கேரளா கோவில்களில் காணிக்கைக்கு பதிலாக கோரிக்கைச் சீட்டு செலுத்தப்படுகிறதா ?

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
இந்து சமய கோவில்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்கிற முன்னெடுப்பை பாஜக, ஜக்கி வாசுதேவ் போன்றோர் எடுத்து வருகிறார்கள். இது தொடர்பாக, அடிக்கடி பதிவுகளையும் சமூக வலைதளங்களில் காண முடிகிறது.
இந்நிலையில், கேரளாவில் உள்ள மக்கள் கோவில்களில் காணிக்கை பணம் செலுத்த மாட்டோம், ஆண்டவனுக்குக் கோரிக்கைச் சீட்டை மட்டுமே செலுத்துவோம் என முடிவெடுத்து இருப்பதாக கோவில் உண்டியல்களில் சீட்டுகளை மக்கள் செலுத்தும் புகைப்படங்களின் தொகுப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
சமீபத்தில் கேரளாவில் மக்கள் இப்படியொரு முடிவு எடுத்ததாக செய்திகள் ஏதும் வெளியாகவில்லை. ஆகையால், வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் இருக்கும் வாக்கியத்தை வைத்து தேடுகையில், கடந்த 2020-ம் ஆண்டில் இருந்தே அதே தகவல் இப்புகைப்படங்கள் உடன் பதிவாகி இருக்கிறது.
2018-ம் ஆண்டு கேரளாவின் சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை அரசு அமல்படுத்த முயன்ற போது பெரும் போராட்டம் உருவானது.
அந்த சமயத்தில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சபரிமலை கோவிலுக்கு காணிக்கை செலுத்தப்போவதில்லை என்கிற பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். அப்போது, கோவில் உண்டியலில் பணத்திற்கு பதிலாக காகிதத்தில் ” சுவாமி சரணம் ” உள்ளிட்ட வாசகங்களை எழுதி செலுத்தியது குறித்து 2018 அக்டோபர் 22-ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
வைரல் செய்யப்படும் புகைப்படங்கள் குறித்து தேடுகையில், 2018-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி மை நேசன் எனும் இணையதள செய்தியில் பல ஆர்வலர்கள் சபரிமலை கோவில் உண்டியலுக்கு காணிக்கை செலுத்த போவதில்லை என்றும், உண்டியலில் காகித துண்டுகளை செலுத்தியதாகவும் புகைப்படத்துடன் வெளியாகி இருக்கிறது. இது போராட்டத்தில் ஒர் அங்கமே.
2019-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி வெளியான புதியதலைமுறை செய்தியில், ” சபரிமலை கோவிலில் நடை திறந்த முதல் நாளிலேயே ரூ.3 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவை கேரளா அரசு அமல்படுத்த முயன்றதால், பக்தர்களும், இந்து அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். இதனால் பக்தர்கள் வருகை குறைந்ததோடு நடை திறந்த முதல் நாளில் ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலானது ” என வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், 2018-ல் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக கோரிக்கைச் சீட்டை செலுத்தி பிரச்சாரம் செய்து இருக்கிறார்கள்.
ஆனால், அதன் பிறகு கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தும் நடைமுறை தற்போது வரை தொடரவே செய்துள்ளது. போராட்டம் நடைபெற்ற 2018ம் ஆண்டில் காணிக்கை குறைந்துள்ளதையும், அடுத்த ஆண்டில் உண்டியல் வசூல் அதிகரித்து உள்ளதையும் அறிய முடிகிறது.