கேரளாவில் இந்துக்கள் வீடுகள் மீது முஸ்லீம்கள் கற்களை வீசி காலி செய்ய மிரட்டுவதாகப் பரவும் வதந்தி!

பரவிய செய்தி
கேரளாவில் உள்ள இந்து பங்களாக்கள் மீது முஸ்லிம்கள் கற்களை வீசி அவர்களை காலி செய்யுமாறு மிரட்டுகின்றனர் காஷ்மீர் போல்.Facebook Link
மதிப்பீடு
விளக்கம்
“காஷ்மீரைப் போன்று கேரளாவிலும் அங்கு உள்ள இந்து பங்களாக்கள் மீது முஸ்லீம்கள் கற்களை வீசி அவர்களை காலி செய்யுமாறு மிரட்டுகிறார்கள். ஒரு இடத்தில் அமைதி மார்க்கம் 25% சதவீதத்திற்கு மேல் அதிகமானால் இதுதான் பிரச்சனை” என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வலது சாரிகளால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் கும்பல் ஒன்று வீடுகள் மீது கற்களை வீசி தாக்குவதை பார்க்க முடிகிறது.
காஷ்மீர் மாதிரி, கேரளாவில் உள்ள இந்து பங்களாக்கள் மீது முஸ்லிம்கள் கற்களை வீசி அவர்களை காலி செய்யுமாறு மிரட்டுகிறார்கள்..😡😡
ஒரு இடத்தில் அமைதி மார்க்கம் 25% சதவீதத்திற்கு மேல் அதிகமானால் இதுதான் மற்றவர்களுக்கு பிரச்னை..🤦♂@pinarayivijayan pic.twitter.com/Pq73U2mYi5
— Vinoth Kumar.V (@Vinothkumar2214) July 24, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவில் உள்ள கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ தற்போது எடுக்கப்பட்டது அல்ல, கடந்த 2016-இல் கேரளாவில் உள்ள நாதாபுரத்தில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது.
இதுகுறித்து தேடியதில், கேரள செய்தி ஊடகமான Manorama News கடந்த ஆகஸ்ட் 15, 2016 அன்று தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில் “கேரளாவில் உள்ள நாதபுரத்தில் ஐம்பது வீடுகள், இருபது வாகனங்கள் உட்பட காவல்துறையின் இரண்டு வாகனங்களும் கலவரக்காரர்களால் தாக்கப்பட்டது. பெரும்பாலும் கலவரக்காரர்கள் காங்கிரஸ், பாஜக மற்றும் சிபிஐ(எம்) ஆதரவாளர்கள் வீடுகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தியதாக ” குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பரவி வரும் அதே வீடியோவை பதிவு செய்துள்ளதை காண முடிந்தது.
மேலும், 2016 ஆகஸ்ட் 28 தேதி mathrubhumi.com என்ற கேரள இணையதளத்தில் வெளியான செய்தியில், “நாதாபுரம் அஸ்லாம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சிபிஎம் பிரமுகர் ரமேஷ் என்பவரை போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.” என்று குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் அஸ்லாம் என்ற நபர் கொலை செய்யப்பட்டதன் காரணமாக தான் இந்த கலவரம் நடந்துள்ளது என்பது தெளிவாகிறது.
2016 ஆகஸ்ட் 18 அன்று வெளியான Times of india கட்டுரையில், “இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த கே.அஸ்லாம் என்பவர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாதாபுரம் மற்றும் தூணேரி பகுதிகளில் நடந்த வன்முறைச் சம்பவங்களில், குடும்பங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்த அறிக்கையை வருவாய்த் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.
வருவாய்த்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை அஸ்லாம் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சனிக்கிழமை இரவும் ஞாயிற்றுக்கிழமையும் 47 வீடுகள் தாக்கப்பட்டன. கல் வீச்சில் 6 வீடுகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது, மீதமுள்ள வீடுகளுக்கு சிறிய சேதம் ஏற்பட்டது. தூணேரியில் 40 வீடுகளும், நாதாபுரத்தில் 7 வீடுகளும் தாக்கப்பட்டுள்ளன. ஒரு கார் உட்பட சில வாகனங்களும் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டன.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், கேரளாவில் உள்ள இந்து பங்களாக்களில் கற்களை வீசிய முஸ்லிம்கள் என பரவி வரும் வீடியோ 2016-இல் எடுக்கப்பட்டது என்பதையும், இந்துக்களை காலி செய்யுமாறு முஸ்லீம்கள் மிரட்டுகிறார்கள் எனப் பரப்பி வரும் தகவல்கள் தவறானவை என்பதையும் அறிய முடிகிறது.