கேரளாவில் மிளிரும் விளக்குடன் பயணிக்கும் 240 படகுகள் என சீனாவின் வீடியோவைப் பதிவிட்ட மாலைமுரசு !

பரவிய செய்தி

கேரளாவில் தொடரும் தீபாவளி கொண்டாட்டம்..! தீபோத்ஸவத்தையொட்டி மிளிரும் விளக்குகளுடன் ஆற்றில் பயணிக்கும் 240 படகுகள்.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

கேரளாவில் தீபோத்ஸவத்தை முன்னிட்டு மிளிரும் விளக்குகளுடன் 240 படகுகள் ஆற்றில் பயணிப்பதாக 45 நொடிகள் கொண்ட வீடியோவை மாலை முரசு சேனலின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது. மேலும், இந்திய அளவில் பலரும் இவ்வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை என்ன ? 

கேரளாவின் தீபோத்ஸவம் எனப் பரப்பப்படும் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், “2022 மே 20ம் தேதி Reddit இணையதளத்தில் ” Glowing bamboo dragon chasing the pearl over the Yulong River’ எனும் தலைப்பில் இவ்வீடியோ பதிவாகி இருக்கிறது. 2022 மே 20ம் தேதி ‘Discover Guangxi China’ எனும் ட்விட்டர் பக்கத்திலும் பதிவாகி இருக்கிறது. 

2022 ஜூன் 30ம் தேதியன்று, ” டிஸ்கவர் குவாங்சி சைனா ” எனும் யூடியூப் சேனலில் ” யுலாங் ஆற்றின் மீது ஒளிரும் மூங்கில் டிராகன் முத்துவைத்(Pearl) துரத்துவதைப் பாருங்கள் ” என்ற தலைப்பில் இதே வீடியோ வெளியாகி இருக்கிறது.

யுலாங் ஆற்றின் நற்பெயரை அதிகரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 19ம் தேதியன்று 12வது சீன சுற்றுலா தினத்தின் கொண்டாட்டமாக இவ்வாறு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சீனாவின் யுலாங் கிராமத்தில் உள்ள யுலாங் ஆற்றின் குறுக்கே 70  மீட்டர் நீளமுள்ள ” டிராகன் ” வடிவில் மிளிரும் விளக்குகளுடன் கூடிய 80 மூங்கில் படகுகள் இரவில் பயணிப்பது பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றன.

முடிவு : 

நம் தேடலில், கேரளாவில் தொடரும் தீபாவளி கொண்டாட்டம், தீபோத்ஸவத்தையொட்டி மிளிரும் விளக்குகளுடன் ஆற்றில் பயணிக்கும் 240 படகுகள் என பரப்பப்படும் வீடியோ கேரளாவைச் சேர்ந்தது அல்ல. சீனாவின் யுலாங் ஆற்றில் ட்ராகன் வடிவில் மிளிரும் விளக்குகளுடன் மூங்கில் படகுகள் பயணிக்கும் காட்சி என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader