கலெக்டர் பிராமணர் என்பதால் முஸ்லீம்கள் போராட்டம் நடத்தியதாக வதந்தி பரப்பும் இந்து மக்கள் கட்சி !

பரவிய செய்தி
கேரளாவின் ஆலப்புழாவில் புதிதாக நியமிக்கப்பட்ட பிராமண கலெக்டரை எதிர்த்து முஸ்லீம் ஊர்வலம் நடத்தியுள்ளனர்.
மதிப்பீடு
விளக்கம்
கேரளாவின் ஆலப்புழா மாவட்ட ஆட்சியராக இந்து மதத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லீம்கள் போராட்டம் நடத்தியதாக 30 நொடிகள் கொண்ட ஊர்வல வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. மேலும், முஸ்லீம்கள் புதிதாக நியமிக்கப்பட்ட பிராமண மாவட்ட ஆட்சியருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம் சென்றதாக இந்து மக்கள் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது.
In mallapuram Kerala ystrday, Muslims opposing the new Brahmin IAS collector, took out a procession,
Media cunningly avoided this and highlighted ABVP in Karnataka.
Listen to the slogans.@KapilMishra_IND@Tejasvi_Surya@MajorPoonia
pic.twitter.com/GYoADyCBYo— RAVI RAJGURU 🇮🇳 (@ravirajguru_1) August 1, 2022
உண்மை என்ன ?
கேரளாவின் மலப்புரத்தில் முஸ்லீம்கள் நடத்தியப் போராட்டம் குறித்து தேடிய போது, “ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் நியமனத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான பேர் போராட்டம் நடத்தி உள்ளனர். மலபாரில் நடைபெற்ற ஊர்வலத்தில் சன்னி யுவஜனா சங்கம் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக ” ஜூலை 31-ம் தேதி நியூஸ் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
பத்திரிகையாளர் கே.எம்.பஷீர் மரணத்தில் முக்கிய குற்றவாளியான ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கடராமன் ஆலப்புழாவின் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலபார் மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் ஜூலை 30-ம் தேதி கண்டன ஊர்வலங்கள் நடைபெற்று இருக்கிறது.
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டில் ஸ்ரீராம் வெங்கடராமன் மதுபோதையில் ஓட்டி வந்த கார் பத்திரிகையாளர் பஷீரின் பைக்கை மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பஷீர் உயிரிழந்து உள்ளார். 35 வயதான பஷீர் மலையாள நாளிதழான சிராஜின் திருவனந்தபுரப் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். விபத்து நிகழ்ந்த போது ஸ்ரீராம் வெங்கடராமன் நில அளவை மற்றும் நில பதிவேடுகள் துறை இயக்குநராக இருந்தார்.
” பத்திரிகையாளர் பஷீர் இறந்து ஆறு மாதங்களுக்கு பிறகு காவல்துறை குற்றப்பத்திரிகை சமர்பித்தது. ஆனால், வழக்கில் விசாரணை தொடங்கவில்லை. மேலும், மதுபோதையில் காரை ஓட்டி பஷீர் மரணத்திற்கு காரணமானவர் எனக் குற்றம்சாட்டப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கடராமன் மீண்டும் பணிக்கு திரும்பியதாக ” 2020-ல் தி நியூஸ் மினிட் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
கேரளா மருத்துவ சேவை கழகத்தின் இயக்குநராக பணியாற்றி வந்த ஸ்ரீராம் வெங்கடராமனை ஆலப்புழாவின் மாவட்ட ஆட்சியாராக இடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதை திரும்பப்பெற கூறி போராட்டம் மற்றும் கண்டன ஊர்வலம் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று உள்ளது.
ஸ்ரீராம் வெங்கடராமனின் நியமனத்திற்கு எதிராக முஸ்லீம் அமைப்புகள் மட்டும் போராடவில்லை. கேரளாவின் பத்திரிகையாளர் சங்கமான KUWJ மற்றும் மாவட்ட காங்கிரஸ் கட்சியும் போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிலையில், ஸ்ரீராம் வெங்கடராமனின் நியமனத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்ததால், அவரின் நியமனத்தை கேரளா அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஆலப்புழாவின் புதிய மாவட்ட ஆட்சியராக கிருஷ்ண தேஜா எனும் இந்து மதத்தைச் சேர்ந்தவரே நியமிக்கப்பட்டு உள்ளார்.
முடிவு :
நம் தேடலில், கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பிராமணர் சமூகம் மற்றும் இந்து மதத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லீம்கள் போராட்டம் நடத்தியதாகப் பரப்பப்படும் தகவல் பொய்யானது.
பத்திரிகையாளர் பஷீர் மரணத்தில் முக்கிய குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டு உள்ள ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கடராமனின் நியமனத்திற்கு அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முஸ்லீம் அமைப்புகள் மட்டுமல்லாமல் பிற அமைப்பினர் மற்றும் கட்சியினர் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. தற்போது புதிய மாவட்ட ஆட்சியராகவும் ஓர் இந்துவே நியமிக்கப்பட்டு உள்ளார் என அறிய முடிகிறது