கேரளா பேருந்தில் இந்து பெண்ணை புர்கா அணியச் சொன்ன முஸ்லீம் பெண்கள் எனப் பரவும் வதந்தி !

பரவிய செய்தி
புர்கா அணிய சொல்லி.. கேரளாவில் இந்து பெண்ணை சூழ்ந்த முஸ்லிம் பெண்கள் . பேருந்தில் பயணம் செய்ய எதிர்ப்பு.. எல்லா புகழும் பினாரயி மாடல் அரசு சேரும்.. விரைவில் தமிழ்நாட்டில் நடக்கும்..
மதிப்பீடு
விளக்கம்
கேரளா மாநிலத்தில் பேருந்தில் பயணித்த இந்து பெண் ஒருவரை சூழ்ந்த முஸ்லீம் பெண்கள், அவர் பேருந்தில் பயணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததாகவும், புர்கா அணியச் சொல்லி வற்புறுத்தியதாகவும் கூறி 50 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்றை வலதுசாரி ஆதரவாளர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
புர்கா அணிய சொல்லி.. கேரளாவில் இந்து பெண்ணை சூழ்ந்த முஸ்லிம் பெண்கள் .
பேருந்தில் பயணம் செய்ய எதிர்ப்பு..
எல்லா புகழும் பினாரயி மாடல் அரசு சேரும்..
விரைவில் தமிழ்நாட்டில் நடக்கும்.. pic.twitter.com/WTmoHBjweK— HINDUSTHANI🌴🔥 (@RudramurthiMur4) October 28, 2023
One more international Handle. What a shame Kerala @CMOKerala https://t.co/XQx6WHJpPY
— Devi Uvacha|உவாச| उवाच 🇮🇳 (@Devi_Uvacha) October 27, 2023
வைரல் செய்யப்படும் வீடியோவில், பேருந்திற்கு வெளியே பேருந்து நடத்துனர், ஓட்டுநர் உடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர், பேருந்திற்கு உள்ளே இந்து பெண் ஒருவருடன் புர்கா அணிந்த பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
உண்மை என்ன ?
வீடியோவில் பேசும் பெண்கள், இது உங்கள் பேருந்தா, இது உங்க இடமா ? எனப் பேசும் வார்த்தைகளையே கேட்க முடிந்தது. இதைத் தவிர்த்து வீடியோவில் தெளிவாக எந்த விவரங்களும் கிடைக்கவில்லை.
ஆகையால், வீடியோ குறித்து தேடுகையில், Reporter Live எனும் முகநூல் பக்கத்தில், புர்கா அணிந்த பெண்கள் பேருந்து முன்பாக போராடும் காட்சிகளை கொண்ட வீடியோவைப் பதிவிட்டு இருந்தனர். இந்த வீடியோவில் இடம்பெற்ற பேருந்தின் நிறம், பேருந்து முன்பாக எழுதப்பட்ட பெயர், பெண்களின் உடை உள்ளிட்டவை வைரல் செய்யப்படும் வீடியோ உடன் ஒத்துப்போகின. இந்த வீடியோ பதிவில் பேருந்தை நிறுத்துவது தொடர்பாக பிரச்சனை என்றும், காசர்கோடு, மாணவர்கள் பிரச்சனை என்ற ஹாஸ்டாக்களும் இடம்பெற்றுள்ளன.
2023 அக்டோபர் 22ம் தேதி வெளியான Reporter Live கட்டுரையில், கும்பளா – முல்லேரியா பகுதியில் பாஸ்கரா நகரில் கான்ஸா பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கான்ஸா பெண்கள் கல்லூரி முன்பாக சில பேருந்துகள் நிறுத்துவதில்லை, இதனால் பேருந்தை அங்கு நிறுத்த வேண்டும் என மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றுள்ளது.
இதுதொடர்பாக, யூடர்ன் தரப்பில் இருந்து கும்பளா காவல் நிலையத்தின் அதிகாரியைத்(SHO) தொடர்பு கொண்டு பேசுகையில், ” பேருந்தில் நடந்த சம்பவம் தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது. இச்சம்பவம் டாக்டர்ஸ் மருத்துவமனை அருகே உள்ள கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்துவது தொடர்பாக நிகழ்ந்தது. பேருந்தை நிறுத்துவது தொடர்பாகவே மாணவிகள் வாக்குவாதம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அந்த சம்பவத்தில் மதரீதியான எந்த காரணமும் இல்லை ” எனத் தெரிவித்து இருந்தார்.
வைரல் செய்யப்படும் வீடியோவில் இடம்பெற்ற சம்பவம் கும்பளா மற்றும் நாராயண மங்கலம் இடையே கான்ஸா பெண்கள் கல்லூரி பகுதியில் பேருந்தை நிறுத்த வேண்டும் என்ற பிரச்சனையில் அக்கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் பேருந்து ஊழியர்கள் மற்றும் வீடியோவில் இடம்பெற பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கும்பளா மற்றும் நாராயண மங்கலம் பகுதிக்கு இடையே கான்ஸா பெண்கள் கல்லூரி, டாக்டர் மருத்துவமனை ஆகியவை இருப்பதை கூகுள் மேப் மூலம் அறிய முடிந்தது.
மேலும் படிக்க : கேரளா மாலில் பெண்கள் கழிவறைக்குள் நுழைந்தவர் முஸ்லீம் எனப் பொய் பரப்பும் சரவண பிரசாத் !
மேலும் படிக்க : ஓம் என்ற வார்த்தையைக் கேரளாவில் தடை செய்ய இஸ்லாமியர்கள் வலியுறுத்தியதாக வதந்தி !
முடிவு :
நம் தேடலில், கேரளா மாநிலத்தின் பேருந்தில் பயணித்த இந்து பெண்ணை புர்கா அணிய சொன்னதாகவும், பேருந்தில் பயணிக்க முஸ்லீம் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் பரவும் தகவல் பொய்யானது. இச்சம்பவம் கான்ஸா பெண்கள் கல்லூரி பகுதியில் பேருந்தை நிறுத்த வேண்டும் என மாணவிகள் பேருந்து ஊழியர்கள் மற்றும் பேருந்தில் பயணித்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிகிறது.