கீழடியில் ஹிந்து கடவுள்கள் சிலை கிடைத்ததாகக் கூறும் ஹெச்.ராஜா| எப்பொழுது பேசினார் ?

பரவிய செய்தி
கீழடியில் ஹிந்து கடவுள்களான விநாயகர் மற்றும் சிவலிங்கம் கிடைத்து உள்ளதாக பேசும் ஹெச்.ராஜா. கீழடி பற்றிய உண்மை தெரிஞ்ச உடனே இந்து விரோத கூட்டம் கீழடி பற்றி பேச மாட்டாங்க பாருங்க….
மதிப்பீடு
சுருக்கம்
கீழடியில் சிவலிங்கம் மற்றும் விநாயகர் சிலைகள் கிடைத்து உள்ளதாக ஹெச்.ராஜா பேசியது உண்மை. ஆனால், அவர் கூறிய தகவல் தவறானது. எங்கு பேசினார் என்பதை விரிவாக படிக்கவும் .
விளக்கம்
கீழடியின் 2,600 ஆண்டுக்கு மேலான பழமையான தமிழர் நகர நாகரீகத்திற்குள் மதங்களின் அடையாளங்கள் மட்டுமே சிலரால் முதன்மையானதாக பார்க்கப்படுகிறது. இதுவரை கீழடியில் மத அடையாளங்கள் கிடைக்கவில்லை எனக் கூறிவரும் நேரத்தில், கீழடியில் மத கடவுள் சிலைகள் இருப்பதாக ஏராளமான வதந்திகள் பரவியதை யூடர்ன் உடைத்தெறிந்து மக்களுக்கு உண்மையான தகவலை அளித்து வருகிறது.
காஞ்சி செந்தில் 2.0 என்ற முகநூல் பக்கத்தில் ” கீழடி பற்றிய உண்மை தெரிஞ்ச உடனே இந்து விரோத கூட்டம் கீழடி பற்றி பேச மாட்டாங்க பாருங்க…. ” என்ற தலைப்பில் பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கீழடியில் ஹிந்து கடவுள்களான விநாயகர் மற்றும் சிவலிங்கம் கிடைத்து உள்ளதாக மேடையில் பேசும் வீடியோ வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோ 1,600 ஷேர்கள் மற்றும் 38 ஆயிரம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
ஹெச்.ராஜா வீடியோ :
ஆயிரக்கணக்கான ஷேர்களை கடந்து வரும் வீடியோவில் இடம்பெற்று இருக்கும் ஹெச்.ராஜா எங்கு, எப்பொழுது பேசினார் என்பதை குறித்து ஆராய்ந்து பார்த்தோம். மேடையில் அமர்ந்து இருப்பவர்களுக்கு பின்புறத்தில் ” ஹிந்து அகமும் புறமும் ” என்ற வார்த்தை இடம்பெற்று இருக்கிறது.
ஹிந்து அகமும் புறமும் என்ற வார்த்தையுடன் ஹெச்.ராஜாவின் பெயரை இணைத்து தேடிய பொழுது ” ஹிந்து, அகமும் புறமும் ” நிகழ்ச்சிகள் தொடர்பான வீடியோக்களை வெளியிட்ட Channel Vision i என்ற யூட்யூப் சேனல் பெயரை கண்டறிந்தோம்.
அந்த யூட்யூப் சேனலில் உள்ள வீடியோக்களில் ஹெச்.ராஜா உரையாற்றும் வீடியோ குறித்து தேடிய பொழுது, 2019 பிப்ரவரி 6- தேதி வெளியாகி இருக்கிறது. வீடியோவில் ஹெச்.ராஜா பேசியது,
” கீழடியில் ஆராய்ச்சி நடக்கிறது. கீழடியின் ஆராய்ச்சி தமிழனின் தொன்மையை காட்டுகிறது. அதை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் என்ன சொல்கிறார் என்றால், இரண்டு மூன்று மத சின்னங்கள் தான் கிடைத்து இருக்கிறது. அது என்னவென்று ஏன் சொல்லவில்லை. அங்கு என்ன கிடைச்சு இருக்கு விநாயகரும் சிவலிங்கமும் கிடைச்சு இருக்கு. 2500 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழனின் வாழ்க்கையில், அவன் வாழ்ந்தது எப்படி என காட்டக்கூடிய தொல்லியல் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது சிவலிங்கமும், கனேசமூர்த்தியும் ” என பேசியுள்ளார்.
கீழடியில் எந்தவொரு மதங்களின் அடையாளங்களும் கிடைக்கவில்லை என்பதே ஆய்வாளர்கள் அளித்த தகவல். ஆனால், ” ஹிந்து, அகமும் புறமும் ” என்ற நிகழ்ச்சியின் மேடையில் ஹெச்.ராஜா கீழடியில் ஹிந்து கடவுள்களான சிவலிங்கம், விநாயகர் சிலைகள் கிடைத்து இருப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் அவர்களின் பெயரையும் குறிப்பிட்டு தவறான தகவலை பேசியுள்ளார்.
மேலும் படிக்க : சவூதியில் 3000 ஆண்டுகள் பழமையான ஹிந்துக் கோவிலா ?
கடந்த ஆண்டுகளில் இந்தோனேசியாவில் கிடைத்த 1000 ஆண்டுகள் பழமையான சிவலிங்கத்தை கீழடியில் கிடைத்ததாக வதந்திகள் பரவி இருந்தனர். அதனை பற்றி விரிவாக நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம். அந்த வதந்தி செய்தியை உண்மை என நினைத்து ஹெச்.ராஜா பேசி இருக்கக்கூடும்.
மேலும் படிக்க : கீழடி ஆராய்ச்சியில் சிவலிங்க சிலை கிடைத்துள்ளதா ?
பல மாதங்களுக்கு முன்பாக ஹெச்.ராஜா பேசிய வீடியோவை தற்பொழுது கீழடியின் தொன்மையான அறிவியல் ஆதாரங்கள் கிடைத்து வரும் வேளையில் மீண்டும் பரப்பி வருகின்றனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
முடிவு :
நம்முடைய தேடலில், கீழடியில் ஹிந்து, கடவுள்களான சிவலிங்கம் மற்றும் விநாயகர் சிலை கிடைத்து உள்ளதாக ஹெச்.ராஜா பேசும் வீடியோ 2019 பிப்ரவரியில் வெளியாகி உள்ளது. அதனை தற்பொழுது பரப்பி வருகின்றனர்.
கீழடியில் மத அடையாளங்களோ, மதக் கடவுள்களின் சிலைகளோ கிடைத்து இருப்பதாக அரசு தரப்பிலோ, ஆய்வாளர்கள் தரப்பிலோ தெரிவிக்கப்படவில்லை.
கீழடியை சுற்றி மத வதந்திகள் பரவி வருவதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதன் உண்மைத்தன்மையை அறிந்து அனைவருக்கும் பகிரவும் செய்க.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.