This article is from Nov 30, 2017

கீழடி ஆராய்ச்சியில் சிவலிங்க சிலை கிடைத்துள்ளதா ?

பரவிய செய்தி

கீழடி அகழ்வு ஆராய்ச்சியில் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு. பழந்தமிழர்கள் ஹிந்து மதத்தை சார்ந்தவர்கள் அல்ல என்று கூறியது போய்யாகியுள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

இந்தோனேசியாவில் நடந்த அகழ்வாராய்ச்சியில் பழமையான ஹிந்து கோவிலைக் கண்டுபிடித்துள்ளனர். அங்கு கிடைத்த 1000 ஆண்டுகள் பழமையான சிவலிங்க சிலையை கீழடியில் கிடைத்த சிலை என்று பொய் உரைத்துள்ளனர்.

விளக்கம்

தமிழர்களின் பழமையான நாகரீகத்தை வெளி உலகிற்கு கொண்டு வந்த கீழடியில் மதம் சார்ந்த பொருட்கள் கிடைக்கவில்லை என்று கூறிக் கொண்டு இருந்த வேளையில், கீழடியில் பழமையான சிவலிங்க சிலை கிடைத்துள்ளது என்று சில முகநூல் பக்கங்களில் படங்கள் பகிரப்படுகின்றன.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழ்வராச்சியில் பழந்தமிழர்கள் நவநாகரீகமாக வாழ்ந்து வந்ததற்கான பல ஆதாரங்கள் கிடைத்தன. அகழாய்வில் கிடைத்த மாதிரிப் பொருட்களை சோதித்ததில், அவை 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை என்று தெரியவந்தது. இருப்பினும், கீழடியில் கிடைத்த 5000-க்கும் மேற்பட்ட பொருட்களில் ஒன்றில் கூட மதம் சார்ந்த பொருட்களோ, குறியீடுகளோ இல்லை. 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள், குறிப்பாக நாகரீக வளர்ச்சி பெற்ற மக்கள் சமயசார்பின்றி வாழ்ந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

எனவே பழமையான தமிழர்கள் எந்த மதத்தையும் சேர்ந்தவர்கள் இல்லை என்று அனைவரும் பேசத் துவங்கினர். இப்படி இருக்கையில், கீழடி ஆராய்ச்சியில் பழமையான சிவலிங்க சிலை கண்டெடுக்கப்பட்டதாக சில முகநூல் பக்கங்களில் சிவலிங்க படங்கள் பகிரப்பட்டன. மேலும், தமிழர்கள் ஹிந்து மதத்தை சார்ந்தவர்கள் தான் என்றும் கருத்துகளை கூறினர்.

 ஆனால், கீழடியில் கிடைத்ததாக கூறும் சிவன் சிலையானது இந்தியாவை சேர்ந்தது அல்ல. இந்தோனேசியா நாட்டில் நடைபெற்ற அகழ்வராச்சியில் 1000 ஆண்டுகள் பழமையான ஹிந்து ஆலயம் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த ஆலயத்தில் பழமையான சிவலிங்கத்தின் சிலையும் கிடைத்துள்ளது. மேலும், பல சிற்பக் கலைகள் கொண்ட தூண்கள், சிற்பங்கள், நந்தி சிலை, விநாயகர் சிலை என பல பழமையான சிலைகள் கிடைத்ததாக ஆராய்ச்சியில் பணியாற்றியவர்கள் கூறியுள்ளனர்.

இந்தோனேசியாவில் கிடைத்த சிவலிங்க சிலையை கீழடியில் கிடைத்ததாகக் கூறி புதுமையான வதந்தியை பரப்பியது சில முகநூல் பக்கங்கள். உண்மைகளை பொய்களால் மாற்ற இயலாது என்பது இவர்கள் போன்ற சிலருக்கு தெரிய வாய்ப்பில்லை.

கீழடியில் நிகழ்ந்த ஆய்வில், ஒன்றில் கூட மதம் சார்ந்த அடையாளக் குறியீடுகள் கிடைக்கவில்லை என்பது உண்மையாகும். இந்த உண்மை “ தமிழ் மொழியை சமயசார்பற்ற மொழி “ என்று மதிப்பீடு செய்த அறிஞர் கால்டுவெல்லின் கருத்தை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader