மோகன் சி லாசரஸ் பிரச்சாரத்தை கருணாநிதி கேட்பதாகப் பரப்பப்படும் எடிட் வீடியோ!

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
We Support Maridhas எனும் முகநூல் பக்கத்தில், கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுவதை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய திமுகவினர் பலரும் அமர்ந்து கேட்பது போன்று அமைந்து இருக்கும் 31 நொடிகள் வீடியோ உடன் இதுதான் குடும்ப ஜெபக்கூட்டமா ? எனக் கூறியப் பதிவு ஒன்று சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ ஒரு லட்சம் பார்வையை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் தன்னுடைய சர்ச்சையான பேச்சால் கண்டனத்துக்கும், கிண்டலுக்கும் உள்ளானவர். சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்துக் கோவில்களை சாத்தான்களின் இருப்பிடம் எனக் கூறி கண்டனத்தை பெற்றார். அதுகுறித்து, நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : இந்து கோவில்கள் சாத்தான்களின் அரண் எனக் கூறிய கிறிஸ்தவ மத போதகரின் விளக்கம்
மேற்காணும் வீடியோவில், ” ஒரு மூட்டை விதை விதைச்சா அதற்கு ஏற்ற நெல் தான் கிடைக்கும். 10 மூட்டை விதை விதைச்சா அதற்கேற்ற அறுவடை கிடைக்கும். நீங்கள் வெறும் ஆயிரம் ரூபாய் காணிக்கை செலுத்தினால் அதற்கு ஏற்றப்படி தான் கர்த்தர் ஆசிர்வதிக்க முடியும். நீங்கள் தாராளமாய் கர்த்தருக்கு கொடுத்தால் உங்களை தாராளமாய் கர்த்தர் ஆசிர்வதிப்பார். இதுதான் வேதத்தின் ரகசியம். அதனால், இரண்டு மடங்காக ஆசிர்வதிக்கப்பட வேண்டும் என்றால் தாராளமாய் கொடுக்குறவங்களாக இருக்கனும். அப்போதான் கர்த்தர் ஆசிர்வதிக்க முடியும் ” எனப் பேசி இருக்கிறார்.
இப்படி மோகன் சி லாசரஸ் பேசுவதை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின், கனிமொழி என திமுக தலைவர்களே கேட்பது போன்று வீடியோவில் எடிட் செய்து இருக்கிறார்கள். ஏனெனில், லாசரஸ் பேசும் வீடியோவின் தரம் குறைவானதாகவும், திமுகவைச் சேர்ந்தவர்கள் இருக்கும் பகுதி தரம் அதிகமானதாகவும் இருக்கும் வித்தியாசம் தெரிகிறது.
மேலும், சில மாதங்களுக்கு முன்பாகவே மோகன் சி லாசரஸ் உடைய இத்தகைய பேச்சு சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கும், கிண்டலுக்கும் உள்ளாகி வைராகியது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 31 நொடிகள் கொண்ட வீடியோவை கீழே காணலாம்.
மோகன் சி லாசரஸ் பிரச்சாரத்தில் கருணாநிதி உள்ளிட்டோர் இடம்பெறுவதாக எடிட் செய்யப்பட்ட வீடியோவை Invid & Weverify மூலம் கீ ஃபிரேம்களாக பிரித்து எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில, 2017 ஜனவரி 5-ம் தேதி TMS MSV Kalaignar MGR Kamal and ALL Legends எனும் முகநூல் பக்கத்தில் வெளியான கவிஞர் வாலியின் உரையை கருணாநிதி உள்ளிட்ட திமுகவினர் கேட்கும் வீடியோவில் அக்குறிப்பிட்ட காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இதில், கருணாநிதிக்கு அருகே நடிகர் ரஜினிகாந்த் அமர்ந்து இருப்பதை காணலாம்.
கருணாநிதி அருகே நடிகர் ரஜினிகாந்த் அமர்ந்து இருப்பதை காண்பிக்காமல் தெளிவாய் கட் செய்து எடிட் செய்திருக்கிறார்கள். கருணாநிதி முன்னிலையில் கவிஞர் வாலி தலைமையில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா கருத்தரங்கத்தில் போது எடுக்கப்பட்ட வீடியோவை பயன்படுத்தி இருக்கிறார்கள். 2018-ல் கலைஞரிஸ்ட் எனும் முகநூல் பக்கத்தில் 1.25 மணி நேரம் கொண்ட முழு வீடியோ வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் உடைய பிரச்சாரத்தை கருணாநிதி உள்ளிட்ட திமுகவினர் கேட்பது போன்று வெளியிடப்பட்ட வீடியோ எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.