந்த மு.கருணாநிதி தாம் வாழ்ந்த கோபாலபுரம் வீட்டை தன் மறைவிற்கு பிறகு மருத்துவமனையாக மாற்றப்படும் எனத் தெரிவித்ததாகவும், ஆனால், கருணாநிதி இறந்து ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் இன்றுவரை கோபாலபுரம் வீடு மருத்துவமனையாக மாற்றப்படவில்லை என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பப்படுகிறது.

உண்மை என்ன ?

திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரம் வீட்டினை மக்களுக்கு பயன்படும் வகையில் மருத்துவமனையாக மாற்றப்படும் எனக் கூறியது குறித்து முதலில் தேடினோம்.

” 2010-ல் மு.கருணாநிதி உடைய 86- வது பிறந்தநாளின் பொழுது கோபாலபுரம் வீடு அன்னை அஞ்சுகம் என்ற அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. கருணாநிதி தயார் அஞ்சுகம் பெயரில் இயங்கும் அறக்கட்டளையின் மூலம் வீடானது ஏழை மக்களுக்காக இலவச மருத்துவமனையாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது ” .

2009 செப்டம்பரில் வெளியான ஹிந்து செய்தியில், ” 1968-ல் கருணாநிதி கோபாலபுரம் வீட்டினை தனது மகன்களான ஸ்டாலின், அழகிரி, தமிழரசு ஆகியோரின் பெயரில் பதிவு செய்து இருந்தார். 2009 ஜூலை-யில் கோபாலபுரம் வீட்டினை மருத்துவமனையாக மாற்றுவது தொடர்பான கருணாநிதி எடுத்த முடிவிற்காக வீட்டின் பத்திரத்தை அவரின் மகன்கள் ஒப்படைத்ததாக ” வெளியாகி இருக்கிறது.

இதன் பிறகு தாம் வாழ்ந்து வந்த கோபாலபுரம் வீட்டினை அன்னை அஞ்சுகம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக கருணாநிதி வழங்கியுள்ளார். அன்னை அஞ்சுகம் அறக்கட்டளைக்கு CavinKare CMD சி.கே ரெங்கநாதன், இயக்குனர் ராமநாராயணன், கவிஞர் வைரமுத்து மற்றும் திமுக எம்பியான ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் ஆகியோர் அறக்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எப்பொழுது மருத்துவமனையாகும் ?

கருணாநிதி கோபாலபுரம் வீட்டினை நன்கொடையாக வழங்கியும் ஏன் மருத்துவமனையாக மாற்றப்படவில்லை என்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால், வீட்டினை நன்கொடையாக வழங்கும் பொழுதே, கருணாநிதி மற்றும் அவரின் மனைவி தயாளு அம்மாள் மறைவிற்கு பிறகு கோபாலபுரம் வீடு ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் இலவச மருத்துவமனையாக மாற்றப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஜூன் 3, 2010-ல் கருணாநிதி தன் வீட்டினை அறக்கட்டளைக்கு எழுதிக் கொடுத்தது குறித்த செய்திகளும் ஹிந்து இணையதளத்தில் வெளியாகி இருக்கின்றன. அதில், அதனை குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

முடிவு :

திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரின் மனைவி தயாளு அம்மாள் ஆகிய இருவரின் மறைவிற்கு பிறகே கோபாலபுரம் வீடு அறக்கட்டளை மூலம் மக்களுக்கான மருத்துவமனையாக மாற்றப்படும் என தெரிவித்து இருக்கின்றனர்.

கூடுதல் தகவல் :

Archive link 

2021-ல் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவும் தற்போதைய சூழ்நிலையில், ” கருணாநிதி அவர்கள் தனது கோபாலபுரம் வீட்டை மருத்துவமனைக்காக தானமாக எழுதிக்கொடுத்தார். வீட்டை ஏன் இன்னும் அரசிடம் ஒப்படைக்க ஸ்டாலின் முன்வரவில்லை? ” என திமுக அரசு மீது மாரிதாஸ் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ஆனால், கருணாநிதி மற்றும் அவரின் மனைவி தயாளு அம்மாள் ஆகிய இருவரின் மறைவிற்கு பிறகே கோபாலபுரம் வீடு அறக்கட்டளை மூலம் மக்களுக்கான மருத்துவமனையாக மாற்றப்படும் எனும் தகவலை நாம் வெளியிட்டு இருந்தோம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader