கேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் !

பரவிய செய்தி

மலப்புரம் மலம் தின்னும் புரமா…? பசியுடன் வந்த கர்ப்பிணி யானையை வெடி வைத்து கொன்ற கொடூரம். இஸ்லாமியர் 70 சதவிகிதம் உள்ள கேரள மாநிலம் மலப்புரத்தில் வெடிமருந்து வைத்து கொடுத்த அன்னாசி பழத்தை உண்டதால் காயமடைந்து கர்ப்பிணி யானை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

கேரளாவில் கர்ப்பமாய் இருந்த யானை பசியால் உணவுத் தேடி வந்த வெடிமருந்து வைக்கப்பட்ட அண்ணாச்சி பழத்தினை உண்டு காயமடைந்து இறந்த சம்பவம் இந்திய அளவில் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் பெற்று வருகிறது. இந்த சம்பவதை வைத்து முஸ்லீம் மக்கள் மீதும், அசைவ உணவு பழக்கம் கொண்டவர்கள் மீதும், அரசியல் சார்ந்தும் வெறுப்புணர்வை திணிக்கப்படும் பதிவுகள் சமூக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

கேரளாவில் 70 சதவீதம் முஸ்லீம் மக்கள் வசிக்கும் மலப்புரத்தில் சிலர் யானைக்கு அண்ணாச்சி பழத்தில் வெடிமருந்தினை வைத்து கொடுத்ததாக சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். இதேபோல், பாகிஸ்தானி-கனேடியன் எழுத்தாளர் தாரிக் ஃபாட்டா என்பவர் NDTV செய்தியுடன் யானை வெடிமருந்து கொடுத்து கொன்ற மலப்புர மாவட்டத்தில் 70 சதவீத முஸ்லீம் மக்கள் வசிப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.

Twitter link | archive link

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட தகவலிலும் மலப்புரம் என்றே இடம்பெற்று உள்ளது.

 

யானை சுற்றித் திரிந்தது மலப்புர மாவட்டத்தில் அல்ல, பாலக்காடு மாவட்டத்தில் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். NDTV செய்தியில் முதலில் யானை குறித்த செய்தியில் மலப்புரம் மற்றும் யானைக்கு வெடிமருந்து வைத்து அண்ணாச்சி பழத்தினை யாரோ கொடுத்ததாக வெளியிட்டு பின்னர் பாலக்காடு பகுதி என்றும், யானை பழத்தை உண்டதாக ஜூன் 3-ம் தேதி அப்டேட் செய்துள்ளனர்.

மேலும், இந்த செய்தியை எழுதிய ஷைலஜா வர்மா தன் ட்விட்டர் பக்கத்தில், கேரளா யானை செய்தியில் முதலில் மாவட்டத்தின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும், அது தெரிய வந்த பிறகு மாற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

Facebook link

NDTV செய்தி தன்னுடைய கட்டுரையில் சம்பவம் நிகழ்ந்தது பாலக்காடு உள்ளிட்ட விவரங்களை மாற்றிய பிறகு Postcard எனும் முகநூல் பக்கத்தில் இரண்டு ஸ்க்ரீன்ஷார்ட்களை வட்டமிட்டு காண்பித்து உள்ளனர். மேலும், குற்றவாளிகளின் பெயர்கள் அன்சாத் அலி, தமீம் சாயிக் என அறிந்த பிறகு மாற்றியதாக கூறியுள்ளார்கள்.  மூன்று பேரை விசாரணைக்கு உட்படுத்தி உள்ளதாகவே கேரள மாநிலம் தரப்பில் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், அன்சாத் அலி, தமீம் சாயிக் என்ற பெயரில் யாரையும் கைது செய்தார்களா என்ற விவரங்கள் எங்கும் இல்லை.

Twitter link | archive link 

NDTV செய்தி மட்டுமின்றி பல செய்திகளில் மலப்புரத்தில் யானைக்கு அண்ணாச்சியில் வெடிமருத்தினை வைத்துக் கொடுத்ததாக தவறாக வெளியிட்டு உள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் உடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சம்பவம் நிகழ்ந்தது பாலக்காடு மாவட்டம் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பாலக்காட்டில் உள்ள அமைதி பள்ளத்தாக்கின் தேசிய பூங்கா பகுதியில் இருந்து அருகில் உள்ள கிராமத்திற்கு உணவைத் தேடி வந்த கர்ப்பமாய் இருந்த யானை பசியால் அங்கு இருந்த வெடிமருந்து வைக்கப்பட்ட பழத்தினை உண்டது. இதனால் யானையின் வாய், நாக்கு பகுதிகள் பலத்த காயமடைந்து, பசி கொடுமையுடன் வலியும் சேர்ந்ததால் அங்கிருந்த வெள்ளையாறு ஆற்றுக்குள் இறங்கி நின்று அதிக அளவில் தண்ணீரைக் குடித்து உள்ளது. மூன்று நாட்களாக தண்ணீரில் நின்ற யானையை கும்கி யானைகளை கொண்டு மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இறுதியில் அந்த யானை இறந்து விட்டது. உடற்கூராய்வில் யானை கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

யானை பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அம்பலப்பரா பகுதியில் மே 23-ம் தேதி சுற்றித் திரிந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். மே 27-ம் தேதி யானை வெள்ளையாறு ஆற்றில் இறந்த பிறகு மீட்கப்பட்டது.

வனத்துறையினர் நடத்தி வந்த விசாரணைக்கு பிறகு பயிர் நிலங்களில் காட்டுப் பன்றிகளை கொல்வதற்கு போடப்பட்ட வலையில் யானை பலியாகி இருக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். வன எல்லையில் பன்றிகள் மற்றும் பிற காட்டு விலங்குகளை சிக்க வைக்கவும், கொல்லவும் பழங்கள், கறி உள்ளிட்டவையில் பட்டாசுகள் மற்றும் நாட்டு குண்டுகளை வைத்து பயன்படுத்துவதாக தகவல் கிடைத்துள்ளன. யானை தற்செயலாக அதை சாப்பிட்டு இருக்கலாம் என வனத்துறை அதிகாரி தரப்பில் கூறப்பட்டது. இதுதொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதில் இருந்தே யானைக்கு மக்கள் வெடிமருந்தினை வேண்டுமென்றே பழத்தில் வைத்து கொடுக்கவில்லை எனத் தெரிய வந்தது.

மேலும் படிக்க : பசுவிற்கு வெடிகுண்டை உண்ணக் கொடுத்ததாக வதந்தி.

2018-ல் மத்தியப்பிரதேச மாநிலத்தில் முஸ்லீம்கள் பசுவிற்கு வெடிகுண்டை உண்ணக் கொடுத்ததாக வீடியோக்கள் மற்றும் படங்களை வைரல் செய்தனர். ஆனால், உண்மையில் பன்றிகளுக்கு வைத்த நாட்டு வெடிகுண்டை தவறுதலாக பசு சாப்பிட்டால் வெடித்தது என முன்பே கட்டுரை வெளியிட்டு உள்ளோம்.

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் பசுவிற்கு வெடிகுண்டை உண்ணக் கொடுத்துள்ளனர். அதைக் கடித்த பசுவின் வாய் வெடித்து சிதறியது என்றுக் கூறி சில வகுப்புவாத அமைப்புகளின் வலைதளங்களில் வீடியோக்கள் மற்றும் படங்கள் வெளியாகியுள்ளன.

பயிர்களை நாசம் செய்யும் விலங்குகளை பிடிக்க மற்றும் கொல்வதற்கு சட்டத்திற்கு புறம்பாக இதுபோன்ற வலையை ஏற்படுத்தி வைக்கின்றனர். பல மாநிலங்களில் விலங்குகள் நாட்டு வெடிமருந்து இருக்கும் பழங்களை சாப்பிட்டதால் இறந்ததாக தரவுகள் உள்ளன.

” யானை சம்பவத்தில் அம்பலப்பராவைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் செய்யும் வில்சன் என்ற நபரை கைது செய்துள்ளதாக ” கேரளா வனத்துறை அமைச்சர் கே.ராஜு தகவல் தெரிவித்து இருந்தார்.

கர்ப்பமாய் இருந்த யானை வெடிமருந்தினால் பாதிக்கப்பட்டு சில நாட்கள் காயத்துடன் போராடி உயிர் நீத்த சம்பவம் வேதனைக்குரியது, கண்டனத்துக்குரியதே. ஆனால், யானை இறந்த சம்பவத்தை சரியான செய்திகளை வெளியிடாத ஊடகங்களினால் மலப்புரம் என கூறப்பட்டு ஒரு தரப்பு மதத்தினர் மீது வெறுப்புணர்வு உருவாக்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக, கேரளாவில் ஆளும் அரசின் மீதான அரசியல் பதிவுகள். படிப்பறிவு அதிகம் கொண்ட மக்கள் மனிதாபிமானம் இல்லாமல் யானைக்கு வெடிமருந்தினை கொடுத்ததாக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுகிறது. இறுதியாக, யானைக்கு இரக்கப்பட்டு பகிர்பவர்கள் யாரும் அசைவம் சாப்பிடாதவர்கள் அல்ல என உணவு பழக்கத்தை வைத்தும் வெறுப்பை காட்டுவதையும் பார்க்கவே முடிகிறது. எது சரியானதாக இருக்கும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கூறுவதா அல்லது இதுதான் சமயம் என தங்களுக்கு ஆதாயம் தேடுவதா ?

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button