This article is from Nov 01, 2019

காஷ்மீர் முஸ்லீம்களை போலீஸ் அடித்து விரட்டுவதாக பரவும் வீடியோ ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி

இந்திய காவல்துறையால் தாக்கப்படும் காஷ்மீர் முஸ்லீம்கள்.

மதிப்பீடு

விளக்கம்

” இந்திய காவல்துறை காஷ்மீர் முஸ்லீம்களை தாக்கும் காட்சிகள் ” என்ற வாக்கியத்துடன் ஒரு பகுதியில் கூடி இருக்கும் மக்களை காவலர்கள் அடித்து வாகனத்தில் ஏற்றும் காட்சிகளை கொண்ட வீடியோ Hummayu Basharat என்ற முகநூல் பக்கத்தில் அக்டோபர் 27-ம் தேதி பதிவாகி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள், 11 ஆயிரம் ஷேர்களை கடந்து வைரலாகி வருகிறது.

Facebook post archived link 

இந்த பதிவை Waseem muhamaad என்பவர் I Support Seeman NTK என்ற முகநூல் குழுவில் பகிர்ந்து உள்ளார். அந்த பகிர்வும் நூற்றுக்கணக்கான ஷேர்களை பெற்று வருகிறது. இந்த வீடியோ பிற இந்திய மாநிலங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.

உண்மை என்ன ?

காஷ்மீரில் உள்ள முஸ்லீம்கள் காவல்துறையால் தாக்கப்படுவதாக பகிரப்பட்டு வரும் வீடியோ குறித்து விரிவான தேடலில் , யூட்யூப் தளத்தில் 2017-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி Daily Excelsior சேனல் ” Protesting against eviction Gujjars block Lal Singh’s residence with livestock ” எனும் தலைப்பில் வைரலாகும் வீடியோவின் முழு காட்சிகளும் வெளியிட்டு இருக்கிறது.

Youtube video archived link  

2017-ல் குஜ்ஜார் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் ஜம்மு காஷ்மீரின் வனத்துறை அமைச்சர் செளத்ரி லால் சிங்கின் இல்லத்திற்கு வெளியே , ஜம்முவில் உள்ள மக்களை குறிப்பாக அவர்களின் பழங்குடியினரை வனப்பகுதியில் இருந்து வெளியேற்றுவதை எதிர்த்து போராட்டத்தை நடத்தி உள்ளனர்.

Jammu links news archived link 

குஜ்ஜார் சமூக மக்களின் போராட்டங்கள் குறித்து தேடிய பொழுது 2017-ல்  ” Jammu links news ” உடைய முகநூலில் முழு வீடியோவும் பதிவாகி இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் வனத்துறை அமைச்சர் சிங் மூலம் வனப்பகுதியில் வசிக்கும் குஜ்ஜார் சமூக மக்களில் சிலர் வெளியேற்றப்படுவதாக கூறி அமைச்சரின் வீட்டின் முன்பாக கால்நடைகள் உடன் போராட்டத்தை மேற்கொண்டு உள்ளனர். அவர்களை போலீசார் தாக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தும் காட்சிகளை வீடியோவில் காணலாம்.

நம்முடைய தேடலில்,  2017-ல் வெளியான வீடியோவில் 0.14 நொடியில் இருந்து இடம்பெறும் காட்சிகளை எடுத்து தற்பொழுது பகிர்ந்து வருகின்றனர்.

2017-ல் குஜ்ஜார் சமூக மக்கள் நடத்திய போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்பொழுது தவறாக பகிர்ந்து வருகிறார்கள் என்பதை அறிந்து கொண்டு இருப்பீர்கள். உண்மையான செய்திகளை அறிந்து, அச்செய்திகள் மக்களிடம் செல்ல துணையாய் இருங்கள்.

Please complete the required fields.




Back to top button
loader