This article is from Jul 13, 2019

எலும்பும், தோலுமாக இருக்கும் மாடுகளின் நிலைக்கு கேரள அரசு காரணமா ?

பரவிய செய்தி

ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் கோசாலையில் இருக்கும் பசுக்களின் நிலை. கோவில் பணத்தை மட்டுமே குறி வைக்கும் கம்யூனிசம், கோவில் பசுக்களை பட்டினிப் போட்டு கொடுமைப்படுத்தும் அவலம்.

மதிப்பீடு

சுருக்கம்

போதிய உணவுகள், ஊட்டச்சத்துக்கள், பராமரிப்பு இல்லாமல் எலும்பும், தோலுமாய் இருக்கும் மாடுகள் கேரளாவில் உள்ள பத்மநாபசுவாமி கோவில் கோசாலை ட்ரஸ்ட் எனும் தனியார் ட்ரஸ்ட்-க்கு சொந்தமானவை. மாடுகள் தொடர்பாக கேரளா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

விளக்கம்

2013-ம் ஆண்டில் கலப்படமற்ற பாலினை கோவிலுக்கு வழங்க கோசாலை அல்லது பசுக்களின் வசிப்பிடமானது புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்கு அருகே உள்ள பகுதியில் அனுமதியோடு அமைக்கப்பட்டது. ஆனால், இன்று கோசாலையில் இருக்கும் மாடுகளின் நிலை மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது.

பத்மநாபசுவாமி கோவிலுக்கு அருகே குதிர மாலிகா அரண்மனைக்கு அருகே அமைந்து இருக்கும் கோசாலையில் 12 கன்றுகள் உள்பட மொத்தம் 30 மாடுகள் உள்ளன. கோசாலையில் மாடுகளுக்கு என சரியான உணவுகள் இல்லை, மறைவிடமாக தார் பாய்கள் வைத்தே கூரைகள் போன்று அமைந்து உள்ளனர். அதுவும் மழையால் கிழிந்து தொங்கும் நிலையில் இருக்கிறது.

சமீபத்தில் கோசாலையில் எலும்பும், தோலுமாய் இருந்த கன்றானது நாயால் கடித்து தாக்கப்பட்டதில் பரிதாபமாக இறந்தது. மாடுகள் வசிப்பிடம் இருக்கும் பகுதியை சுற்றியுள்ள மக்கள் மற்றும் வணிகர்கள் மேயர் வி.கே பிரசாத் அவர்களுக்கு அளித்த புகாரால் மாடுகளின் அவலநிலை கேரளா அரசின் பார்வைக்கு சென்றது.

இதனை அறிந்த கேரளாவின் தேவசம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் மாடுகள் வசிக்கும் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள நிலையை அறிந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், ” மாடுகளின் சாணங்கள் மற்றும் கழிவுகள் சரியான நேரத்தில் அகற்றப்படாமல் இருப்பதையும், மாடுகளுக்கு சரியான நேரத்திற்கு உணவுகள் வழங்கப்படவில்லை என்பதையும் காண முடிந்தது ” என கூறி இருந்தார்.

அமைச்சர் சுரேந்திரரின் வருகைக்கு பின் அமைச்சர் வனத்துறை அமைச்சார் கே.ராஜு மாடுகளின் நிலையை பார்வையிட்ட பிறகு, கேரள அரசிற்கு சொந்தமான மாடுகளுக்கான தீவனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் உதவியுடன் 15 மூட்டைகள் தீவனம் கோசாலைக்கு அளிக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும், மாடுகளின் உடல்நிலையை பரிசோதிக்க மருத்துவர்கள் குழுவை அரசு உடனடியாக அனுப்பி வைப்பதாக தெரிவித்து இருந்தார்.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்கு மற்றொரு கோசாலையில் இருந்தும் பால் விநியோகம் செய்யப்படுகிறது. மாடுகள் எலும்புக்கூடுகளாய் இருக்கும் கோசாலை பத்மநாபசுவாமி கோவில் கோசாலை ட்ரஸ்ட் எனும் தனியார் ட்ரஸ்ட்-க்கு சொந்தமானது. ட்ரஸ்ட் மூலம் சரியாக நிதி வழங்கப்படாததே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என அமைச்சர் சுரேந்திரன் தெரிவித்து இருந்தார்.

ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில் கோசாலை ட்ரஸ்ட் எனும் தனியார் ட்ரஸ்ட்-ல் நடிகர் மற்றும் பிஜேபி எம்பியான சுரேஷ் கோபியும் ஒரு அங்கமாக இருப்பதாக அமைச்சர் தரப்பில் கூறப்பட்டது.

முடிவு :

கேரளாவில் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில் கோசாலை ட்ரஸ்ட் எனும் தனியார் ட்ரஸ்ட்-க்கு சொந்தமான கோசாலையில் 12 கன்றுகள் உள்பட 30 மாடுகள் முறையான உணவுகள், பராமரிப்புகள் இல்லாததால் எலும்புக்கூடுகளாய் காட்சியளிக்கின்றன என்பது உண்மையே.

மாடுகள் தொடர்பாக பரவும் படங்கள் உண்மையான படங்களே என அறிந்து கொள்ள முடிந்தது. அங்கு பசுக்கள் மட்டுமல்ல 12 கன்றுகள் உடன் மொத்தம் 30 மாடுகள் உள்ளன.

தனியார் ட்ரஸ்ட்-க்கு சொந்தமான கோசாலையில் உள்ள மாடுகளுக்கு தேவையான மருத்துவம், தீவனம் உள்ளிட்ட அனைத்து உதவிகளை கேரளா அரசு அளிப்பதாக தெரிவித்து உள்ளனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader