கேரளாவில் முஸ்லீம் மாணவிகள் ஓணம் கொண்டாடுவது ஹராம் எனக் கூறி மத அடிப்படைவாதிகளால் விரட்டப்பட்டனரா ?

பரவிய செய்தி

கேரளாவின் காசர்கோடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஓணம் பண்டிகையை கொண்டாடிய முஸ்லீம் மாணவிகளை ஹராம் எனக் கூறி விரட்டி அடித்த காட்சி.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

கேரளாவில் முஸ்லீம் மாணவிகள் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடனமாடி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளையும் பெற்று வைரலாகியது. இதையடுத்து, இதற்கு எதிராக கேரளாவின் காசர்கோட் அரசு பள்ளியில் ஓணம் கொண்டாடுவது ஹராம் எனக் கூறி முஸ்லீம் மாணவிகளை அங்குள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் விரட்டியதாக கீழ்காணும் 9 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Archive link 

Archive link 

சமூக வலைதளங்களில் வைரலாகும் JianObez எனும் ட்விட்டர் பக்கத்தில் வெளியான வீடியோவை குறிப்பிட்டு மீடியான் இணையதளத்தில், ” காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் ஓணம் பண்டிகையைக் கொண்டாடி இருக்கிறார்கள். இதில், முஸ்லீம் மாணவிகளும் கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ந்து இருக்கிறார்கள். இதை அறிந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பள்ளியில் குவிந்தனர். நடனமாடிக் கொண்டிருந்த முஸ்லீம் மாணவிகளிடம் இது ஹராம், இஸ்லாத்துக்கு எதிரானது என்று சொல்லி விரட்டி அடித்திருக்கிறார்கள் ” எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் வீடியோவின் கீழே காசர்கோடு பள்ளிகரேவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி என குறிப்பிடப்பட்டு உள்ளது. வீடியோவில் மாணவிகள் வரிசையாக செல்லும் போது,  ” நாளைக்கு உனக்கு திருமணம் ஆகும், இப்போது யார் திருமணம் செய்ய வருவார்கள். உங்களுக்கு வெட்கமும், தயக்கமும் இல்லையா ” என ஒருவர் வசைப்பாடி இருக்கிறார். ஆனால், அந்த வீடியோவில் இடம்பெற்ற ஆடியோவில், ” ஓணம் பண்டிகை குறித்தோ அல்லது ஹராம் ” என்ற வார்த்தைகளோ இடம்பெறவில்லை.

மேலும், காசர்கோடு பள்ளியில் ஓணம் கொண்டாடிய முஸ்லீம் மாணவிகள் விரட்டி அடிக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல் உண்மையில்லை என காசர்கோடு மாவட்ட ஆட்சியர் முகநூலில் பதிவிட்டு இருக்கிறார்.

Facebook link

செப்டம்பர் 5ம் தேதி காசர்கோடு மாவட்ட ஆட்சியரின்முகநூல் பதிவில், ” காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட வந்த மாணவிகள் அவமதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மைக்குப் புறம்பானது. வெறுப்பு பிரச்சாரத்திற்காக போலியான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ” எனக் கூறப்பட்டு உள்ளது.

Facebook link 

மேலும் செப்டம்பர் 5ம் தேதி காசர்கோடு மாவட்ட காவல்துறையின் முகநூல் பக்கத்தில், ” மாவட்டத்தின் அமைதியான சூழலையும் மத நல்லிணக்கத்தையும் சீரழிக்கும் நோக்கத்துடன் சமூக வலைதளங்கள் மூலம் சமூகவிரோதிகள் போலி பிரச்சாரம் செய்து வருவது மாவட்ட காவல்துறை கவனத்திற்கு வந்துள்ளது. அத்தகைய நபர்களை கவனிக்கும் வகையில் சைபர் ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் காணிப்பாளர் சைபர் செல்லுக்கு அறிவுறுத்தி உள்ளார் ” எனக் கூறி வைரல் செய்யப்படும் தகவல் போலியானது எனப் பதிவிட்டு உள்ளனர்.

முடிவு : 

நம் தேடலில், கேரளாவின் காசர்கோடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஓணம் பண்டிகையை கொண்டாடிய முஸ்லீம் மாணவிகளை ஹராம் எனக் கூறி இஸ்லாமிய அடிப்படைவாதிகள் விரட்டியதாக பரப்பப்படும் தகவல் வதந்தி என அறிய முடிகிறது.

Please complete the required fields.
Back to top button
loader