கேரளாவிற்கு வழங்கும் அரிசிக்கு மத்திய அரசு ரூ.233 கோடி கேட்டதா ?

பரவிய செய்தி
வெள்ள நிவாரணத்திற்கு கொடுத்த அரிசிக்கு ரூ.233 கோடி பணம் கேட்கும் மத்திய அரசு.
மதிப்பீடு
சுருக்கம்
கேரளாவின் வேண்டுகோளுக்கு பிறகு, அரிசிக்கு பணம் என்று சர்ச்சையாகிய பின்பு கேரளாவிற்கு வழங்கிய அரிசிக்கு அம்மாநிலம் பணம் தர தேவையில்லை என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளக்கம்
வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கையை மட்டுமின்றி பொருளாதார நிலையிலும் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கபட்டது. பல மாநிலங்களில் இருந்து உணவு, நீர், தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு வந்தாலும் உணவு பற்றாகுறை அதிகமாக இருந்துள்ளது.
அம்மாநிலத்தின் அரிசி தேவைக்காக மத்திய அரசு சார்பில் 89,540 டன் அரிசி வழங்கப்பட்டது. மத்திய அரசு வழங்கிய அரிசிக்கு ரூ.233 கோடி கேரள அரசு செலுத்த வேண்டும் என்று உணவு மற்றும் நுகர்வோர் வழங்கல் அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டது.
மாநில உணவு மற்றும் நுகர்வோர் வழங்கல் அமைச்சர் பி. திலோத்தமன் கூறியதாவது, “ FCI கிடங்கில் அரிசி இருப்பதை அறிவோம் மற்றும் அதனை நாங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், அதற்கான பணத்தினை செலுத்தவில்லை என்றால் மத்திய அரசு வழங்கும் நிவாரண தொகையில் இருந்து அரிசிக்கான பணம் எடுத்துக் கொள்ளப்படுவதாக கூறியுள்ளார் ”.
இதனை அறிந்த கேரள முதல்வர் உடனடியாக பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 280 கோடி மதிப்பில் 20,000 ஹெக்டேர் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது. ஆகையால், மாநிலத்தின் நிலைமையை கருத்தில் கொண்டு உணவு தேவையை பூர்த்தி செய்ய 1.18 லட்சம் டன் அரிசியை இலவசமாக வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலம் கடுமையான பாதிப்பில் இருக்கும் பொழுது வழங்கிய அரசிக்கு பணம் கேட்பது நியாயமற்ற செயல் என சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் கிளம்பின.
“ தற்போது மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் ஆகஸ்ட் 21-ம் தேதி மாலை, அவசரநிலையில் பெற்ற அரிசிக்கு கேரள மாநிலம் பணம் செலுத்த தேவையில்லை என்று அறிவித்து விட்டார் “
கேரளாவிற்கு 89,540 டன் அரிசி இலவசமாக வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கேரளாவிற்கு வழங்கும் அரிசிக்கு மத்திய அரசு சார்பில் பணம் கேட்கப்பட்டது, பின் அதற்கான கேரள அரசு பணம் செலுத்த தேவையில்லை என்று அறிவித்து விட்டனர்!