இன்றுவரை காஷ்மீர் மக்களுக்கு மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாக பொய் தகவலைப் பதிவிட்ட இந்து மக்கள் கட்சி!

பரவிய செய்தி

சுதந்திரம் அடைந்ததிலிருந்து காஷ்மீரில் மின்சாரம் இலவசம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இனி அப்படி இல்லை…!!

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து 70 ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீரில் உள்ள மக்களுக்கு மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா என இந்து மக்கள் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர்.

மேலும், ” சுதந்திரம் அடைந்ததில் இருந்து காஷ்மீர் மக்கள் மின்சாரத்தை இலவசமாக பெற்று வருகின்றனர். இனி கட்டணம் செலுத்தி மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா ” கூறியதாக சமயம் தமிழ் செய்தியில் வெளியாகி இருக்கிறது .

Archive link 

இதையடுத்து, காஷ்மீர் மக்களுக்கு 70 ஆண்டுகளாக இலவச மின்சாரம் கொடுக்கப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை என்ன ? 

காஷ்மீர் மக்களுக்கு மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறதா என மின்சாரம் விநியோகம் செய்யும் அமைப்பான காஷ்மீர் மின் விநியோகம் கார்ப்பரேசன் லிமிடெட் இணையதளத்தில் தேடிப்பார்க்கையில், ” குடியிருப்பு வாசிகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு விலை நிர்ணயம் செய்து இருப்பதை பார்க்க முடிந்தது. Tariff Order Distribution 2007-08 ஆவணத்தின்படி, 100 யூனிட் வரை ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.1.15 விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது ” என அறிய முடிந்தது.

துணைநிலை ஆளுநர் பேசியது என்ன ? 
.
ஜூன் 23-ம் தேதி Excelsior News எனும் சேனலில், ” மின்சாரக் கட்டணங்களை செலுத்தாதது குற்றமாகும் ” என்ற தலைப்பில் காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் பேசிய வீடியோ வெளியாகி இருக்கிறது.
வீடியோவில், ” மின்சாரக் கட்டணம் செலுத்த தயாராக இல்லாதவர்களுக்கு இனி மின்சாரம் கிடைக்காது என்றே பேசியுள்ளார். அவரின் உரையில் காஷ்மீரிகள் என நேரடியாகக் குறிப்பிடவில்லை. கட்டணம் செலுத்தாதவர்களையே தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார் “.
.
ஆனால், துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா, இனி கட்டணம் செலுத்தியே மின்சாரம் பயன்படுத்த வேண்டும். காஷ்மீரில் தற்போதுவரை இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக சில இணையதள பக்கங்கள் வெளியிடவே அது வைரலாகத் தொடங்கி இருக்கிறது.
.
காஷ்மீரில் மின்சாரம் இலவசமாக வழங்கப்படவில்லை. காஷ்மீர் பள்ளதாக்கில் உள்ள குறிப்பிட்ட அளவிலான குடியிருப்பு வாசிகள் மின் கட்டணத்தை செலுத்துவதில்லை என்கிற பிரச்சனை அங்கு இருக்கிறது.
மேலும், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் மின் விநியோகம் செய்தும் மின் கழகம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. நஷ்டத்தை சமாளிக்க கடந்த மே மாதம், ஜம்மு & காஷ்மீர் மின் விநியோக கழகம் மின்கட்டணத்தை உயர்த்த பரிந்துரைத்து உள்ளதாக செய்தியில் வெளியாகி இருந்தது. இந்நிலையில், துணை நிலை ஆளுநர் மின் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு மின்சாரம் இல்லை எனப் பேசியுள்ளார்.
.

முடிவு : 

நம் தேடலில், சுதந்திரம் அடைந்ததில் இருந்து காஷ்மீர் மக்கள் மின்சாரத்தை இலவசமாக பெற்று வருகின்றனர் எனப் பரவும் தகவல் மற்றும் செய்திகள் தவறானது. ஜம்மு காஷ்மீரில் மின்சாரம் இலவசம் அல்ல, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின் கட்டணம் செலுத்தாதவர்களுக்கே மின்சாரம் இல்லை என ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் பேசியுள்ளார் என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader