கேரளாவில் சாதி மறுப்பு தம்பதியினரின் குழந்தைகளுக்கு தனி இடஒதுக்கீடா ?

பரவிய செய்தி

ஜாதி மறுப்பு தம்பதியினர்களின் குழந்தைகளை ” ஜாதியற்றவர் ” என தனி பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு – பினராயி விஜயன்

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

கேரளாவில் சாதி மறுப்பு திருமணம் செய்யும் தம்பதிகளின் குழந்தைகளுக்கு ” ஜாதியற்றவர் ” எனும் தனிப் பட்டியலில் உருவாக்கி அவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க பினராயி விஜயன் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளதாக சமூக வலைதளங்களில் இப்பதிவு வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Advertisement

ஆனால், இப்பதிவு கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து தமிழில் முகநூல் உள்ளிட்டவையில் வைரலாகி இருக்கிறது என்பதை அறிய நேர்ந்தது. கடந்த 2018-ம் ஆண்டிலும் ஒருமுறை பகிரப்பட்டு உள்ளது.

Archive link 

இப்படி 3 ஆண்டுகளுக்கு மேலாக சமூக வலைதளங்களில் கேரளா முதல்வர் பினராயி விஜயனைப் பாராட்டி வைரலாகும் தகவல் உண்மையா என ஆராய்ந்து பார்க்கத் தீர்மானித்தோம்.

உண்மை என்ன ? 

கேரளாவில் சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களின் குழந்தைகளுக்கு அல்லது சாதியற்றவர் என தனிப் பட்டியல் உருவாக்கி தனி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து செய்திகள் ஏதும் வெளியாகி இருக்கிறதா எனத் தேடுகையில், அவ்வாறான எந்த செய்தியும் கிடைக்கவில்லை.

Advertisement

மாறாக, 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் கேரள இடதுசாரி அரசாங்கம், மாநிலத்தின் தேவஸ்வம் வாரிய பணித் தேர்வில் முன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதாக அறிவித்த செய்தியே கிடைத்தது.

சாதி மறுத்து கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு சாதி சான்றிதழ் பெறுவதிலும், இடஒதுக்கீடு பெறுவதிலும் சிரமங்கள் இருந்துள்ளன. வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்யும் போது, தந்தையின் சாதியிலேயே குழந்தைக்கு சாதி சான்றிதழ் பெற வேண்டும் என்கிற நிலை இருந்தது.

குழந்தையின் தாய் எஸ்.சி/எஸ்.டி சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அந்த பிரிவில் சான்றிதழ் எளிதில் பெற முடியாத நிலை கேரளா மட்டுமின்றி இந்தியா முழுவதுமாக இருந்தது. இது தொடர்பான பல வழக்குகள் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளன. தற்போது தாயின் சாதி பிரிவிலும் சான்றிதழ் பெறலாம் என்கிற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கேரளாவில் சாதியற்றவர் தனி இடஒதுக்கீடு என பரவும் தகவல் குறித்து தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின்(மார்க்சிஸ்ட்) சிந்தன் அவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது, ” கலப்பு திருமணம் செய்தவர்களுக்கான உதவித் தொகை போன்ற பல விசயங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள இடஒதுக்கீடு கொள்கை என்னவென்றால், இருவர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரில் யார் பின்தங்கிய வகுப்பை சேர்ந்தவர்களோ அந்த பிரிவை எடுத்துக் கொள்ளலாம். சாதியற்றவர்கள் எனும் பகுதி இடஒதுக்கீடு முறையை குழப்பமடையச் செய்யும்.

முன்னேறிய வகுப்பில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், முன்னேறிய வகுப்பினர்-பட்டியலின பிரிவில், எஸ்.சி-எஸ்.டி பிரிவுக்குள் இருப்பவர்களும் என எப்படி திருமணம் செய்து கொண்டாலும் அதுவும் சாதி மறுப்பு திருமணமே. இப்படி சாதி மறுப்பு திருமணம் வெவ்வேறு வகையாக இருக்கும் போது பின்தங்கிய நிலை மாறுகிறதல்லவா. கண்டிப்பாக, ஒரு கம்யூனிஸ்ட் கட்சி ” சாதியற்றவர்கள் ” என வகைப்படுத்த வாய்ப்பு குறைவு. அந்த நிலையை நாங்கள் எடுப்பதில்லை ” என பதில் அளித்து இருந்தார்.

மேலும் படிக்க :  கல்வித்தரத்தை உயர்த்துவோம் என பினராயி விஜயன் கூறினாரா?

2020 மார்ச் மாதம் வெளியான செய்தியில், ” சாதி மற்றும் மதம் கடந்து திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் பாதுகாப்பாக ஓராண்டு வரையில் தங்குவதற்கு காப்பகங்களை அமைக்க கேரளா அரசு முடிவு செய்து உள்ளதாக ” வெளியாகி இருக்கிறது

கலப்பு திருமணம் செய்யும் தம்பதிகள் பொதுப் பிரிவினராக இருந்து, ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் சுயவேலைவாய்ப்புக்கான நிதியுதவியாக ரூ.30,000 வரையும், தம்பதிகளில் ஒருவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில் ரூ.75,000 வரை கேரள சமூக நீதித்துறை நிதியுதவி அளித்து வருகிறது. மேலும், கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் அரசு பணியில் இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கு பணியில் இடமாற்றம் அளிக்க முன்னுரிமை அளிக்கப்படும். எனினும், வேலையில் இடஒதுக்கீடு வழங்க எந்தவொரு சட்டமும் இல்லை.

மேலும் படிக்க : கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நடிகர் விஜய் புகைப்படமா ?

முடிவு :

நம் தேடலில், கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஜாதி மறுப்பு தம்பதியினர்களின் குழந்தைகளை ” ஜாதியற்றவர் ” என தனி பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க உத்தரவு பிறப்பித்து உள்ளதாக கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பரவும் தகவல் தவறானது. அப்படியான எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களும் இல்லை என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button