காசியில் முஸ்லீம் வீடுகளை இடித்ததில் 45 பழங்கால கோவில்கள் வெளிவந்தனவா ?

பரவிய செய்தி
காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து கங்கா நதி வரை சாலையை அகலப்படுத்த 80 முஸ்லிம் வீடுகள் கையகப்படுத்தப்பட்டன. வீடுகள் இடிக்கப்பட்டபோது, வளாகத்திற்குள் 45 பழங்கால கோவில்கள் காணப்பட்டன. அவுரங்கசீப் பின்னர் அசல் காசி விஸ்வநாதர் கோயிலை பிரபலமற்ற கியான்வாபி மசூதியாக மாற்றி தனது சிறிய வீரர்களை இந்த சிறிய கோயில்களைச் சுற்றி கட்டி அவர்களின் வீடுகளைக் கட்டினார்.
மதிப்பீடு
விளக்கம்
கடந்த 2019-ம் ஆண்டில் பிரதமர் மோடியின் கனவு திட்டமான இந்தியாவின் பழமைவாய்ந்த வாரணாசி நகரில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில் இருந்து கங்கை நதியின் கரைக்கு செல்ல நேரடியாக பாதை அமைக்கும் காசி-விஸ்வநாதர் சாலை திட்டத்திற்காக அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் கையகப்படுத்தப்பட்டு இடிக்கப்பட்டன.
சாலை அமைக்கும் பணிக்காக இடிக்கப்பட்ட 80 முஸ்லீம் வீடுகளில் பழமையான இந்து கோவில்கள் கண்டெடுக்கப்பட்டதாக வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. பழமையான இந்துக் கோவில்களின் சிற்பங்கள், தூண்கள் அந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டு இருந்தன. மதம் சார்ந்த கருத்து என்பதாலும், பழமையான இந்து கோவில்கள் பல கண்டெடுக்கப்பட்டது என்பதாலும் வீடியோ குறித்த உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்மிக்க காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் எளிதாக கங்கை நதிக்கு செல்வதற்காக சாலை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதில், சுற்றியுள்ள பாதையை விரிவுபடுத்துவது மட்டுமின்றி கங்கையை சுற்றியுள்ள பகுதிகளை சீரமைப்பது, பக்தர்களுக்கு ஓய்வறைகள், அருங்காட்சியகம் உள்ளிட்டவை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கடந்த வருடம் மார்ச் 8-ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
அதற்கு முன்பாகவே, அப்பகுதியில் இருந்த வீடுகள் மற்றும் கடைகளை இடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு மக்கள் தரப்பில் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. எனினும், வீடுகள், கடைகள் கையகப்படுத்தப்பட்டு இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
2018 நவம்பர் 27-ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான செய்தியில், வாரணாசியில் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு நடுவே பழமையான கோவில் சிற்பங்கள் இருப்பதை புகைப்படத்துடன் வெளியிட்டு உள்ளனர். அது வைரலாகும் வீடியோவில் இருக்கும் சிற்பங்களை போலவே இருக்கிறது. 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முன்பே இந்திய தொல்பொருள் கணக்கெடுப்பு (ASI) ஆனது 43 கோவில்கள் அடையாளம் கண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லீம் வீடுகளா ?
இடிக்கப்பட்ட வீடுகளுக்கு உள்ளே பழங்கால கோவில்கள் இருந்ததால், அவை 80 முஸ்லீம் வீடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தவறாகப் பரப்பி உள்ளனர். இந்த வீடியோ கடந்த ஆண்டிலேயே இந்தியாவின் மற்ற பகுதிகளில் வைரலாகி உள்ளன.
இந்த சாலை விரிவாக்க திட்டத்திற்கான பணிக்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீ காசி விஸ்வநாதர் சிறப்பு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி விஷால் சிங் வைரல் வீடியோ குறித்து பிபிசி செய்திக்கு அளித்த தகவலில், ” இந்த சாலை விரிவாக்க திட்டத்திற்கு நாங்கள் கையகப்படுத்திய 249 வீடுகளும் இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களுடையது. அவற்றில் இதுவரை 183 வீடுகள் இடித்ததில் சிறியது முதல் பெரியது வரையில் மொத்தம் 23 கோவில்களை கண்டறிந்துள்ளோம். இந்த பகுதிக்கு அருகில் மசூதி ஒன்று உள்ளது. ஆனால் சாலை திட்டத்திற்காக முஸ்லீம் வீடுகள் இடிக்கப்படவில்லை ” எனக் கூறியுள்ளார்.
ஸ்ரீ காசி விஸ்வநாதர் சிறப்பு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில், மக்களிடம் இருந்து வாங்கப்பட்ட இடத்தின் விவரங்கள் குறித்தும், இழப்பீடு வழங்கப்பட்டது குறித்தும் தனித்தனி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கட்டிடங்களை இடிக்கும் பணிக்காக வீடு உள்ளிட்ட இடங்களை விலைக்கு வாங்கிய விவரங்களில் பட்டியலில் ஒரு முஸ்லீம் பெயர் கூற இடம்பெறவில்லை. அனைவரும் இந்துக்களே.
அடுத்ததாக, வணிக கடைகளை வைத்திருந்த வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகை குறித்த பட்டியலையும் வெளியிட்டு உள்ளார்கள். அதேபோல், முஸ்லீம் வீடுகளில் இருந்து கோவில்கள் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகளில் எங்கும் வெளியாகவில்லை.
வாரணாசியில் அரசின் திட்டத்திற்கு வீடுகளை இடிக்கும் பணிக்கு எதிர்ப்புகள் இருந்தது என்பது உண்மையே. அங்குள்ள இந்து மக்கள் வீடுகளை இடிப்பதற்கு எதிராக போராடியதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
நமக்கு கிடைத்த தகவலில் இருந்து, கடந்த 2018-ல் வாரணாசியில் காசி-விஸ்வநாதர் கோவில் முதல் கங்கை கரைக்கு சாலை அமைக்கும் திட்டத்திற்கு வீடுகளை இடிக்கும் பணியின் பொழுது வீடுகளுக்கு நடுவே இருந்த 43 கோவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் கூறியுள்ளது செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
ஆனால், 80 முஸ்லீம் வீடுகளில் இருந்து பழங்கால கோவில்கள் கண்டெடுக்கப்பட்டதாக கூறுவது தவறான தகவல். திட்டத்திற்காக அரசு விலைக்கு வாங்கிய இடம் அனைத்தும் இந்துக்களுக்கு சொந்தமானது.