காஷ்மீரில் போராட்டம் வெடித்ததாக பரவும் வீடியோ|உண்மை என்ன ?

பரவிய செய்தி
தேன் கூட்டத்தில் கை வைத்த பிஜேபி. காஷ்மீரில் போராட்டம் வெடித்தது.
மதிப்பீடு
விளக்கம்
காஷ்மீர் மாநிலத்தின் சட்டப்பிரிவு 370 திரும்பப் பெற்ற தீர்மானத்திற்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்புமான பதிவுகளை அதிகம் காண முடிகிறது. இந்நிலையில், இந்திய அரசின் தீர்மானத்தால் ஜம்மு காஷ்மீர் பகுதியில் போராட்டம் வெடித்து உள்ளதாக முகநூலில் ஓர் வீடியோ வைரலாகி வருகிறது.
javeth nahur என்பவரின் முகநூல் பக்கத்தில் ” புரட்சியின் வித்துக்கள் வெடிக்க துவங்கியது ” என பதிவிட்ட காஷ்மீரில் போராட்டம் நடைபெறும் வீடியோ பதிவு 11 ஆயிரம் பார்வை மற்றும் ஆயிரக்கணக்காக ஷேர்களை பெற்று தொடர்ந்து வைரலாகி வருகிறது.
இதேபோன்று, முக வை முகைதீன் என்ற முகநூல் கணக்கில் “தேன் கூட்டத்தில் கை வைத்த பிஜேபி. காஷ்மீரில் போராட்டம் வெடித்தது ” என இதே வீடியோ பதிவிடப்பட்டது. அந்த வீடியோவில் மாணவிகள் கோஷங்களை எழுப்புவதும், மாணவர்கள் கற்களை வீசுவதும், பாதுகாப்பு வீரர்கள் கண்ணீர் குண்டுகளை வீசுவதும் பதிவாகி இருந்தது.
காஷ்மீரில் போராட்டம் தொடங்கி உள்ளதாக 2 நிமிட வீடியோ முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகத் துவங்கியுள்ளது. அந்த பதிவில் கூறியதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தோம்.
காஷ்மீரில் வன்முறை, கலவரம் உருவாகியதாக என தேடுகையில், முதன்மை செய்தி ஊடகமான பிபிசி-யில் காஷ்மீர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக கல்லெறி சம்பவங்கள் நடந்து வருவதாக ஆகஸ்ட் 7-ம் தேதி வெளியாகி இருக்கிறது. எனினும், முகநூலில் வைரலாகும் வீடியோ செய்தியில் இடம்பெறவில்லை.
வைரலாகும் வீடியோவை தெளிவாய் பார்க்கும் பொழுது, அதில் ” Rising Kashmir ” எனும் பெயர் மற்றும் ” Students of secondary school rehmoo, pulwama ” என்றும் இடம்பெற்று இருந்தது. Rising Kashmir பெயரை வைத்து வீடியோ தளமான ” யூட்யூப் ” -ல் தேடுகையில் Rising Kashmir யூட்யூப் சேனலை காண முடிந்தது.
அதில், 2017 ஏப்ரல் 17-ம் தேதி ” Student protests rock Kashmir valley ” என்ற தலைப்பில் சமீபத்திய வைரலாகும் வீடியோவின் முழு நீள வீடியோவும் பதிவாகியுள்ளது. 2017 ஏப்ரல் மாதத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தெருக்களில் பாதுகாப்பு படையினர் மீது கற்களை எறிந்த சம்பவங்கள், வன்முறை சம்பவங்கள் குறித்து செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
முடிவு :
நமக்கு கிடைத்த ஆதாரங்களின் படி, காஷ்மீரில் போராட்டம் வெடித்ததாக முகநூலில் பரவி வரும் வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவம் என்பதையும், தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.