This article is from Nov 16, 2017

கீழடியில் கிடைத்த பொருள்கள் 2200 ஆண்டுகள் பழமையானவை.

பரவிய செய்தி

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களில் ஒன்று 2160 ஆண்டுகள் பழமையானது என்றும் , மற்றொண்டு 2220 ஆண்டுகள் பழமையானது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது .

மதிப்பீடு

சுருக்கம்

தமிழர்களின் தொன்மையான நகர நாகரிகம் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . அங்கு கிடைத்த பொருள்களின் மாதிரிகள்  2200 ஆண்டுகள் பழமையானது …

விளக்கம்

மிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஓர் கிராமம் தான் கீழடி . இந்திய தொல்பொருள் அகழ்வாராச்சி துறையை சார்ந்த அமர்நாத் ராதாகிருஷ்ணன் அவர்களை தலைமையாக கொண்ட ஓர் குழு கீழடியில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர் . அந்த ஆய்வில் தொன்மையான தமிழ் மக்கள் வாழ்ந்த இடத்தை கண்டுபிடித்து உள்ளனர் .

கீழடியில் கிட்டத்தட்ட 48 சதுரக் குழிகள் வெட்டபட்டன . அதில் உறைகிணறுகள் , செங்கற் சுவர்கள் , கூரை ஓடுகள் , அணிகலன்கள் , மட்பாண்டங்கள் , எலும்புக்கருவிகள் , இரும்பினால் ஆனா வேல்கள் , தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் என பல தொன்மையான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன .

மேலும் இது தொடர்பாக திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை  இணை அமைச்சர் மகேஷ் ஷர்மா எழுத்துப்பூர்வமாக ஜூலை மாதம் மாநிலங்களவையில் பதில் அளித்துள்ளார் . அதில் கீழடியில் இருந்து சேகரிக்கப்பட கரியமில பொருள்களை அமெரிக்காவின் ப்ளுட்டோரியாவில் உள்ள பீட்டா அனாலிடிக் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன . அந்த கார்பன் பொருள்களை ஆய்வு செய்ததில் , முதல் மாதிரி 2160 ஆண்டுகள் அல்லது அதற்கு 30 ஆண்டுகள் முன்போ பின்போ இருக்கலாம் என்றும்  மற்றும் இரண்டாவது மாதிரியானது 2220 ஆண்டுகள் அல்லது அதற்கு 30 ஆண்டுகள் முன்போ பின்போ இருக்கும் என்றும் முடிவு வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார் .

கீழடி அகழ்வின் போது ஆதன் , சந்தன் , உதிரன்  போன்ற பெயர்கள் பொறிக்கப்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன . நீர் வழங்கலும் , கழிவுநீர் அகற்றலும் தான் நாகரிக வளர்ச்சியின் முதன்மையானதாக கருதப்படுகிறது  . கீழடியில் சுடுமண் குழாய்கள் மூலம் உருவாக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கொண்ட கட்டிடங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .

ஆகையால் சங்க காலத்திலேயே நகர நாகரிகம் இருந்ததை கீழடி அகழ்வு நிருபிக்கும் வகையில் பல மாதிரிகள் கிடைத்துள்ளன . நாம் இலக்கிய பாடல்களில் மட்டுமே அறிந்து வந்த நம் முன்னோர்களின் வாழ்க்கைமுறையை நிருபிக்கும் வகையில் இந்த ஆய்வு அமைந்துள்ளன…

Update :

கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகளை மத்திய அரசு கைவிட்ட பிறகு, தமிழக தொல்லியல் துறையின் முயற்சியில் நான்காம் கட்ட அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில், 5-ம் கட்ட அகழாய்வு பணிகள் தமிழக தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.

கீழடியில் 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியின் பொழுது பழங்காலத்து இரட்டை செங்கற்சுவர் கிடைத்து உள்ளன. இது முன்பு கிடைத்த சுவர்களின் தொடர்ச்சியாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த இரட்டை செங்கற்சுவார் மிக நீளமாகவும் உள்ளது.

கீழடியின் 5-ம் கட்ட அகழாய்வுக்கு 45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 13-ம் தேதி பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 10 நாட்களில் மட்டும் பல தொல்பொருட்கள் கிடைத்து வருகின்றன. தொல்லியல் பகுதிகள் செயற்கைக்கோள் உதவியிடன் அறிந்து ஆய்வுகள் நடைபெறுவதால் எதிர்பார்ப்புகளை விட கூடுதல் தொல்பொருட்கள் கிடைக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இம்மண்ணின் தொன்மையான வரலாற்றை நிரூபிக்க கீழடியில் தொடரும் ஆய்வுகளில் கிடைக்கும் தொல்பொருட்கள் இன்னும் சில நூற்றாண்டுகள் பின்னோக்கி செல்ல வாய்ப்புகள் உள்ளன. கீழடியில் முழுமையான ஆய்வுகள் மேற்கொண்டு பண்டைய மக்களின் வரலாற்றை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் எண்ணமாகும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader