This article is from Feb 06, 2022

காஷ்மீர் சென்று பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோசமிட்ட இஸ்லாமியர்களை போலீஸ் தாக்கிய வீடியோவா ?

பரவிய செய்தி

ராஜஸ்தானில் இருந்து காஷ்மீர்க்கு சென்ற இஸ்லாமிய இளைஞர்கள். அங்கு சென்று “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று கோஷம் எழுப்பி இருக்கிறார்கள்.பழைய காஷ்மீர் என்று நினைத்து இருப்பார்கள் போல,அங்கு நடப்பது மத்திய அரசின் நேரடி கட்டுபாட்டில் உள்ள கவர்னர் ஆட்சி.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

பாஜக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் ஆளுநர் ஆட்சியில் உள்ள ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சென்ற இஸ்லாமிய இளைஞர்கள் அங்கு ” பாகிஸ்தான் ஜிந்தாபாத் ” எனும் கோசத்தை எழுப்பியதால் காவல்துறை சிறப்பாக கவனித்ததாக இளைஞர்களை காவலர்கள் தாக்கும் 30 நொடிகள் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் வீடியோவில் இருந்து கீப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2021 பிப்ரவரி 25-ம் தேதி ” பிபிசி இந்தி ” செய்தியில், ” கடந்த ஆண்டு டெல்லி வன்முறையில் தாக்கப்பட்ட மற்றும் தேசியக் கீதத்தை பாட சொல்லி காவலர்களால் தாக்கப்பட்டவர்களின் நிலைமை என்ன ?” என  வைரல் வீடியோ குறித்து வெளியாகி வீடியோவின் தொடக்கத்தில் இப்பகுதி இடம்பெற்று இருக்கிறது.

2020 டெல்லி கலவரத்தின் போது 5 இளைஞர்கள் சாலையில் தாக்கப்பட்ட நிலையில் இருக்கும் போது தேசிய கீதம் பாட சொல்லி காவலர்கள் தாக்கும் வீடியோ வைரலாகியது. காவலர்கள் சிலர் லத்தியைக் கொண்டு நன்றாக பாடு எனக் கூறிக் கொண்டே அடிப்பது வீடியோவில் இடம்பெற்று இருக்கிறது.

காவலர்களால் தாக்கப்பட்ட 23 வயதான ஃபைசான் என்ற இளைஞர் இச்சம்பவம் நிகழ்ந்து 3 நாட்களுக்கு பிறகு பிப்ரவரி 27-ம் தேதி டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் உயிரிழந்தார். காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட தன்னுடைய மகனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாக ஃபைசான் உடைய தாய் குற்றம்சாட்டியதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காஷ்மீர் சென்ற இளைஞர்கள் பாகிஸ்தான் ஆதரவு கோசத்தை எழுப்பியதால் பாதுகாப்புப்படை வீரர்கள் தாக்கியதாக சமீபத்திய செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.

முடிவு :

நம் தேடலில், 2020 டெல்லி கலவரத்தின் போது இஸ்லாமிய இளைஞர்களை காவலர்கள் தாக்கியதோடு, தேசிய கீதம் பாடச் சொல்லித் தாக்கும் வீடியோவை தற்போது காஷ்மீரில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோசம் எழுப்பியவர்களை காவலர்கள் தாக்கியதாகக் கூறி தவறாக பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader