ஐயப்பன் பக்தரை போலீஸ் எட்டி உதைத்ததாகப் பரவும் வதந்தி.

பரவிய செய்தி
மதிப்பீடு
சுருக்கம்
அடிப்பது கம்யூனிஸ்ட்களின் போலீஸ் அல்ல.. அடிவாங்கியவர் ஐயப்ப பக்தரும் அல்ல. 2013-ல் நடந்த நிகழ்வு.
விளக்கம்
ஐயப்பன் விவகார அலை அடித்து ஓய்ந்தப் பிறகு மீண்டும் அதைப் பற்றிய வதந்திகள் வரத் தொடங்கி உள்ளன. கம்யூனிஸ்ட் ஆட்சியில் போலீஸ்கள் ஐயப்பன் பக்தரை எட்டி உதைக்கும் காட்சிகள் என இப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. இந்நிகழ்வு எங்கே நடந்தது என்று பார்க்கலாம்.
எட்டி உதைக்கும் போலீஸ்
கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசுக்கு முன் ஆட்சி செய்த உம்மன் சாண்டி அரசின் ஆட்சியில் சோலார் முறைகேடு நடந்துள்ளதாக மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகியது. இது தொடர்பாக அன்றைய உம்மன் சாண்டி அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நிகழ்ந்தன.
அதில், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உம்மன் சாண்டி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும்படி போராட்டங்கள் நடைபெற்றன. 2013 செப்டம்பர் 4-ம் தேதி கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கழக்கோட்டம் பகுதியில் உம்மன் சாண்டிக்கு எதிராக நடைபெற்றப் போராட்டத்தில் இளைஞர் ஒருவர் முதல்வருக்கு கறுப்புக்கொடியைக் காட்டியுள்ளார்.
அந்த இளைஞரை போலீசார் பிடித்து போலீசார் அடித்து உள்ளனர். அதில், துணை ஆய்வாளர் விஜயதாஸ் கறுப்புக்கொடி காட்டிய இளைஞரை முரட்டுத்தனமாக அடித்ததோடு எட்டி உதைத்தும் உள்ளார். அவரைச் சுற்றி அதிகளவில் போலீஸ் படை இருந்துள்ளது.
தாக்கப்பட்ட இளைஞர் ஜெயாபிரகாஷ் LDF ஆர்வலர் ஆவார். இளைஞர் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அன்றைய எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதன்பின் சம்பந்தப்பட்ட துணை ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இளைஞரை போலீஸ் எட்டி உதைக்கும் ஒரு படத்தில் கருப்பு நிற வேஷ்டி அணிந்து இருப்பது போன்று இருக்கும். ஆனால், அவர் கருநீல நிறத்தில் பேண்ட் அணிந்து இருப்பார். முழு வீடியோவில் அதைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இதையறியாமல், மீண்டும் ஐயப்பன் விவகாரத்தைக் கையில் எடுத்து அரசியல் லாபத்திற்கு வதந்திகளைப் பரப்பத் தொடங்கி உள்ளனர்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.