ராகுலிடம் பெண் ஒருவர் காஷ்மீரின் நிலைப் பற்றி பேசியதை, மோடிக்கு ஆதரவாகப் பேசியதாக வதந்தி பரப்பும் பாஜகவினர் !

பரவிய செய்தி

அலறிய ராகுல் காந்தி ! வெளிநாடுகளில் வாழும் காஷ்மீரி இந்துக்கள் விமானத்தில் பயணம் செய்யும் போது ராகுல் காந்தியை சூழ்ந்து காஷ்மீர் பிரச்சனைகளில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை எதிர்க்கிறார் என சரமாரி கேள்வி கேட்டு அதிரடி !

மதிப்பீடு

விளக்கம்

வெளிநாட்டு வாழ் காஷ்மீரி இந்துக்கள் விமானத்தில் சென்ற ராகுல் காந்தியை சூழ்ந்து கொண்டு காஷ்மீர் விவகாரத்தில் மோடியை ஏன் எதிர்க்கிறீர்கள் என கேள்விக் கேட்டதாக விமானத்தில் எடுக்கப்பட்ட 30 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பாஜகவினர் மற்றும் வலதுசாரி பக்கங்கள் வைரல் செய்து வருகின்றனர்.

Advertisement

Archive link 

Advertisement

உண்மை என்ன ? 

பாஜகவினர் வைரல் செய்யும் வீடியோ குறித்து தேடுகையில், ” காஷ்மீரில் குழந்தைகள் கூட வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்று ராகுல் காந்தியிடம் பெண் ஒருவர் விமானத்தில் கண்ணீருடன் கூறியுள்ளார் ” என 2019 ஆகஸ்ட் 25-ம் தேதி ஸ்க்ரோல் இணையதளத்தில் வீடியோ உடன் செய்தி வெளியாகி இருக்கிறது.

” 2019 ஆகஸ்ட் 24-ம் தேதி ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு ஸ்ரீநகருக்கு சென்ற போது பாதுகாப்பு காரணங்களால் ஸ்ரீநகர் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை, திருப்பி அனுப்பப்பட்டனர். டெல்லிக்கு திரும்பும் விமானத்தில், பெண் ஒருவர் காஷ்மீரிகளின் துயரத்தை விவரித்து ராகுல் காந்தியிடம் பேசி உள்ளார்.

” சிறு குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவதில்லை. என் தம்பி இதய நோயாளி. எல்லா வகையிலும் நாங்கள் மன அழுத்தத்தில் உள்ளோம் ” என அந்த பெண் கிட்டத்தட்ட கண்ணீர் விடும் நிலையில் பேசியுள்ளார். பாதுகாப்பில் இருந்தவர்கள் அவரைப் பேசவிடாமல் தடுக்க முயன்ற போது ராகுல் காந்தி அவரது கையைப் பிடித்துக் கொண்டு பேசுவதைக் கேட்டுக் கொண்டார் ” என செய்தியில் வெளியாகி இருக்கிறது.

நியூஸ் 18 சேனலின் பத்திரிகையாளர் அருண் குமார் சிங் என்பவர் ட்விட்டரில் பதிவிட்ட இவ்வீடியோவை காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பகிர்ந்து, ” இது இன்னும் எவ்வளவு காலம் தொடரப் போகிறது .? தேசியம் என்ற பெயரில் மௌனமாக்கப்படும் நசுக்கப்படும் கோடிக்கணக்கான மக்களில் இவரும் ஒருவர்.

Twitter link | Archive link  

காஷ்மீர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் ” அரசியல் ” ஆக்குவதாக குற்றம் சாட்டுபவர்களுக்கு : காஷ்மீரில் நடக்கும் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் முடக்குவதை விட ” அரசியல் ” மற்றும் ” தேச விரோதம் ” ஏதுவும் இல்லை. அதற்கு எதிராக குரல் எழுப்புவது நம் ஒவ்வொருவரின் கடமை, அதை நிறுத்த மாட்டோம் ” எனப் பதிவிட்டு இருக்கிறார்.

2019 ஆகஸ்ட் 5-ம்தேதி ஜம்மு காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு அங்கு அமலில் இருந்த பொதுமுடக்கத்தால் மக்கள் பாதிக்கப்படும் சூழல் குறித்து விமானத்தில் அப்பெண் ராகுல் காந்தியிடம் பேசியுள்ளார்.

முடிவு : 

நம் தேடலில், வெளிநாடுகளில் வாழும் காஷ்மீரி இந்துக்கள் விமானத்தில் பயணம் செய்யும் போது ராகுல் காந்தியை சூழ்ந்து காஷ்மீர் பிரச்சனைகளில் பிரதமர் நரேந்திர மோடியை ஏன் எதிர்க்கிறார் என சரமாரி கேள்வி கேட்டதாகப் பாஜகவினர் வீடியோ உடன் பரப்பும் தகவல் வதந்தியே.

அந்த வீடியோ கடந்த 2019-ல் ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்ட சமயத்தில் எம்.பி ராகுல் காந்தி ஸ்ரீநகருக்கு சென்று திரும்பிய போது விமானத்தில் எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button