இலவச மின்சாரம் மற்றும் மின்வெட்டு குறித்து தவறான தகவல்களை ட்வீட் செய்த அரவிந்த் கெஜ்ரிவால்..!

பரவிய செய்தி
நாடு முழுவதும் பஞ்சாப் மற்றும் டெல்லியில் மட்டுமே இலவச மின்சாரம் உள்ளது, இந்த இரண்டு மாநிலங்களிலும் மிகக்குறைந்த மின்வெட்டு உள்ளது. இதற்கு முன்பு இலவச மின்சாரம் கொடுத்தால் மின்வெட்டு அதிகரிக்கும் என்று மக்கள் கூறி வந்தனர். மாறாக, இங்கு மின்வெட்டு குறைந்துள்ளது. எப்படி? ஏனெனில், இந்த இரண்டு மாநிலங்களிலும் தெளிவான எண்ணம், நேர்மையான மற்றும் படித்தவர்களைக் கொண்ட ஆம் ஆத்மியின் அரசு உள்ளது. மின்சாரத்துறையை திறமையானதாக மாற்றியுள்ளோம்.
மதிப்பீடு
விளக்கம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இலவச மற்றும் 24/7 தடையில்லாத மின்சாரத்துடன் இந்தியாவின் மிகக் குறைந்த மின்வெட்டுகளைக் கொண்ட யூனியன் பிரதேசமாக டெல்லி உள்ளது என்பதற்கான விளக்கப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதில் ‘இந்திய குடியிருப்பு எரிசக்தி ஆய்வு, CEEW (ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆலோசனை சபை) போன்றவற்றின் விளக்கப்படத்தினை ஆதாரமாக மேற்கோள் காட்டியுள்ளார். மேலும் அந்தப்பதிவுகளில், நாடு முழுவதும் பஞ்சாப் மற்றும் டெல்லியில் மட்டுமே இலவச மின்சாரம் உள்ளது, இந்த இரண்டு மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கட்சி (AAM) ஆட்சி செய்வதால் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மின்வெட்டுகள் ஏற்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
पूरे देश में केवल पंजाब और दिल्ली में फ़्री बिजली है और इन्ही दोनों राज्यों में सबसे कम पॉवर कट हैं। पहले लोग कहते थे कि अगर फ्री बिजली देंगे तो बिजली कट बढ़ जाएँगे। उल्टे पॉवर कट कम हो गये। कैसे? क्योंकि इन दोनों राज्यों में साफ़ नीयत, ईमानदार और पढ़े लिखे लोगों की आम आदमी… pic.twitter.com/qOGh4qdsGj
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 16, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் செய்திகள் குறித்து, மாநில வாரியாக உள்ள தினசரி மின்வெட்டு விவரங்களை தேடியபோது, அரவிந்த் கெஜ்ரிவால் பகிர்ந்த விளக்கப்படத்தின் உண்மையான தரவுகளைக் கொண்ட ஆய்வைக் கண்டோம். அது ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆலோசனை சபை (CEEW) என்ற இணையதளத்தில் “State of Electricity Access in India, Insights from the India Residential Energy Survey (IRED), 2020 ” என்ற தலைப்பிலான ஆய்வில் இருந்து பகிரப்பட்டு உள்ளது என்பதை அறிய முடிந்தது.
கெஜ்ரிவால் பகிர்ந்துகொண்ட தரவுகளுடன் ஒப்பிடும்போது உண்மையான விளக்கப்படத்தில் உள்ள தரவுகள் மாறுபட்டு காணப்பட்டன. மாறுபட்ட தரவுகளின் விவரங்கள் பின்வருமாறு:
- கெஜ்ரிவால் ட்விட்டரில் பகிர்ந்துகொண்ட விளக்கப்படத்தில் 9 மாநிலங்களுக்கான தரவு மட்டுமே உள்ளது, ஆனால் உண்மையான ஆய்வில் உள்ள விளக்கப்படத்தில் 21 மாநிலங்களுக்கான தரவுகள் வரிசைப்படுத்தி காண்பிக்கப்பட்டிருந்தன.
- கெஜ்ரிவால் ட்விட்டரில் பகிர்ந்துகொண்ட விளக்கப்படத்தில் டெல்லிக்கு அடுத்தபடியாக பஞ்சாப் மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது, ஆனால் உண்மையான தரவில் உள்ள விளக்கப்படத்தில் டெல்லி, கேரளா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு பிறகு பஞ்சாப் 5வது இடத்தில் உள்ளது.
மேலும் அவர் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் பஞ்சாப் மற்றும் டெல்லியில் மட்டுமே இலவச மின்சாரம் உள்ளது என்றும், மேலும் இந்த இரண்டு மாநிலங்களிலும் மிகக் குறைவான மின்வெட்டுகளே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவற்றின் தரவுகளை பின்வருமாறு தொகுத்துள்ளோம்:
இலவச மின்சார திட்டங்களை நடைமுறையில் கொண்டுள்ள மாநிலங்கள்:
- பஞ்சாப் – ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த பிறகு 2022 ஆம் ஆண்டு முதல் 600 யூனிட் (electricity per billing cycle) வரை இலவச மின்சாரத்தை பஞ்சாப் அரசு வழங்கி வருகிறது. இதற்கு முன்புவரை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி அங்கு 400 யூனிட் வரை (electricity per billing cycle) இலவச மின்சாரம் வழங்கி வந்துள்ளது. இந்த குறிப்பிடப்பட்ட யூனிட்களை விட அதிகமான மின் நுகர்வு எடுத்துக் கொள்பவர்களுக்கு கூடுதல் கட்டணங்களானது, மீட்டர் வாடகைகள் (Meter rentals) மற்றும் பொருந்தக்கூடிய அரசாங்க வரிகளுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என்று பஞ்சாப் அரசு தெரிவித்து உள்ளது குறித்து 2022 ஜூலை 07 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் பஞ்சாப் மாநிலத்தில் ஏற்கனவே இருந்த இலவச மின்சார திட்டத்தை, ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த பிறகு 600 யூனிட்களாக அதிகரித்துள்ளதே தவிர இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தவில்லை என்பதை அறிய முடிகிறது.
2. டெல்லி – ஆம் ஆத்மி அரசு மாதம் ஒன்றுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குகிறது. 201- 400 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு 50 சதவீத மானியமாக ₹ 850 வரை அதிகபட்ச வரம்பு வரையறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதியுடன் டெல்லியில் இலவச மின்சார மானியம் நிறுத்தப்படும் எனத் தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு மறுத்து தெரிவித்து டெல்லி மின்துறை அமைச்சர் அதிஷி வெளியிட்டுள்ள செய்திகளை கடந்த ஏப்ரல் 14 அன்று NDTV தனது பக்கத்தில் செய்தியாக வெளியிட்டுள்ளது.
3. மற்ற மாநிலங்கள் – மேலும் பஞ்சாப் மற்றும் டெல்லி மட்டுமே இலவச மின்சாரம் வழங்கி வருகின்றதா என்பது குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு கிட்டத்தட்ட 1989ம் ஆண்டு முதலே இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. விவசாயிகளுக்கு மட்டுமல்லாது தமிழ்நாடு அரசு வீட்டு உபயோக நுகர்வோருக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சார மானியம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரா 2004ல் இருந்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. இதே போன்று மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களும் விவசாயிகள் மற்றும் வீட்டு நுகர்வோர்களுக்கு மின் மானியங்களை வழங்கி வருகின்றன. இது தொடர்பாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியை கீழேக் காணலாம்.
குறைந்த மின்வெட்டு உள்ள மாநிலங்கள்:
கெஜ்ரிவால் ட்விட்டரில் பகிர்ந்துகொண்ட விளக்கப்படத்தில் டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகியவை குறைந்த மின்வெட்டு உள்ள மாநிலங்களாக இருந்தன. ஆனால் தினசரி மின்வெட்டுகள் குறித்த ஆய்வில் உள்ள உண்மையான விளக்கப்பட வரிசையில் டெல்லி, கேரளா, குஜராத், தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் என்ற வரிசையில் மாநிலங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து மேலும் தேடியதில் இதில் உள்ளபடியே டெல்லி, கேரளா மற்றும் குஜராத் ஆகியவை நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் சராசரியாக 23 மணி நேரத்திற்கும் மேலாக மின்நுகர்வு வழங்கும் மாநிலங்களாக உள்ளன என்ற தரவுகளை மாநில வாரியாக CEEW வெளியிட்டுள்ள மின் விநியோக காலத்திற்கான அறிக்கையின் மூலம் காண முடிந்தது.
மேலும், இந்த ஆய்வு பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே 2019-2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது என்பதும், 2022 ஆம் ஆண்டு தான் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் இலவச மின்சாரம் வழங்குவது பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய இரு மாநிலங்கள் மட்டுமே என்றும், குறைந்த மின்வெட்டு உள்ள மாநிலங்களில் முதல் இரண்டு வரிசையில் டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகியவை உள்ளன என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியவை தவறான தகவல்கள் என கண்டறியப்பட்டுள்ளன. தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் மின்வெட்டு குறைவாக உள்ள மாநிலங்களில் டெல்லி, கேரளா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு பிறகே பஞ்சாப் இடம் பெற்றுள்ளது என்பதை அறிய முடிகிறது.