கேரளாவில் PFI அமைப்பினர் தன்னை தாக்கியதாக நாடகமாடிய இராணுவ வீரர் !

பரவிய செய்தி
கேரளா: கொல்லம் மாவட்டத்தில் பணிபுரியும் இந்திய ராணுவ வீரர் எஸ் குமார் தடை செய்யப்பட்ட அமைப்பான பிஎஃப்ஐ உறுப்பினர்களால் தாக்கப்பட்டார். அவரை கட்டி வைத்து அடித்து, முதுகில் PFI என எழுதப்பட்டிருந்தது. குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் இந்திய இராணுவ வீரர் எஸ்.குமார் என்பவரைத் தடை செய்யப்பட்ட PFI (Popular Front of India) அமைப்பினர் தாக்கியுள்ளனர். மேலும் அவரது முதுகில் PFI என பெயிண்ட்டால் எழுதியுள்ளனர் என டைம்ஸ் நவ் செய்தி வீடியோ ஒன்று வலதுசாரிகளால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
In a shocking incident, a serving soldier of Bharat’s Army, S Kumar was mercilessly beaten by the terrorists of PFI organisation in Kollam district, Kerala.
The Jihadis further wrote PFI on the back of our Soldier S Kumar. It is high time the Communist government in Kerala… pic.twitter.com/osV898j7ni
— C T Ravi 🇮🇳 ಸಿ ಟಿ ರವಿ (@CTRavi_BJP) September 25, 2023
இதே செய்தி கர்நாடகா, கேரளா மட்டுமின்றி தேசிய அளவிலான பாஜகவினரால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
A year after PFI’s ban, Kerala remains ensnared in its web of terror. A soldier attacked in Kollam had ‘PFI’ branded on him, echoing the strife of pre-Article 370 Kashmir. Recent NIA probe implicates police officer leaking intel to PFI, exposing Kerala Home Dept’s complicity. Why… pic.twitter.com/pde0Q6iQJV
— K Surendran (@surendranbjp) September 25, 2023
A serving jawan was assaulted , his hands tied up , and PFI was paint written on his back by anti social miscreants in Kollam , Kerala yesterday. Saddened and shocked that even our armed forces personnel who we owe much for their bravery and sacrifices find no safety in Kerala.… https://t.co/1kjFGkDtj3
— Anil K Antony (@anilkantony) September 25, 2023
உண்மை என்ன ?
கேரளாவில் இராணுவ வீரரை PFI அமைப்பினர் தாக்கியதாகப் பரவும் செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டதில், இராணுவ வீரர் அப்படி ஒரு சம்பவத்தை தனது நண்பரை வைத்து போலியாகச் சித்தரித்து நாடகமாடியுள்ளார் என்பதை அறிய முடிந்தது.
பரவும் செய்தியின் முக்கிய வார்த்தைகள் மற்றும் வீடியோவின் கீப்ரேம்களை கொண்டு தேடியதில், ‘Madhyamam’ எனும் தளத்தில் வெளியான செய்தி கிடைக்கப் பெற்றது.
ஷைன் குமார் என்பவர் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறையில் கேரளா வந்த அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நண்பரின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு ஒரு குழுவினரால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அக்கும்பல் தன்னை உடல்ரீதியாகத் தாக்கியது மட்டுமின்றி தனது சட்டையைக் கிழித்து, பச்சை நிற பெயிண்ட் கொண்டு தனது முதுகில் ‘PFI’ என்று எழுதியதாகவும் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்த விசாரணையில், இச்சம்பவம் முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்டது என ஷைனின் நண்பர் ஜோஷி காவல் துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், ஷைனின் முதுகில் ‘PFI’ என்று எழுதப் பயன்படுத்தப்பட்ட பெயிண்ட், ப்ரெஷ் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஜோஷி அளித்த வாக்கு மூலம் ‘News 9 Live’ தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அவர் கூறுகையில், ‘ஷைன் அவரது முதுகில் PFI என எழுதச் சொன்னார். நான் DFI என நினைத்து எழுதிவிட்டேன். பிறகு அதனை அழித்து விட்டு PFI என மீண்டும் எழுதச் சொன்னார். மேலும் அவரை அடிக்க முடியுமா எனக் கேட்டார். நான் மது போதையில் இருந்ததினால் என்னால் அதைச் செய்ய முடியவில்லை.
அவர் தரையில் படுத்துக் கொள்வதாகவும், என்னை இழுத்து வரும்படியும் கூறினார். அவரது எடையின் காரணமாக என்னால் அதையும் செய்ய முடியவில்லை. அவர் பிரபலமடைய வேண்டும் என்று என்னிடம் கூறினார்’. ஜோஷி பேசிய வீடியோவும் அத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
மேலும் ‘Twenty Four news’ என்ற மலையாள தளத்திலும் இதே செய்தி வெளியாகியுள்ளது. ஷைன் குமார் என்ற இராணுவ வீரர் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக PFI அமைப்பினரால் தான் தாக்கப்பட்டதாகத் தனது நண்பரை வைத்து நாடகமாடியுள்ளார். இது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விசாரணைக்கு முன்னர் இராணுவ வீரர் புகார் அளித்த உடனே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியே தற்போது பரவி வருகிறது.
மேலும் படிக்க : மனைவியை மானபங்கம் செய்ததாக பரபரப்பை ஏற்படுத்திய இராணுவ வீரரின் சதித்திட்டம் அம்பலம் !
தமிழ்நாட்டில் இராணுவ வீரரின் மனைவி தாக்கப்பட்டதாக இதே போன்று ஒரு நாடகத்தினை அரங்கேற்ற முற்பட்டபோது, இராணுவ வீரர் செல்போனில் பேசிய சதி திட்டத்தை யூடர்ன் அம்பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : தமிழ்நாட்டில் இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பில்லை என உருவாக்கப்படும் பொய் பிரச்சாரம்.. முழு தகவல் !
முடிவு :
கேரளாவில் இராணுவ வீரர் PFI அமைப்பினரால் தாக்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மை அல்ல. இராணுவ வீரர் தான் பிரபலமடையத் தனது நண்பரை வைத்து போலியாக நாடகமாடியுள்ளார் என்பது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.