This article is from Jun 28, 2020

” கசாயம் ” குடித்தால் கோவிட்-19ஐ குணப்படுத்த முடியுமா ?

பரவிய செய்தி

கொரோனா கசாயம், ஒரு லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் இந்த நான்கு பொருட்களை சேர்த்துக் கொள்ளவும். அரை மணி நேரம் கொதிக்க வைக்கவும். அது அரை லிட்டர் அளவிற்கு வரும். இந்த கொரோனா கசாயம் மிகவும் ஆற்றல்மிக்கது மற்றும் பயனுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் பூர்ண குணமான ஆங்கில மருத்துவரின் பரிந்துரை (அனைத்து வைரஸ் காய்ச்சலுக்கும் மருந்து).

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

கோவிட்-19 தொற்று பரவுவதற்கு முன்பிருந்தும், பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் போதும் கொரோனாவை விரட்டும் மருந்துகள் என பாரம்பரிய மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, அலோபதி போன்ற முறைகளில் பல மருந்துகளை சமூக வலைதளங்களில் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் பரப்பி வருகின்றனர்.

தற்போது மஞ்சள், கிராம்பு, எலுமிச்சை, இஞ்சி ஆகியவற்றைக் கொண்டு வீட்டில் தயாரிக்கும் ” கொரோனா கசாயம் ” ஆனது கொரோனா வருவதை தடுப்பதாகவும், வந்த பின்னும் குணப்படுத்துவதாக சமூக வலைதளத்தில் செய்முறையுடன் பரப்பி வருகிறார்கள்.

உண்மை என்ன ? 

கொரோனா கசாயம் பரிந்துரை செய்தது அலோபதி மருத்துவர் எனக் குறிப்பிட்டு உள்ளதால் அலோபதி மருத்துவர் பிரவீன் அவர்களை தொடர்புக் கொண்டு பேசுகையில், ” புதிது புதிதாக எதையாவது பரப்புகிறார்கள். எந்தவொரு அலோபதி மருத்துவரும் அதிகாரப்பூர்வமாக இப்படி பரிந்துரைத்திருக்க மாட்டார். சில கசாயங்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர் மற்றும் அலோபதி மருத்துவர்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள் ” எனத் தெரிவித்து இருந்தார்.

ஹோமியோபதி மருத்துவர் வித்யா அவர்களிடம் கேட்ட போது, ” இது செயல்படுகிறதா என்பதற்கு உறுதியான ஆதாரம் ஏதும் இல்லை. எது வேலை செய்யும் என நிச்சயமாக யாருக்கும் தெரியாது.. அலோபதி மருத்துவருக்கும் கூடத்தான். ஆனால், அனைவருமே சில கசாயங்களைக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால், இது பற்றி என்னால் கருத்து தெரிவிக்க இயலாது ” எனக் கூறி இருந்தார்.

கொரோனாவை மேற்கூறும் கசாயம் குணப்படுத்தும் எனக் கூறும் தகவல் தவறானது என நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. மாறாக, கசாயம் ஆனது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விசயமாக இருக்கும். அது கோவிட்-19 தொற்றை குணப்படுத்தும் மருந்து இல்லை. கோவிட்-19 தொற்றை குணப்படுத்தும் அலோபதி அல்லது பாரம்பரிய சிகிச்சை என எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

மார்ச் மாதம் ஆயுர்வேத மருத்துவர்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கசாயங்களை செய்து குடிக்குமாறு பரிந்துரை செய்தனர். கொரோனாவிற்கு மருந்துகள் இல்லாத இக்கட்டான சூழ்நிலையில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளும், உணவுகளுமே பயனளிக்கின்றன.

ஏப்ரல் மாதம் தமிழக அரசு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் பல கசாயங்களை பரிந்துரை செய்தது மற்றும் சென்னை போன்ற பகுதிகளில் கசாயங்களை வழங்கியும் வந்தது. ஆனால், எதுவும் குணப்படுத்தும் மருந்து அல்ல எனக் கூறினர். மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் ஆயுஷ் அமைச்சகமானது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி உள்ளிட்டவையில் மருந்துகளின் பட்டியலை வெளியிட்டு இருந்தது. அதேபோல், ஆர்செனிகம் அல்பம் எனும் ஹோமியோபதி மருந்தினை கோவிட்-19 தடுக்கும் மருந்தாக பரிந்துரை செய்தது. ஆனால், அந்த மருந்தின் செயல்திறனை குறிப்பிடும் எந்தவொரு ஆய்வும் வெளியாகவில்லை.

முடிவு : 

நம்முடைய தேடலில், கொரோனாவை குணப்படுத்தும் கசாயம் என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் தவறானது. எந்தவொரு அலோபதி மருத்துவரும் அப்படி பரிந்துரை செய்யவில்லை என நம்மால் அறிந்து கொள்ள முடிந்தது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader