This article is from Sep 04, 2021

கருணாநிதி நீட்டை வாழ்த்தி கடிதம் எழுதியதாக பேசிய சீமான்.. உண்மை என்ன ?

பரவிய செய்தி

நீட்டை தேர்வை வரவேற்று வாழ்த்து கடிதம் எழுதினார் கலைஞர் கருணாநிதி – சீமான்

மதிப்பீடு

விளக்கம்

செப்டம்பர் 1-ம் தேதி வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவனின் புகழ் வணக்கம், தமிழ்த்தேசியப் போராளி ஐயா தமிழரசன் மற்றும் அனிதாவின் நினைவேந்தல் நிகழ்வின் போது சென்னை தலைமையகத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம்  நீட் தேர்விற்கு எதிராக கொன்டு வரப்படும் சட்டம் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கையில்(14.20நிமிடம்), ” நீட் தேர்வை கொண்டு வந்தது முதலில் காங்கிரஸ். அதற்கு கூட இருந்தவர்கள் இவர்கள்(திமுக). அப்போதே எதிர்க்கவில்லை. இரண்டாவது நீட்டை வாழ்த்தி வரவேற்று ஐயா கலைஞர் கடிதம் எழுதிட்டாங்க ” எனக் கூறி இருந்தார்.

Twitter link | Archive link 

சீமான் கூறியது உண்மையா, கருணாநிதி நீட் தேர்வை வாழ்த்தி கடிதம் எழுதினாரா என வாசகர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

காங்கிரஸ் ஆட்சியில் இந்திய அளவில் மருத்துவப் படிப்பிற்கு கொண்டு வரப்பட்ட பொது நுழைவுத் தேர்வை கருணாநிதி வரவேற்று கடிதம் எழுதியதாக எந்த செய்திகளும் கிடைக்கவில்லை. பொது நுழைவுத் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக 2010 முதல் வெளியான செய்திகளே கிடைத்தன.

2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி தி ஹிந்து செய்தியில், ” பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஒன்றிய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், இந்த நடவடிக்கையை அரசு ஏற்க முடியாது. நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்வதற்கான மாநில அரசின் முடிவின் காரணமாக, சமூக நீதி கொள்கை மற்றும் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் பெறும் நன்மைகள் அவர் மேற்கோள்காட்டினார் ” என கருணாநிதி எழுதிய கடிதம் குறித்து வெளியாகி இருக்கிறது.

2011 ஜனவரி 5-ம் தேதி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில், ” ஒன்றிய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத்துக்கு எழுதிய கடிதத்தில், முன்மொழியப்பட்டபடி மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்புகள் சேர்க்கைக்கான அகில இந்திய பொது நுழைவுத் தேர்வை நடத்தும் இந்த நடவடிக்கைக்கு தனது அரசு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ” எனக் கூறியதாக வெளியாகி இருக்கிறது.

சீமான் பேசியது குறித்து திமுகவின் செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டின் ரவீந்திரன் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசுகையில், ” கலைஞர் எழுதிய கடிதத்தை காண்பிக்க சொல்லுங்கள் பார்ப்போம். 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே குலாம்நபி ஆசாத் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கலைஞர் கடிதம் எழுதினார். நீங்கள் ஒரே நாடு ஒரே தேர்வு எனக் கொண்டு வந்தால் எங்கள் தமிழ்நாடு பாதிக்கும், 2007ம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் எந்த நுழைவு தேர்வும் கூடாது எனச் சட்டம் இயற்றினோம். இந்தியா முழுவதும் என்றால் நீங்கள் இடஒதுக்கீட்டை கடைப்பிடிக்க மாட்டீர்கள். அது எங்களுக்கு மிகப்பெரிய சிக்கலை உருவாக்கும் என கடிதத்தில் தெரிவித்து இருந்தார்.

2010 நவம்பரில் முரசொலியில் நுழைவுத் தேர்வு எந்த வடிவிலும் வரக்கூடாது என உடன்பிறப்புகளுக்கு கடிதமும் எழுதினார். அப்படி இருக்கையில், எப்படி நீட் தேர்வை அவர் வரவேற்பார். 2010 டிசம்பரில் பொது நுழைவுத் தேர்வு நடத்த மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியாவின் பரிந்துரை வந்தது. அப்போது, தேர்வு வேண்டாம் எனக் கூறும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். எனினும், உச்சநீதிமன்றம் சென்று 2011 ஜனவரியில் தமிழ்நாட்டிற்கு விலக்கு வாங்கினார் ” என விளக்கம் அளித்து இருந்தார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்தியைத் தொடர்பு கொண்டு பேசிய போது, அது குறித்து பின்னர் பேசுவதாக தெரிவித்தார். அவருடைய கருத்தை தெரிவித்த பிறகு அதையும் இணைக்கிறோம்.

காங்கிரஸ் ஆட்சியில் 2013-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி முதல் நீட் நடத்தப்பட்டது. 2013ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ம் தேதி நீட் தேர்விற்கு எதிரான 115 மனுக்களில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் நீட் தேர்வுக்கு தடை விதித்தது. 2016-ல் ஏப்ரல் 11-ம் தேதி நீட் தேர்விற்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை உச்சநீதிமன்றம் விலக்கியது. 2016-17 ஆண்டில் நீட் தேர்வு மூலம் மருத்துவ இடங்கள் நிரப்பப்படும் என குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று அவசர சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்தது.

2016 ஜூலை மாதம் நிரந்தரமாக நீட் தேர்வை நடத்துவதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அந்தாண்டு மட்டும் அவசரசட்டத்தின் அடிப்படையில் தமிழகம் உட்பட நீட் தேர்வில் விருப்பம் இல்லாத மாநிலங்கள் தங்கள் விருப்ப முறையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. தமிழகத்தில் நிரந்தர நீட் விலக்கு கோரப்பட்ட நிலையில் 2017-18ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டிலும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

முடிவு : 

நம் தேடலில், சீமான் கூறியது போல் கருணாநிதி நீட் தேர்வை ஆதரித்து வாழ்த்து கடிதம் எழுதியதாக எந்த தகவலும் இல்லை, 2010-ல் இருந்தே நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு வரக்கூடாது என கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்ததை செய்திகள் மற்றும் திமுக தரப்பு விளக்கத்தின் மூலம் அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader