காசி ரத்னேஸ்வர் சாய்ந்த ஆலயம் பைசா கோபுரத்தை விட உயரமானதா ?

பரவிய செய்தி

4 டிகிரி அளவுக்கு சாய்ந்துள்ள பைசா கோபுரம் உலக அதிசயம் என்றால் ஆயிரம் வருடங்களுக்கு மேல். காசி மாநகர மணிகர்ணிகா படித்துறை அருகே உள்ள இந்த ரத்னேஸ்வர் ஆலயம் 9 டிகிரி சாய்ந்துள்ளது. இதன் உயரம் 74 மீட்டர். பைசா கோபுரத்தின் உயரம் 54 மீட்டர் தான். இந்த ரகசியத்தை உலகம் அறிய வேண்டியது அவசியம் தானே..?

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

உலக அதிசயங்களில் ஒன்றான பைசா சாய்ந்த கோபுரம் 4 டிகிரி அளவிற்கு மட்டுமே சாய்ந்துள்ளது, ஆனால் காசி மாநகர மணிகர்ணிகா படித்துறை அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உள்ள ரத்னேஸ்வர் ஆலயம் 9 டிகிரி சாய்ந்துள்ளது. இதன் உயரம் 74 மீட்டர், பைசா கோபுரத்தின் உயரம் 54 மீட்டர் மட்டுமே என இரு கோபுரத்தையும் ஒப்பிட்டு ஓர் தகவல் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

உண்மை என்ன ? 

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நதிக்கரையில் அமைந்து இருக்கும் ரத்னேஸ்வர் ஆலயம் அதிக அளவில் பைசா கோபுரத்துடன் ஒப்பிட்டு பகிரப்பட்டு வருவதுண்டு. பைசா கோபுரம் 4 டிகிரி அளவிற்கு மட்டுமே சாய்ந்துள்ளது, ரத்னேஸ்வர் ஆலயம் 9 டிகிரி வரை சாய்ந்து நிற்கிறது என்பதே அதற்கு காரணம். எனினும், கூடுதலாக சில தவறான தகவல்களும் இணைக்கப்பட்டே பகிரப்பட்டு வருகிறது.

நதிக்கரையில் மூழ்கியபடி காணப்படும் சிவலிங்கத்தை கொண்டிருக்கும் ரத்னேஸ்வர் ஆலயம் எனும் இக்கோவில் கட்டப்பட்ட ஆண்டு யாருக்கும் உறுதியாக தெரியவில்லை. ” காசி கார்வத் ” என அழைக்கப்படும் இக்கோவில் 500 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டதாக கதைகளின் வழியாக மக்கள் நம்புகின்றனர். சமாச்சார்லைவ் எனும் இணையதளத்தில் 19ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்டதாகவும், யாரால் கட்டப்பட்டது எனத் தெரியவில்லை கூறப்பட்டுள்ளது.

” 1860-க்கு முன்பாக கோவில் நேராக நின்றதாகவும், எடை காரணமாக கோவில் பின்னோக்கி சாய்ந்ததாக கதைகள் கூறுகின்றன. எனினும், சரியான காரணங்கள் அடையாளம் காணப்படவில்லை ” என டைம்ஸ்நவ் செய்தியின் ஆன்மீக பிரிவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

வைரல் பதிவுகளில் கூறுவது போன்று கோவிலின் உயரம் 74 மீட்டர் அல்ல, அதன் உயரம் தோராயமாக 13-14 மீட்டர் மட்டுமே. ஆக, பைசா சாய்ந்த கோபுரத்தை விட காசி ரத்னேஸ்வர் ஆலயம் உயரமானது அல்ல.

இத்தாலியில் உள்ள உலகப் புகழ்பெற்ற நினைவுச்சின்னமான பைசா சாய்ந்த கோபுரத்தின் கட்டுமானம் 1173 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 200 ஆண்டுகளுக்கு பிறகு கட்டி முடிக்கப்பட்டது. எனினும், கோபுரம் சாய்வதை அறிந்த கட்டுமானம் நிபுணர்கள் பல நூற்றாண்டுகளாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பைசா கோபுரத்தின் உயரம் 57 மீட்டர். 1990களில் கட்டுமான நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் கோபுரத்தின் சாய்வு நிலை 3.99 டிகிரி அளவிற்கு குறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முடிவு : 

நம் தேடலில், உலக அதிசயமான பைசா கோபுரம் 4 டிகிரி அளவிற்கு சாய்ந்துள்ளது மற்றும் காசி மாநகர மணிகர்ணிகா படித்துறை அருகே உள்ள ரத்னேஸ்வர் ஆலயம் 9 டிகிரி சாய்ந்துள்ளது எனக் கூறும் தகவல் மட்டுமே உண்மை.

54 மீட்டர் உயரம் கொண்ட பைசா கோபுரத்தை விட ரத்னேஸ்வர் ஆலயம் உயரமானது என்றும், அதன் உயரம் 74 மீட்டர் எனக் கூறும் தகவல் தவறானது. ரத்னேஸ்வர் ஆலயத்தின் உயரம் 13-14 மீட்டர் மட்டுமே. மேலும், இக்கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது அல்ல என அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button