கேரளாவில் முஸ்லீம் நபர் யானைக்கு இறைச்சி கொடுத்ததாக பரப்பப்படும் வதந்தி வீடியோ!

பரவிய செய்தி
இந்த கேரள முஸ்லிம் தோழர் யானைக்கு இறைச்சி கொடுக்க முயன்றார். என்ன நடந்தது என்று பாருங்கள். இவர் முட்டாளா அல்லது மிருகங்களைக் கூட மதம் மாற்ற பார்க்கிறார்களா? (அவர்களின் திமிர் )..Twitter Link | Archive Link
மதிப்பீடு
விளக்கம்
கேரளாவில் மர வியாபாரம் மற்றும் கோவில் திருவிழாக்களுக்காவே யானைகள் அதிகமாக வளர்க்கப்பட்டு வருகின்றன. எனவே இந்தியாவில் யானைகள் அதிகமாகக் கொண்ட மாநிலங்களில் கேரளா மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் தற்போது கேரளாவில் முஸ்லீம் நபர் ஒருவர் யானைக்கு இறைச்சி கொடுக்க முயல்கிறார், கேரளாவில் மிருகங்களைக் கூட மதம் மாற்ற பார்க்கிறார்கள் என்று கூறி ஒரு குழந்தையும், தந்தையும் யானைக்கு உணவளிக்க செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் குழந்தை உணவு கொடுக்கும் போது அந்த யானை மதம் கொண்டு அக்குழந்தையை தாக்குவதாகவும், யானையிடமிருந்து தன்னுடைய குழந்தையை அந்த தந்தை காப்பாற்றுவதாகவும் அவ்வீடியோ அமைந்துள்ளது.
உண்மை என்ன?
தற்போது பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், அந்த வீடியோ கடந்த ஆண்டு 2022-ல் இருந்தே சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளதை காண முடிந்தது.
This Kerala muslim fellow tried to give meat to the elephant….see what happened. Are these fellows born idiots or are they trying to convert even animals to islam? pic.twitter.com/r9cviAGr5C
— राहुल आर्यन 🚩🚩🚩#३ह👈 (@RahulAr58428507) April 13, 2022
எனவே இதன் உண்மை தன்மை குறித்து மேலும் ஆய்வு செய்து பார்த்ததில், கேராளாவின் மலப்புரம் மாவட்டம் கீழ்பரம்பா (Kizhuparamba) என்னும் ஊரில் கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
மேலும் இந்த யானையின் பெயர் “கொலக்காடன் மினி” என்பதையும், அந்த சிறுவன் இறைச்சியைக் கொடுக்கவில்லை, தேங்காய் கொடுக்க சென்றுள்ளான் என்பதையும் அந்த யானையின் பராமரிப்பாளரான கொலக்காடன் நாசர் கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியாவின் கேரள வெளியீடான மலையாளம் சமயம் எனும் ஊடகம், 2022 ஏப்ரல் 8 அன்று வெளியிட்டுள்ள கட்டுரையின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
கேரளாவைச் சேர்ந்த ஏசியாநெட்நியூஸ் தனது யூடியூப் பக்கத்தில் 2022 ஏப்ரல் 6 அன்று இந்த செய்தி குறித்து, “உணவளிக்கும் போது தந்தை மற்றும் மகன் மீது யானை தாக்குதல்” என்னும் தலைப்பில் வீடியோ வெளியிட்டுள்ளதை காண முடிந்தது.
ஏசியாநெட்நியூஸ் செய்தி தொகுப்பாளர் ஒருவர் அந்த வீடியோவில், “கீழ்பரம்பில் யானைக்கு உணவளிக்கும் போது தந்தை-மகன் இருவரும் யானையால் தாக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக தனது குழந்தையை அந்த தந்தை மீட்டு விட்டார். அந்த யானை கொலக்காடன் நாசர் என்பவருடையது. ஆறு மாதத்திற்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது.” என்று கூறுவதை காண முடிந்தது.
2022 ஏப்ரல் 8 அன்று Nabeel Kunhappu என்பவரது முகநூல் பக்கத்தில், “யானையின் பிடியில் இருந்து குழந்தையை காப்பாற்றிய சம்பவம் பற்றி தந்தை கூறுவது என்ன? ஒரு சிலருக்கு உண்மை தெரியட்டும், எனவே அனைவரும் அதிகபட்சமாக பகிர வேண்டும்.” என மலையாளத்தில் குறிப்பிட்டு வீடியோ பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. மேலும் அதில் பேசிய அக்குழந்தையின் தந்தை நாங்கள் இறைச்சியைக் கொடுக்கவில்லை தேங்காயைத் தான் கொடுத்தோம் என்று கூறுவதைக் காண முடிந்தது.
மேலும் படிக்க: கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஆதரவு பெண்ணை முஸ்லீம்கள் கொலை செய்ததாகப் பரப்பப்படும் வதந்தி !
இதற்கு முன்பும் கேரள முஸ்லீம்கள் ஆர்எஸ்எஸ் ஆதரவு பெண்ணை தாக்கியதாகவும், அரசு கோவில்களில் முஸ்லீம், கிறஸ்துவ பாதிரியார்கள் நியமிக்கப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டன. இதுகுறித்தும் ஆய்வு செய்து யூடர்ன் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறது.
மேலும் படிக்க: கேரள அரசு கோவில்களில் முஸ்லீம், கிறிஸ்தவ பாதிரியார்களை நியமித்ததாகப் பரப்பப்படும் வதந்தி !
முடிவு :
நம் தேடலில், கேரளாவில் முஸ்லீம் நபர் யானைக்கு இறைச்சி கொடுக்கச் சென்றதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதையும், அந்த குழந்தை உண்மையில் யானைக்கு சாப்பிட தேங்காயை கொடுக்கச் சென்றுள்ளது என்பதையும் அறிய முடிகிறது.