கீழடியில் 2880 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கிடைத்ததா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி
இன்று கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட 2880 வருட பழமையான சிவலிங்கம், அபிஷேக பானையும், கற்பகிரக அமைப்பும்… உண்மை வெளிவரக்கூடாது , மீடியா கவனம் பெறக்கூடாது என்று ஞாயிற்றுக்கிழமை தோண்டிய அவலம்.
மதிப்பீடு
விளக்கம்
இன்றுவரை கீழடியை சுற்றி பெருமை கொள்ளும் கருத்துக்களும், வதந்திகளும் சுற்றித் திரிய முக்கிய காரணம் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சமூகம் சாதி, மத அடையாளங்கள் இன்றி நகர நாகரீயகத்துடன், எழுத்தறிவுடன் இருந்தே. எனினும், கீழடியை மையமாக் கொண்டு வலம் வரும் வதந்திகளின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.
” இன்று கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட 2880 வருட பழமையான சிவலிங்கம், அபிஷேக பானையும், கற்பகிரக அமைப்பும்… உண்மை வெளிவரக்கூடாது , மீடியா கவனம் பெறக்கூடாது என்று ஞாயிற்றுக்கிழமை தோண்டிய அவலம் ” என்பதுடன் சில புகைப்படங்கள் இடம்பெற்று இருக்கும் மீம் பதிவு சமீபத்தில் வைரலாகி வருகிறது.
காவியத்தலைவன் தலைவன் என்ற முகநூல் பக்கத்தில் கீழடியில் 2880 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கிடைத்ததாக பதிவிட்ட மீமில் பலரும் ஆதாரம் கேட்டும், போலியான தகவல் என்றும் குறிப்பிட்டு கமெண்ட் செய்து இருந்தனர். இருப்பினும், அந்த பதிவு 7 ஆயிரம் ஷேர்களை பெற்று வேகமாக பரவி வருகிறது.
உண்மை என்ன ?
கீழடியில் மத அடையாளங்கள் குறித்த பொருட்களோ அல்லது கடவுள் சிலைகளோ கிடைக்கவில்லை என்ற தகவல் ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், சிவலிங்கம் கிடைத்தது வெளி உலகிற்கு தெரியக்கூடாது என மறைக்கப்பட்டதாக மீம் பதிவில் கூறி இருக்கிறார்கள்.
ஆக, மீம் பதிவில் இருக்கும் மூன்று புகைப்படங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்த்தோம். முதலில் அகழாய்வு பணிகளில் தோண்டும் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. அப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கையில் 2017 ஜூன் மாதம் தி ஹிந்து உள்ளிட்ட முதன்மை செய்திகளில் மேற்கண்ட புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது. ஆனால், தமிழகம் அல்ல.
2017 ஜூன் மாதம் ஜான்கான் மாவட்டம் பெம்பார்தி கிராம பகுதியில் அமைந்து இருந்த ஹைதராபாத்-வாராங்கால் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பூமிக்கு அடியில் சிவலிங்கம் புதைந்து இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த சிவபக்தர் லாகான் மனோஜ்(காவி வேட்டி அணிந்து இருப்பவர்) கூறியுள்ளார். தன்னுடைய கனவில் சிவன் அருள்பொழித்து அப்பகுதியில் லிங்கம் புதைந்து இருப்பதாகவும், அதனை எடுத்து கோவில் கட்டி வழிபடுமாறு கூறியதாக கூறியுள்ளார்.
இதனை நம்பி அப்பகுதி மக்களும் சிவலிங்கத்தை தேடி குழியை தோண்டி உள்ளனர். அவ்வப்போது சாமி அருள் தருவது போன்றும் செய்துள்ளார் மனோஜ். ஆனால், 20 அடிகள் வரை குழியை தோண்டியும் லிங்கம் கிடைக்கவில்லை. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட பிறகு காவல்துறை அங்கு விரைந்தனர். அங்கு நடைபெற்ற பணிகளை நிறுத்தியதோடு, இதற்கு காரணமான லாகான் மனோஜ் என்பவரையும் கைது செய்து உள்ளனர்.
சிவலிங்கம் :
அடுத்தாக, சிவலிங்க சிலை இருக்கும் புகைப்படம் குறித்து தேடிய பொழுது 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான தமிழ் மற்றும் ஆங்கில செய்தி நமக்கு கிடைத்தது.
திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளி என்ற கிராமத்தில் வீடு கட்ட தோண்டிய பொழுது 3 பழங்கால சிலைகள் கிடைத்ததாக வெளியாகி இருக்கிறது. அதில், சிவலிங்கம், அம்மன் சிலை, சண்டிகேஸ்வரர் சிலை என மூன்று சிலைகள் கிடைத்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பூமிக்கு அடியில் புதைந்து இருந்த மூன்று சிலைகளும் 1200 ஆண்டுகள் பழமையான பல்லவ காலத்து சிலைகள் என ஹிந்து ஆங்கில செய்தியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
பானை :
மீம் பதிவில் இடம்பெற்று இருக்கும் பானை புகைப்படம் உண்மையில் கீழடியில் இருந்து எடுக்கப்பட்டதே. கீழடியில் பல்வேறு வகையான பழமையான பானைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பது. போலியான செய்தியை உருவாக்கும் பொழுது உண்மையான பானை புகைப்படத்தையும் பயன்படுத்தி உள்ளனர்.
மேலும் படிக்க : கீழடியில் மதக் கடவுள்களின் சிலைகள் இருந்ததாக பரவும் வதந்திகளின் தொகுப்பு !
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து, கீழடியில் 2,880 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கிடைத்ததாக கூறுவது தெரிந்தே பரப்பப்படும் வதந்தி. கீழடியில் சிவலிங்கம் கிடைக்கவில்லை.
முதல் புகைப்படம் ஹைதராபாத் தேடிய நெடுஞ்சாலையில் சிவலிங்கத்தை தேடிய பொழுது எடுக்கப்பட்டது. இரண்டாவது திருவள்ளுவர் மாவட்டத்தில் வீடு கட்ட பள்ளம் தோண்டிய பொழுது கிடைத்த பல்லவ கால சிலைகள்.
இப்படி போலியான தகவல்களை இணைந்து வதந்திகளை பரப்புவர்களிடம் ஆதாரங்களை வலுவாக கேளுங்கள். சரியான தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்க யூடர்ன் செய்தியை பகிருங்கள்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.