கேரள வெள்ளத்தில் உதவிய மீனவர்களுக்கு போலீஸ் வேலை..!

பரவிய செய்தி
வெள்ளத்தின் போது சேவை செய்த கேரள மீனவர்கள் 200 பேருக்கு போலீஸ் வேலையை அறிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
மதிப்பீடு
சுருக்கம்
கேரள மீனவர்கள் 200 பேருக்கு கடற்படை பாதுகாப்பு பணி வழங்குவது தொடர்பான அறிவிப்பை கேரள மாநிலத்தின் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.
விளக்கம்
1924 ஆம் ஆண்டிற்கு பிறகு கேரளாவில் பெய்த கனமழைக் காரணமாக அம்மாநிலத்தின் அணைகள் நிரம்பி பல மாவட்டங்களில் வெள்ள நீர் புகுந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வெள்ளம், மலைச் சரிவுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது.
வெள்ளத்தால் பல இடங்களில் சிக்கிக் கொண்ட மக்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் மீட்பு படையினர், போலீஸ் மட்டுமின்றி மீனவர்களின் பங்கு அளப்பறியது. மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து பல மீனவர்கள் மக்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
வெள்ளத்தால் நீர் சூழ்ந்த பகுதியில் மீட்பு பணிக்காக கடல் பகுதியில் இருந்து மீனவர் சமூகத்தினர் 100-க்கும் அதிகமான படகுகளை தங்களிடம் இருக்கும் பணத்தினை செலவு செய்து கொண்டு வந்தனர். கேரளா சந்தித்த மிகப்பெரிய பாதிப்பில் சிக்கிக் கொண்ட 65,000-க்கும் அதிகமானோரை மீனவர் சமூகத்தினர் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலத்தின் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்ட்விட்டரில், “ இந்த வெள்ளத்தில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம். மீனவர்கள் சிறந்த மீட்பாளர்கள். 200 மீனவர்களை கடலோர பாதுகாவலர் ஆக நியமிக்க உள்ளோம். மேலும், மீன்துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மீட்பு பணி குழுவை மீனவர்களை கொண்டு உயர்த்த வேண்டும். இவ்விரு திட்டமும் அங்கீகரிக்கப்பட்டது “ என அறிவித்துள்ளார்.
கேரள வெள்ளத்தில் சிறப்பாக சேவை செய்த 200 மீனவர்களுக்கு அம்மாநிலத்தின் கடலோர பாதுகாப்பு போலீஸாக பணி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதிபலன் பார்க்காமல் சிறந்த உதவியை அளித்த மீனவ மக்களுக்கு கேரள அரசு தகுந்த மரியாதையை அளித்துள்ளது.
“ கேரள மாநிலத்தின் தலைநகரில் நடைபெற்ற விழாவில் வெள்ளத்தில் சிறந்த பங்களிப்பை அளித்த மீனவர்களை பெருமைப்படுத்த முதல்வர் பினராயி விஜயன் மீனவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார் “
உதவி தேவைப்படும் இடங்களுக்கு மனித நேயத்துடன் உதவ முன்வரும் மீனவ சமூகத்தினர் நாட்டின் சிறப்பு கடற்படை வீரர்கள் என போற்றப்பட வேண்டியவர்கள்..