கதுவா சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லையா ?

பரவிய செய்தி

கதுவா சிறுமி வழக்கில் புதிய திருப்பம். சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாக கூறிய நிலையில் பிரேதப்பரிசோதனை அறிக்கையில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக எந்தவொரு வார்த்தையும் இடம்பெறவில்லை. இதை ஊடகங்கள் மறைத்து வருகின்றனர்.

மதிப்பீடு

சுருக்கம்

கதுவா சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை மருத்துவ அறிக்கை உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுதர பிரேதப்பரிசோதனை அறிக்கை முக்கிய சாட்சியாக இருக்கும் என்று ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

விளக்கம்

இந்திய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கதுவா சிறுமி பாலியல் வன்புணர்வு கொலை சம்பவம் பல்வேறு சர்ச்சைக்குள்ளானது. தற்போதுவரை சிறுமியின் கொலை வழக்கில், தவறான தகவல்களும் வதந்திகளும் வெளியாகின்றன.

கதுவா சிறுமி வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட பிரேதப்பரிசோதனை அறிக்கையில் பலாத்காரம் பற்றி குறிப்பிடவில்லை. மேலும், குழந்தையின் ஹைமேன் இல்லை என்று குறிப்பிட்டாலும், அது நீச்சல், சைக்கிள் ஓட்டும் போது, குதிரை சவாரி போன்ற விளையாட்டின் போது நீங்குவது சகஜம். இவ்வாறு வட இந்தியாவின் பத்திரிகை ஒன்றின் முதல் பக்கத்தில் ஏப்ரல் 20-ம் தேதி வெளியாகியது.

ஆனால், இந்த கட்டுரையில் சிறுமி உடலில் ஏற்பட்ட மற்ற காயங்கள் பற்றி எடுத்துரைக்கவில்லை. அதை பற்றி சிறுமியின் பிரேதப்பரிசோதனை அறிக்கையில் தெளிவாக உள்ளது.

கதுவா பகுதியின் 8 வயது சிறுமியின் மருத்துவ அறிக்கையில், உதடுகளில் இரத்த காயம், பெண்ணின் கருவாய் உடைந்து சிதறியது, பெண் உறுப்பில் இரத்தப்போக்கு, ஹைமேன் தென்படவில்லை மற்றும் தொடை, வயிற்றில் இரத்த காயங்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இறுதியாக கதுவா மாவட்ட மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு ஜம்மு போலீசாரிடம், “ மருத்துவ அறிக்கையில் குறிப்பிட்ட காயங்கள் அனைத்தும் பாலியல் பலாத்காரத் தாக்குதலில் ஏற்பட்டு இருக்கலாம் ” என்று கூறியுள்ளனர்.

8 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதை மருத்துவ அறிக்கை உறுதி செய்ததால், இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுதர பிரேதப்பரிசோதனை அறிக்கை முக்கிய சாட்சியாக இருக்கும் என்று ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சிறுமி பலாத்காரம் செய்யப்படவில்லை என்று இரு பிரேதப்பரிசோதனை முடிவுகளும் ஒரே மாதிரியா தெரிவித்துள்ளது என்றும், இதை ஊடகங்கள் மூடி மறைக்கின்றனர் என்றும் சமூக வலைத்தளத்தில் வலதுசாரி சித்தாந்தம் கொண்டவர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

வட இந்திய பத்திரிகையில் முழுமையான தகவல் எதுவும் குறிப்பிடவில்லை. அதை ஆராயாமல் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றன. சிறுமி கொலை வழக்கில் மத சார்ந்த வேறுபாடுகள் இருப்பதால், பலரும் பல விதத்தில் வதந்தியையும், தவறான தகவல்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

எது எவ்வாறாக இருப்பினும் கதுவா சிறுமி வழக்கில் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கி, இறந்த சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே அனைவரது எண்ணமாகும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button