கீழடியில் இஸ்லாமிய அடையாளம் கிடைத்ததாக பரவும் தவறான தகவல் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
ஆரிப் ராஜா வீடியோஸ் எனும் முகநூல் பக்கத்தில் ” கீழடி அகழ்வாராய்ச்சியில் இஸ்லாமியர்கள் பயன்படுத்திய நாணயம் ” என்ற தலைப்பில் வெளியான வீடியோவில் கீழடிக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக விளக்கி கூறியுள்ளார்.
நாம் முன்பே தலைப்பால் குழப்பம் நேர்ந்துள்ளது என கட்டுரை வெளியிட்ட விகடனின் சிரியா நாணயம் குறித்த தகவலை அடிப்படையாக வைத்தே இந்த வீடியோவை பேசியுள்ளார். இலந்தகரையில் 6-ம் நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப்பட்ட ” குரான் வாசகம் ” பொறிக்கப்பட்ட சிரியா நாணயம் கண்டெடுக்கப்பட்டது, அங்கு அகழாய்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் வந்தது உண்மை. ஆனால், அந்த நாணயம் கிடைத்தது 2 ஆண்டுகளுக்கு முன்பு என அந்த நாணயத்தை வைத்திருக்கும் தொல்லியல் ஆர்வலர் ஜெமினி ரமேஷ் யூடர்னுக்கு அளித்த பேட்டியில் விரிவாக தெரிவித்து இருக்கிறார். கீழடி அகழாய்வு பணிகள் நடைபெறும் இடத்திற்கும் இலந்தகரைக்கும் இடையே 40கிமீ தொலைவு உள்ளது.
விரிவாக படிக்க : கீழடி அகழாய்வில் 6-ம் நூற்றாண்டு சிரியா நாணயம் கிடைத்ததா ?| தொல்லியல் ஆர்வலரின் விரிவான தகவல்.
கீழடி அகழாய்வு திட்டத்தின் தொடர்ச்சியாக தமிழக அரசின் 6-ம் கட்ட அகழாய்வு பணி அகரம், மணலூர், கொந்தகை உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. அகரத்தில் 17-ம் நூற்றாண்டு ” வீரராயன் ” நாணயம் மட்டுமே கிடைத்துள்ளது. அதும் கீழடியுடன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பகுதியே. இலந்தக்கரை பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த ” குரான் வாசகம் ” பொறிக்கப்பட்ட நாணயத்தைப் போலவே கீழடியில் கிடைத்த 17 நூற்றாண்டு நாணயத்தில் குரான் வாசகம் இருப்பதாக இவ்வீடியோவில் தவறாகக் குறிப்பிட்டு உள்ளார். அவ்வாறான நாணயம் அங்கு கிடைத்ததாக எந்தவொரு தரவும் இல்லை, விகடனில் கூட அப்படி எங்கும் குறிப்பிடவில்லை. விகடனில் வெளியிடப்பட்ட மூன்று நாணயங்களின் புகைப்படம் தொல்லியல் ஆர்வலர் ஜெமினி ரமேஷிடம் உள்ள நாணயங்களே.
இலந்தகரையில் கிடைத்த ” சிரியா நாணயம்” இங்கு எந்த நூற்றாண்டில், எப்படி வந்தது என்பதற்கு உறுதியான தகவல் இல்லை. ஏனெனில் அதை இங்கு நாணயமாக பயன்படுத்தவில்லை, தங்கமாக பயன்படுத்தி உள்ளனர். வணிகத்தின் மூலம் பண்டமாற்று முறையில் தங்கத்தை பெற்று இருக்கலாம் எனக் கூறி இருந்தார் தொல்லியல் ஆர்வலர். மேலும், சிரியா நாணயம் இலந்தகரை பகுதியில் பல நூற்றாண்டுகளின் நாணயங்கள் கலவையாக கிடைத்துள்ளதாக தெரிவித்து இருந்தார்.
2,300 ஆண்டுகளுக்கு முந்தைய கீழடி நாகரீகத்தில் எந்தவொரு மத அடையாளமும் கிடைக்கவில்லை. பண்டைய தமிழர்கள் கடல்கடந்து பல நாடுகளிடம் வாணிபம் செய்திருக்கிறார்கள். இலந்தக்கரை பகுதியில் அகழாய்வு பணிகள் மேற்கொண்டால் ” குரான் வாசகம்” பொறிக்கப்பட்ட சிரியா நாணயம் எப்படி தமிழகம் வந்தது என்பதற்கு ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளன. அதைவிடுத்து, கீழடியில் சிரியா நாணயம் கிடைத்தது, கீழடியில் கிடைத்த இஸ்லாமிய அடையாளங்கள் மறைக்கப்படுவதாக வதந்திகளை பரப்ப வேண்டாம்.