கேரளாவில் ஆர்எஸ்எஸ் இயக்கம் தடை செய்யப்பட்டதா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
கேரளா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் அரசாங்கம் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தடை செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயனை பாராட்டி மீம்ஸ் பதிவுகள் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
கேரளாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு பினராயி விஜயன் அரசு தடை விதித்து உள்ளதாக பரவும் தகவல் குறித்து தேடுகையில், சமீபத்தில் அப்படி எந்த உத்தரவும் வெளியாகவில்லை. ஒரு மாநில அரசு ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு தடை விதித்து இருந்தால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு உண்டாகி இருக்கும். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பையும் தெரிவித்து இருக்கும்.
2021 ஏப்ரல் மாதம், ” கேரளாவில் தனது கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலை உட்பட அனைத்து கோவில்களிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அணிவகுப்புகள் நடத்தவும் மற்றும் ஆயுதப் பயிற்சிகள் அளிக்கவும் தடை விதித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு உத்தரவு பிறப்பித்ததாக ” செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2016-ம் ஆண்டிலேயே கேரளாவில் உள்ள கோவில் பகுதிகளில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அணிவகுப்புகள் மற்றும் பயிற்சிகள் நடைபெறுவதை தடை செய்ய அரசு திட்டமிட்டு வருவதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் இருக்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளா மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக வளர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளால் பாஜகவினால் கேரளாவில் வெற்றிப் பெற முடியவில்லை. இருப்பினும், ஊர்வலம், பயிற்சி என ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இதற்கிடையில், கோவில் பகுதிகளில் நடக்கும் ஆர்எஸ்எஸ் பயிற்சிக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், கேரளாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பை மாநில அரசு தடை செய்ததாக பரவும் தகவல் தவறானது. கேரளாவின் கோவில் பகுதிகளில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புகள் மற்றும் ஆயுதப் பயிற்சிகள் நடக்க கூடாது என்றே சில மாதங்களுக்கு முன்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது என அறிய முடிகிறது.