பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பாஜக ?

பரவிய செய்தி
ஜம்மு-காஷ்மீரில் 8 எட்டு வயது குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்து கொன்றவர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் பாஜக அமைச்சர்கள் பங்கேற்பு. உத்தரப்பிரதேசம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக எம்.எல்.ஏ கைது.
மதிப்பீடு
சுருக்கம்
காஷ்மீரில் நாடோடி இனச் சிறுமியை கடத்தி 1 வாரம் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் நாடெங்கிலும் கோப அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
விளக்கம்
ஜம்முவில் உள்ள கதுவா மாவட்டத்தின் ரசனா கிராமத்தில் 8 வயது ஆஷிஃபா என்ற பக்கர்வால் நாடோடி முஸ்லீம் இனச் சிறுமி ஜனவரி 10-ம் தேதி காணமல் போய் பல நாட்கள் கழித்து ஜனவரி 17-ம் தேதி ரசனா வனப்பகுதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பிரேதப்பரிசோதனையில் குழந்தையை கடத்தி ஒரு வாரம் சித்ரவதை மற்றும் வன்புணர்வு செய்து கொடூரமாக கொன்றதாக தெரியவந்தது.
இந்த வழக்கின் விசாரணையை அம்மாநிலக் குற்றப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு அப்பகுதியின் சிறப்பு பிரிவு அதிகாரி தீபக் கஜுரியா, சுரேந்தர் வர்மா, ஓய்வு பெற்ற கோவில் பாதுகாவலர் சஞ்சய் ராம் (60), திலக் ராஜ், பிரவேஷ் குமார், சஞ்சய் ராமின் 16 வயது மகன் விஷாலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல் :
கோவில் பொறுப்பாளரான சஞ்சய் ராம் திட்டம் தீட்டியே போலீஸ் உதவியுடன் இக்குற்றத்தை செய்துள்ளார். சிறுமி ஆஷிஃபாவை கோவிலில் வைத்து சித்ரவதைகள் செய்து பாலியல் வன்புணர்வு செய்தற்கான தடயங்கள் கோவில் கிடைத்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது குற்றப் பிரிவு போலீஸ்.
மேலும், சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து மயக்கமுற்ற நிலையில் தொடர்ந்து பல நாட்கள் கூட்டு வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
குற்றவாளிக்கு ஆதரவாகப் போராட்டம் :
இந்நிலையில், பல்வேறு இடையூறுகளுக்கு பிறகு கதுவா நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வு பிரிவினர் ஆஷிஃபா வழக்கின் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சென்ற போது அங்கிருந்த வழக்கறிஞர்கள் ஒன்றுக்கூடி தடுக்க முயன்றுள்ளனர். இதில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மீது போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் டோக்ரா சமூகத்தினர் குறிவைக்கப்படுவதாகவும், விசாரணை என்கிற பெயரில் அவர்களை சித்ரவதைகள் செய்வதாகவும் “ ஹிந்து ஏக்தா மஞ்ச ” என்ற அமைப்பு பல போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதில், கடந்த சனிக்கிழமை கதுவா நகரில் நடைபெற்ற முழுக் கடையடைப்பு மற்றும் போராட்டத்திற்கு வழக்கறிஞர் சங்கமும், சில அமைப்பினரும் கலந்து கொண்டனர்.
குற்றவாளிக்கு ஆதரவு தெரிவித்து போராடியவர்கள் குற்றப் புலனாய்வு அதிகாரிகளிடம் இருந்து வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கையை முன்வைத்துள்ளனர். காஷ்மீரில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இப்போராட்டத்தில் பாஜகவின் அமைச்சர்களாகிய சந்தர் பிரகாஷ் கங்கா, லால் சிங்க் ஆகியோர் பங்கேற்றது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. ஆஷிஃபா சிறுமி வழக்கில் அரசியல் சார்ந்த நடவடிக்கைகள் ஏதும் இருக்காமல் முறையான விசாரணை நடைபெறும் என ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
இதற்குமுன் பிப்ரவரி 17-ம் தேதி ஆஷிஃபா சிறுமியின் பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு அதிகாரி தீபக் கஜுரியாவை விடுவிக்கும்படி கைகளில் தேசிய கொடியை ஏந்தி கதுவா நகரின் தெருக்களில் பேரணியும், போராட்டமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கதுவா பகுதியில் உள்ள முஸ்லீம் நாடோடி இன மக்களிடையே பயத்தை உருவாக்கவே இந்த சம்பவத்தை செய்துள்ளனர்.
8 வயது ஆஷிஃபா சிறுமியை கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவம் தற்போது நாடெங்கிலும் மிகப்பெரிய கோப அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆஷிஃபா சிறுமிக்கு நடத்த கொடுமைக்கு தகுந்த நீதி கிடைக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் அதிகம் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேசம் மாணவி கற்பழிப்பு வழக்கு :
உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது பெண், பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் சென்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் ஏப்ரல் 2017-ல் புகார் அளித்தார். ஆனால், புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுத்ததால் பாதிக்கப்பட்ட பெண் கடந்த 8-ம் தேதி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் அருகே தீக்குளிக்க முயன்ற போது காவல் துறையினர் காப்பாற்றினர். இந்நிலையில், அப்பெண்ணின் தந்தை பப்பு சிங்கை விசாரணைக்கு அழைத்து சென்ற போது மர்மமான முறையில் இறந்தார்.
இளம் பெண்ணின் புகாரின் பேரில் குல்தீப் சிங்கின் சகோதரரை காவல்துறை கைது செய்தது. பின்னர் இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐக்கு மாற்றியது உத்தரப்பிரதேச அரசு. இந்நிலையில், வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் தற்போதுவரை எம்.எல்.ஏ குல்தீப் சிங் ஏன் கைது செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பியது. இதைத் தொடர்ந்து, இன்று காலை லக்னோவில் வைத்து எம்.எல்.ஏ குல்தீப் சிங் சென்கர் கைது செய்யப்பட்டார்.
கதுவா மற்றும் உன்னாவ் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்றுவரை எத்தகைய கருத்தையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2014 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக அமைச்சர் அருண் ஜெட்லி, டெல்லியில் நிர்பயா என்ற 23 வயது இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வை “ சிறிய கற்பழிப்பு சம்பவம் ” என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.
இதற்கு முன்பாக 2011- ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நாட்டில் நடைபெறும் கற்பழிப்பு, கொலை, கடத்தல் போன்ற பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு மரணத் தண்டனை வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டார். ஆனால், தற்போது அவர்களுடைய ஆட்சியே நடைபெறுவதால் முன்பு கூறியதை நிறைவேற்றியிருக்கலாம் என்பது சாமானிய மனிதனின் கருத்து. நாடெங்கிலும் குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை பலரும் பாலியல் வன்கொடுமைக்கும், பாலியல்ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவது நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பின்மையை எடுத்துரைக்கிறது.
ஒரு இடத்தில பாஜக எம்.எல்.ஏவே பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார் என்ற செய்தியும், இன்னொரு இடத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக பாஜக அமைச்சரே போராடுகிறார் என்ற செய்தியும் ஒருவித பய உணர்வையே மக்களுக்கு ஏற்படுத்துகிறது. இவ்விவகாரத்தில் தொடர்ந்து மௌனம் சாதிப்பதோ அல்லது அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதோ அவமானம். அரசியலற்று பாஜகவினரே எதிர்த்து கேள்வி கேட்கும் தருணம் இதுவாக இருக்கலாம். பச்சிளம் குழந்தையை பலாத்காரம் செய்து கொல்வதில் யாருக்கு உடன்பாடு இருக்க முடியாது. இதற்கான நீதியை நியாயமான வழியில் சமூகம் முன்னெடுக்கும் என்பதை நம்புவோம்.
யாரும் எதற்காகவும் வர வேண்டாம், ஒருவேளை நீங்கள் ஆதரிப்பவராக இருந்து அதே சூழ்நிலை வரக் கூடாதுதான், வந்து தொலைத்தால் அன்று இதே மாதிரி அரசியல்வாதி நின்றால் வீடு தாங்குமா?
ஒரு குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஒரு குற்றவாளி என்று எப்படி நாம் முன்பே முடிவு செய்ய கூடாதோ, அதுபோலவே அந்த குற்றவாளியை காப்பாற்றும் முயற்சியிலும் ஈடுபட கூடாது . அதற்கான விசாரணைக்கு அனுமதி அளித்து அந்த விசாரணையின் முடிவை காண வேண்டும். அதற்கே அனுமதிக்காமல் அவரை தொடர்ந்து காப்பாற்றும் முயற்சி அதுவும் பாலியல் வன்புணர்வு போன்ற விசயங்களில் முட்டுக் கொடுப்பதும், அதையும் ஒரு அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருக்கிற அமைச்சர் நிலையில் இருப்பவர்கள் செய்வதும் மிகப்பெரிய கொடுமையான சூழல். நாடே கொதித்துள்ள பிரச்சனையில் பிரதமர் மௌனம் களைப்பாரா..!