கேரளாவில் அடித்துக் கொல்லப்பட்ட மதுவின் சகோதரி காவலராக தேர்ச்சி !

பரவிய செய்தி
பசியின் கொடுமையால் திருடி சாப்பிட்டதாக சொல்லி அடித்துக் கொல்லப்பட்டவர் கேரளாவைச் சேர்ந்த மது. மதுவின் சகோதரிக்கு தற்போது கேரளா காவல் படையில் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் பணி வழங்கப்பட்டு உள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
கேரளா காவல் துறையில் பணி நியமனம் பெற்ற 74 பழங்குடியினர்களில் சென்ற ஆண்டு கேரளாவில் அடித்துக் கொல்லப்பட்ட மதுவின் சகோதரி சந்திரிக்காவும் தேர்வாகி பயிற்சி முடிந்த பின்னான அணிவகுப்பில் கலந்து கொண்டுள்ளார்.
விளக்கம்
2018 பிப்ரவரி மாதம் கேரளாவில் உள்ள அட்டப்பாடி என்ற பகுதியில் திருடி விட்டார் எனக் கூறி மது என்ற பழங்குடியினர் இளைஞரை ஒரு கும்பல் கட்டி வைத்து அடித்ததில் அந்த இளைஞர் இறந்த சம்பவம் நாடு முழுவதிலும் பரவியது.
இந்நிலையில், கேரளாவில் அடித்துக் கொல்லப்பட்ட மதுவின் சகோதரிக்கு கேரள காவல் படையில் (சிவில் போலீஸ் சர்வீஸ்) பணி வழங்கப்பட்டு உள்ள செய்தி வேகமாக பரவி வருகிறது. சென்ற ஆண்டு மது இறந்த பிறகு அவரின் உடல் அகாலி அரசு மருத்துவமனையின் சவக்கிடங்கில் இருக்கும் பொழுது, ஏற்கனவே எழுத்து தேர்வில் வெற்றி பெற்று நேர்காணலுக்காக சந்திரிகா காத்திருந்த நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
பின் மதுவின் இறப்பிற்கு நீதிக் கேட்டு போராட்டங்கள் நடந்தன. முதலில் நேர்காணலுக்கு செல்ல மறுத்த சந்திரிகா குடும்பத்தினரின் கட்டாயத்தால் கலந்து கொண்டார்.
கேரளாவில் பழங்குடியினர் இன மக்களுக்கான இடஒதுக்கீட்டின் படி காவல் துறையில் நடைபெற்ற சிறப்பு ஆட்சேர்ப்பில் மதுவின் சகோதரி சந்திரிகா மட்டுமின்றி மொத்தம் 74 பேர் தேர்வாகி பயிற்சியை முடித்துள்ளனர். அதில், 24 பேர் பெண்கள் ஆவர். தேர்வானவர்களில் 8 பேர் மலப்புரம், 15 பேர் பாலக்காடு மற்றும் 51 வயநாடு பகுதியைச் சேர்ந்தவர்கள்.
மே 2019-ல் கேரள காவல் துறையில் பணிக்கு பயிற்சி பெற்றவர்களின் அனுவகுப்பில் மதுவின் சகோதரியும் இடம்பெற்றுள்ளார். தன் மகள் அணிவகுப்பில் இடம்பெற்றதை அவரின் தாயார் மல்லி கண்ணீர் மல்க கண்டுள்ள நிகழ்வுகள் புகைப்படங்களாக வெளியாகி உள்ளன.
மதுவின் சகோதரி சந்திரிகா தன் பணி நியமன ஆணையை கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களிடம் இருந்து பெற்றுள்ளார்.