திருவாரூர் கால்வாயில் காவிரி நீருடன் அடித்து செல்லப்படும் குப்பைகள் எனப் பரப்பப்படும் இந்தோனேசியா வீடியோ !

பரவிய செய்தி
நீர் நிலைகள் கால்வாய்கள் எவ்வாறு இருக்கிறது.. நம்பர் 1 மாநிலமாம்..Twitter Link | Archive Link
மதிப்பீடு
விளக்கம்
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாருர், நாகை, மயிலாடுதுறை உட்பட பல மாவட்டங்களின் பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 அன்று மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். எனவே இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12 அன்று முதல்வர் ஸ்டாலின் அவர்களால் மேட்டூர் அணை திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் திருவாரூரில் தூர்வாராத வாய்க்கால்கள்களைப் பாருங்கள் இது தான் திராவிட மாடல் ஆட்சி என்றுக் கூறி வாய்க்கால் ஒன்றிலிருந்து பிளாஸ்டிக் குப்பைகள் நீருடன் சேர்ந்து வேகமாக அடித்து வருவதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
— கூவத்தில் முதலை (@Raj09651983) July 20, 2023
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவில் உள்ள கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ தமிழ்நாட்டைச் சேர்ந்தது அல்ல என்பதை அறிய முடிந்தது.
இதுகுறித்து தேடியதில், இந்த வீடியோவைப் பதிவு செய்தவர் டாம் ஜாக்சன் (Tom Jackson) என்பதையும், இந்த கால்வாய் இந்தோனேசியாவில் உள்ள மேற்கு சுல்வேசி (West Sulawesi) மாகாணத்தில் உள்ளது என்பதையும், Lewis Pugh என்பவரது ட்விட்டர் பக்கத்தில் காண முடிந்தது.
What on earth are we doing? This will all end up in our Ocean.
🎥: Tom Jackson pic.twitter.com/mSFBKC5oMi
— Lewis Pugh (@LewisPugh) April 27, 2023
இது இந்தோனேசியாவில் எடுக்கப்பட்டது தானா என்பது குறித்து மேலும் ஆய்வு செய்து பார்த்ததில், Buletin iNews என்ற செய்தி சேனல் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் இவ்வீடியோவை “வைரல்! வோனோமுலியோ மாவட்டத்தில், பொலேவாலி மந்தர் பகுதியில் குப்பை நதி ஓடுகிறது” என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவின் விளக்கத்தில் “ஒரு கிமீ நீளமுள்ள கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்ட போது பிளாஸ்டிக் குப்பைகளுடன் நீரானது நகரை நோக்கி ஓடுகிறது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், Avanieco என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வீடியோ உடன் வெளியான பதிவிலும் “மேற்கு சுலவேசியின் பொலேவாலி மந்தர் பகுதியில் ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள குப்பைக் குவியல்கள் நெற்பயிர்களுக்கான நீர்ப்பாசனக் கால்வாய்களை நிரப்பி உள்ளன. கழிவுகளின் அளவு 30 லாரிகள் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
View this post on Instagram
இந்த வீடியோ இந்தோனேசியாவின் வோனோமுலியோ மாவட்டத்தில் உள்ள கால்வாயில் தான் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து nzherald.co.nz ஊடகம் தன்னுடைய இணைய பக்கத்திலும் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இது தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல என்பது உறுதியாகிறது.
மேலும் படிக்க: திமுக ஆட்சியில் போடப்பட்ட ஆபத்தான சாலை எனப் பரப்பப்படும் 2015ல் பரவிய பழைய வீடியோ !
மேலும் படிக்க: ம.பியில் அடி பம்பு மூலம் சாராயம் விற்றதை திராவிட மாடல் எனப் பதிவிட்ட பாஜகவின் நாராயணன் திருப்பதி !
முடிவு:
நம் தேடலில், திருவாரூரில் தூர்வாராத வாய்க்கால்கள்களைப் பாருங்கள் எனப் பரவி வரும் வீடியோ, தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல என்பதையும் இது இந்தோனேசியாவின் வோனோமுலியோ மாவட்டத்தில் உள்ள கால்வாயில் எடுக்கப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது.