This article is from Sep 02, 2019

கேரள கல்லூரியில் பாகிஸ்தான் கொடியை ஏற்றினார்களா ? ஊடக செய்தியால் பரபரப்பு.

பரவிய செய்தி

கேரள மாநிலம் கோழிக்கோடு சில்வர் கல்லூரியில் பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாத மாணவர்கள் பாகிஸ்தான் கொடியுடன் ஆரவாரம்! இதற்க்கு முழு ஆதரவு கொடுப்பது காங்கிரஸ் மாணவர் அணியான KSU.

மதிப்பீடு

சுருக்கம்

மாணவர்கள் கையில் ஏந்திய கொடியானது பாகிஸ்தான் நாட்டின் தேசியக் கொடி போல் காட்சியளித்த காரணத்தினால் இந்திய ஊடகங்களில் தவறுதலாக செய்தியாகி பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நிகழ்ந்த சம்பவம் குறித்து விரிவாக காண்போம்.

விளக்கம்

கேரள மாநிலத்தில் உள்ள கல்லூரியில் பாகிஸ்தான் நாட்டின் தேசியக் கொடி பறக்கவிட்டதாக டைம்ஸ் நவ் சேனலில் பிரேக்கிங் நியூஸ் வெளியாகி நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த சேனலில் வெளியாகிய செய்தியை வீடியோ உடன் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தற்பொழுது தமிழகத்திலும் பரவத் துவங்கி உள்ளது.

செய்தி :

கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் இருக்கும் பெரம்பரா சில்வர் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி யூனியன் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது பாகிஸ்தான் நாட்டின் கொடியை ஏந்தியதாக கூறி முஸ்லீம் மாணவர்கள் முன்னணி (MSF)மற்றும் கேரளா யூனியன் ஸ்டுடென்ட்ஸ்(KUS-காங்கிரஸ் ஆதரவு) அமைப்பை சேர்ந்த குறைந்தது 25 மாணவர்கள் காவல்துறையால் பல பிரிவுகளில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கல்லூரி மாணவர்கள் பாகிஸ்தான் நாட்டின் கொடியை ஏந்தியதாக கூறியது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், மாணவர்கள் ஏந்திய கொடியானது பாகிஸ்தான் நாட்டின் கொடி அல்ல, MSF அமைப்பின் கொடி என்றும், தவறாக புரிந்து கொண்ட காரணத்தினால் குழப்பம் ஏற்பட்டு இருப்பதாக MSF அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்து உள்ளனர்.

முஸ்லீம் மாணவர்கள் முன்னணி (MSF)அமைப்பின் மாநில செயலாளர் நிசாத் கே சலீம் கூறுகையில், செப்டம்பர் 5-ம் தேதி நடக்க உள்ள தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு மாணவர்களிடம் குறைந்த அளவிலான நிதியே இருந்துள்ளது. மாணவர்கள் அமைப்பின் கொடியின் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தின் சரியான விகிதம் தெரியாமல் தையல்காரர் மூலம் தைக்கப்பட்ட கொடியை பெற்றுள்ளனர். எம்.எஸ்.எஃப் முதலில் ஏந்திய பெரியக் கொடி தவறுதலாக தைக்கப்பட்டவை ” என மலையாள செய்திக்கு தெரிவித்து இருந்தார்.

பாகிஸ்தான் கொடி VS MSF கொடி :

பாகிஸ்தான் நாட்டின் தேசியக் கொடியில் முதலில் இடது பக்கத்தில் வெள்ளை நிறம் சிறிதாகவும், அடுத்ததாக பச்சை நிறம் அதிக அளவிலும் இருக்கும். மேலும், கொடியில் இருக்கும் பிறையானது பச்சை நிறத்தின் நடுப்பகுதியில் பெரிதாய் இடம்பெற்று இருக்கும்.

முஸ்லீம் மாணவர்கள் முன்னணி அமைப்பின் கொடியில் பச்சை நிறத்திற்கு கீழே சரி சமமான விகிதத்தில் வெள்ளை நிறம் இடம்பெற்று இருக்கும். பிறையானது கொடியின் இடதுபக்கத்தின் மூலையில் சிறிதாய் அமைந்து இருக்கும்.

செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ இல்லாமல், பகிரப்படும் மற்றொரு வீடியோவில் மாணவர்கள் பயன்படுத்தியது பாகிஸ்தான் நாட்டின் கொடி அல்ல, MSF மாணவர் அமைப்பின் கொடி என தெளிவாய் அறிந்து கொள்ள முடிகிறது.

இதற்கு முன்பாக MSF மாணவர் அமைப்பினர் கைகளில் அமைப்பின் கொடியை ஏந்தி இருக்கும் புகைப்படங்கள் முகநூலில் வெளியாகி இருக்கிறது.

முடிவு :

நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், கேரள கல்லூரியில் மாணவர்கள் பாகிஸ்தான் நாட்டின் கொடியை ஏந்தியதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறான தகவல். MSF மாணவர் அமைப்பின் கொடியை பாகிஸ்தான் நாட்டின் கொடி என தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.

ஊடகங்களில் வெளியான தவறான செய்தியால் நாடு முழுவதிலும் சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

மாணவர் அமைப்பின் கொடியை தலைகீழாக விரித்து காண்பித்த பொழுது ஏற்பட்ட குழப்பத்தால் பாகிஸ்தான் நாட்டின் கொடியின் தோற்றத்தில் காட்சியாகி இருக்கிறது.

இந்தியாவில் பாகிஸ்தான் நாட்டின் கொடியை பறக்க விடுவதாக தவறான செய்திகள் பரவுவது முதல்முறை அல்ல. இதற்கு முன்பாக IUML மற்றும் முஸ்லீம் கட்சிகளின் கொடியாலும் வதந்திகள் பரவி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பச்சை நிறக் கொடி என்றாலே பாகிஸ்தான் நாட்டின் கொடி என பலரின் மனதில் பதிந்து உள்ளது. ஆகையால், சர்ச்சைகளை தவிர்க்க அந்த நிறங்களை தவிர்க்கலாம் அல்லது இனி வருபவர்கள் அதனை கருத்தில் கொள்வது அவசியம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader