This article is from Feb 17, 2018

குற்றவாளிக்கு ஆதரவான பேரணிக்கு அமைச்சர்களை அனுப்பிய பாஜக தலைமை ?

பரவிய செய்தி

பாஜக தலைமையின் அறிவுறுத்தலின் பெயரில்தான் சிறுமி ஆஷிஃபா வழக்கின் குற்றவாளிக்கு ஆதரவான பேரணியில் கலந்து கொண்டோம் என்று பாஜக அமைச்சர் சுந்தர் பிரகாஷ் கங்கா கூறியுள்ளார்.

மதிப்பீடு

விளக்கம்

காஷ்மீரில் கதுவா பகுதியில் கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சிறுமி ஆஷிஃபாவின் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து,  நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையில், ஹிந்து ஏக்தா மன்ச் என்ற ஹிந்து அமைப்பு குற்றவாளிகளில் ஒருவரான சிறப்பு போலீஸ் அதிகாரிதீபக் கஜுரியாவை விடுதலை செய்யவும், வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி குற்றவாளிக்கு ஆதரவாக பேரணியை நடத்தினர்.

குற்றவாளிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் ஜம்மு-காஷ்மீரின் பாஜக அமைச்சர்கள் சுந்தர் பிரகாஷ் கங்கா மற்றும் லால் சிங் ஆகியோர் கலந்து கொண்டது மிகப்பெரிய சர்ச்சையையும், கண்டனங்களையும் உருவாக்கியது. இந்த சம்பவம் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்ததால் அமைச்சர்கள் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், ராஜினாமா செய்த அமைச்சர் சுந்தர் பிரகாஷ் கங்கா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “ பாஜக கட்சியின் தலைமையின் பெயரில்தான் பேரணியில் கலந்து கொண்டதாகக் ” கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“ கட்சியின் தலைமையின் கட்டளை பெயரில் நாங்கள் பேரணிக்கு சென்றோம். ஜம்மு-காஷ்மீரின் பாஜக தலைவர் சாட் ஷர்மா எங்களை அங்கு அனுப்பினர் ” என்று சுந்தர் பிரகாஷ் கங்கா தெரிவித்துள்ளார்.

அங்குள்ள மக்களுக்கு குற்றப் புலனாய்வு அதிகாரிகளின் விசாரணையில் நம்பிக்கை இல்லை, எனவே விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரியதாக அமைச்சர் கங்கா கூறியுள்ளார்.

“  கதுவா சிறுமி வழக்கில் பேரணியில் கலந்து கொண்டதற்கு காரணம் சி.பி.ஐ விசாரணை அமைக்க வேண்டும் என்றே. அரசியல் அதிகாரத்திற்காக இல்லை. என்னை ராஜினாமா செய்ய யாரும் அழுத்தம் தரவில்லை. என் விருப்பத்தின் பெயரில் ராஜினாமா செய்கின்றேன். என்னுடைய ராஜினாமா கட்சியின் பெயரை காப்பாற்றும் என்றால், அந்த தியாகத்தை செய்ய தயார் ” என்று கூறியுள்ளார்.

ஆஷிஃபா சிறுமி வழக்கில் பாஜக குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருப்பதாக நாடெங்கிலும் குற்றச்சாட்டு எழும் இந்நேரத்தில், மேலிடம் தனது இரு அமைச்சர்களை குற்றவாளிக்கு ஆதரவான பேரணியில் கலந்து கொள்ள கூறியாக அமைச்சர் கூறியது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியே அனுப்பியது என்று கூறியுள்ளது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. இங்கு பாஜகவினரும் இதை திசை திருப்பும் விதமாக எழுதியும் பேசியும் வருவதின் நோக்கம்தான் என்ன ?

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader