மசூதிக்குள் கள்ளச்சாராயத்திற்கு ஊரல் போட்டதாக தவறான பதிவு| உண்மை என்ன ?

பரவிய செய்தி
கேரளா காஸர்கோட்டில் மசூதிக்குள் கள்ள சாராயம் ஊரல் போட்ட டப்லீசை வெளுத்து வாங்கிய கேரளா காக்கிகள்.
மதிப்பீடு
விளக்கம்
கேரளாவில் உள்ள காஸர்கோட்டில் மசூதிக்குள் முஸ்லீம்கள் கள்ளச்சாராயத்திற்கு ஊரல் போட்டதால் காவல்துறை கைது உள்ளதாக மேற்காணும் புகைப்படம் தமிழக இந்துக்கள் முகநூல் குழுவில் பகிரப்பட்டு உள்ளது. மேலும், அவர்கள் தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டு உள்ளர்கள்.
எனினும் அந்த பதிவின் கமெண்ட் பதிவுகளில், கைதானவர்கள் முஸ்லீம்கள் என்று இந்துக்களும், இந்துக்கள் என்று முஸ்லீம்களும் மாற்றி மாற்றி பகிர்ந்து வருகிறார், இதில் எந்த செய்தி உண்மை என ஒருவர் கேட்டு இருந்தார்.
ஆகையால், எது உண்மை என அறிய கள்ளச்சாராயத்திற்கு ஊரல் போட்ட பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களுடன் போலீஸ் இருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், கோவிலில் கள்ளச்சாராயத்திற்கு ஊரல் போட்ட ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் கைது என யூடியூப் வீடியோக்கள் மற்றும் செய்திகள் கிடைத்தன.
2020 ஜனவரி 23-ம் தேதி thejasnews என்ற இணையதளத்தில் கண்ணம்புரா பகுதியில் 4 ஆர்.எஸ்.எஸ் நபர்கள் கோவில் பகுதியில் சாராயத்திற்கு ஊரல் போட்டதால் கைது செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதில் வைரலாகும் புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது. அதேபோல், ஜனவரி 23-ம் தேதி கைது நடவடிக்கை மேற்கொள்ளும் பொழுது அங்குள்ள பொருட்களை வீடியோ எடுத்ததும் யூடியூப் சேனல் ஒன்றில் பதிவாகி இருக்கிறது.
மேற்காணும் வீடியோவில், 0.20-வது நொடியில் கோவில் முன்புறத்திலேயே ஊரல் போட்ட பெரிய பக்கெட்கள் இருப்பதை காண்பித்து உள்ளார்கள். புகைப்படத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பின்புறத்தில் இருக்கும் சிறிய கோவிலை காணலாம். அதற்குள் மறைத்து வைத்து உள்ளார்கள்.
ஜனவரி 20-ம் தேதி kerala excise எனும் கேரளா போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கை பிரிவின் முகநூல் பக்கத்தில் கைது செய்யப்பட்டவரின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், அவர் குறித்த விவரங்கள் இடம்பெறவில்லை.
ஆக, கள்ளச்சாராயத்திற்கு ஊரப் போட்ட பொருட்களை வீட்டிற்கு அருகில் இருந்த சிறிய கோவிலுக்குள் வைத்ததை மசூதிக்குள் என தவறாக பரப்பி வருகிறார்கள். கள்ளச்சாராயம் காய்ச்சுவதே தவறான விசயம், அதை கோவிலுக்குள் மறைத்து வைத்தது கண்டனத்துக்குரியது.
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் நபர்கள் கோவிலில் கள்ளச்சாராயத்திற்கு ஊரல் போட்டதாக யூடியூப், முகநூல் பக்கங்களில் மட்டுமே குறிப்பிட்டு இருக்கிறார்கள். இருப்பினும், கைது செய்யப்பட்டவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினரா என உறுதியான தகவல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்திகள் கிடைக்கவில்லை.
முடிவு :
நமது தேடலில், கேரளாவில் மசூதிக்குள் கள்ளச்சாராயத்திற்கு ஊரல் போட்டதாக பகிரப்பட்டு வரும் புகைப்படம் தவறானது எனத் தெரிந்து கொள்ள முடிந்தது. மேலும், கேரளாவில் வீட்டிற்கு அருகில் இருந்த சிறிய கோவிலுக்குள் ஊரல் போட்ட பொருட்களை மறைத்து வைத்து உள்ளனர் என வீடியோ மூலம் அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.