This article is from Sep 23, 2019

கீழடியில் வாஸ்து, மத வழிமுறை இருப்பதாக அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறினாரா ?

பரவிய செய்தி

நான் கீழடி அகழ்வாராய்ச்சியின் கண்காணிப்பாளராக ஏற்கனவே இருந்ததால் எனது கருத்தை தமிழ் மக்களிடம் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. தற்போது கீழடி அகழ்வாராய்ச்சியின் முடிவில் மத சின்னங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதை முன்னிட்டு ஒரு சிலர் தமிழருக்கு மதம் இல்லை என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.
தமிழரின் தமிழின் தொன்மையை அறியவே நாங்கள் ஆராய்ச்சி செய்தோமே ஒழிய மதத்தை பற்றி அல்ல. ஆனாலும் கிடைத்த பொருட்களை வைத்து ஒரு சில விஷயங்களை ஆழ்ந்து நுட்பமாக ஆராய்ந்தால் மதத்தை பற்றிய தெளிவு பெறலாம் – அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடி அகழ்வாராய்ச்சி கண்காணிப்பாளர் 2014 – 2016.

மதிப்பீடு

விளக்கம்

கி.மு ஆறாம் நூற்றாண்டை கடந்து பின்னோக்கி பயணிக்கும் கீழடி ஒரு நகர நாகரீகம் என்பதற்கான அறிவியல் ஆதாரங்கள் வலுவாய் கிடைத்து வருகிறது. தமிழர்களின் தொன்மையான வாழ்விடத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனினும், அவற்றில் ஒன்றில் கூட மத அடையாளங்கள் இல்லை என்பதே ஆய்வாளர்கள் கருத்து. ஆனால், கீழடியில் மத அடையாளங்களை புகுத்திட பலரும் புரளி செய்திகளை கட்டவிழ்த்து விடுகின்றனர் என்பதை சமீபகாலமாக சமூக வலைதளங்களில் வைரலாகும் கீழடி குறித்த செய்திகளில் இருந்து பார்க்க முடிகிறது.

அதில் ஒன்றாக கீழடியில் முதன் முதலில் அகழாய்வு பணிகளை கொண்ட தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடியில் மத அடையாள முறை இருப்பது குறித்து தகவல் தெரிவித்து உள்ளதாக ஓர் பதிவு முகநூலில் வேகமாய் பரவி வருகிறது.

Facebook Link | Archived Link 

குரு பிரசாத் என்பவரின் முகநூல் பக்கத்தில் வெளியான மேற்கண்ட பதிவு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று மத ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது. இதே பதிவை பலரும் காப்பி பேஸ்ட் செய்து அமர்நாத் ராமகிருஷ்ணன் உடைய கருத்து என பதிவிட்டு வருவதை காண நேரிட்டது. அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள முயன்றோம்.
இத்தகைய பதிவில், கட்டிடங்கள் வாஸ்து முறையில் இருப்பதாகவும், இறந்தவர்களுக்கு காரியம் நடைபெற்று உள்ளதால் சுடுகாடுகள் இருந்து இருக்கலாம் என மறைமுகமாக இந்து வழிபாட்டு முறை இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
ஆனால், கீழடியின் முன்னாள் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி மேற்கூறிய எந்தவொரு கருத்தையும் கூறவில்லை. அவர் ஊடங்களுக்கு அளித்த பேட்டியை பின்வருமாறு காணலாம்.
” தற்பொழுது செய்திருக்கும் ஆய்வுகள் போதாது, இன்னும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். நான் இருக்கும்போதே சில ஆய்வுகளை செய்ய கோரினோம். அது நடக்கவில்லை. ஆனால், தமிழக அரசு நல்ல முயற்சியை எடுத்து இருக்கிறது. எங்களின் ஆய்வில் கிமு 2-ம் நூற்றாண்டு வரை சென்று இருந்தது. தற்பொழுது அவர்கள் மேற்கொண்ட நான்காம் கட்ட ஆய்வில் கிமு 6 நூற்றாண்டு செல்வதாக வெளியான தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது.
கீழடியில் அகழாய்வை விரிவுப்படுத்தினால் இன்னும் பல ஆதாரங்கள் கிடைக்கும். கீழடியில் உள்ள 110 ஏக்கரில் 10 ஏக்கரில் மட்டுமே ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது மிகக்குறைவு. தமிழ்நாட்டில் நகர நாகரீகம் இல்லை என்பதை கீழடி மாற்றியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். எந்த காரணம் கொண்டும் ஆய்வுகள் நிறுத்தப்படக்கூடாது என்பதே என் விருப்பம். எழுத்து வடிவங்களுக்கு ஆதாரமாக கீழடி அமைந்து உள்ளது ” என அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறார்.
மத அடையாளங்கள் இல்லாமல் இருப்பது ஒருபக்கம் ஆச்சரியமாக பார்க்கப்பட்டாலும், அதனை மாற்றுவதற்காக ஏராளமான வதந்திகள் பரவுவதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அமர்நாத் ராமகிருஷ்ணன் பெயரில் போலியான கருத்துக்கள் பரவி வருவதை மக்கள் தெரிந்து நல்லதை பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader