கேரளாவில் கடல் இரண்டாக பிரிகிறதா ?

பரவிய செய்தி

கேரளாவில் பொன்னானி என்ற ஊரில் கடல் இரண்டாகப் பிளந்து உள்ளது. இந்த அதிசயத்தைக் காணுங்கள்.

மதிப்பீடு

சுருக்கம்

பொன்னானி கடற்கரையில் கரையில் இருந்து கடல் பகுதிக்குள் 500 மீட்டர் தூரம் வரை மக்கள் நடந்து செல்லும் வகையில் மணல் முகடு சமீபத்திய கேரளா கனமழை தருணத்தில் உருவாகியது.

கடல் இரண்டாக பிரிவது போன்ற எந்த நிகழ்வும் நிகழவில்லை. அது கேரளா பொன்னானி கடற்கரையே..!

விளக்கம்

கேரளாவில் உள்ள பொன்னானி ஊரில் கடல் இரண்டாகப் பிரியும் அற்புதம் என ஃபேஸ்புக், வாட்ஸ் ஆஃப் உள்ளிட்ட சோசியல் மீடியாவில் வீடியோ உடன் வைரலாகி உள்ளது. ஆனால், பரவும் செய்திகள் போன்று கடல் இரண்டாக பிரியவில்லை. எதனால் அவ்வாறு காட்சியளிக்கிறது என்பதை பார்ப்போம்.

Advertisement

பொன்னானி கடற்கரை :

பொன்னானி கடற்கரை கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் பொன்னானி கடற்கரை ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறியது.

இதற்கு காரணம், கடல் பகுதியில் மணல் முகடு உருவாகி கடலுக்குள்ளே 500 மீட்டர் தூரம் வரை மக்கள் நடந்து செல்ல முடிகிறது. மணல் பகுதியில் நடந்து செல்லும் பொழுது கடலின் நடுவே பாலம் அமைத்து தண்ணீரில் நடந்து செல்வது போன்று சில சமயங்களில் உணர வைக்கும்.

2018 ஆகஸ்ட மாதம் கேரளாவில் ஏற்பட்ட கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்து மாநிலமே நிலைக் குலைந்தது. இதில், பாரதப்புழா ஆற்றில் இருந்து அடித்து செல்லப்பட்ட மணல் பொன்னானி கடற்கரை பகுதியில் படிந்ததால் இவ்வாறான முகடு உருவாகியது எனக் கூறுகின்றனர். எனினும், இவ்வாறான மணல் பாதை உருவாகியது ஆச்சரியமான ஒன்றாக உள்ளது.

Advertisement

தினந்தோறும் மக்கள் தங்களின் பொழுதைப்போக்க பொன்னானி கடற்கரையின் மணல் முகடில் நடந்து செல்கின்றனர். இதனால் மக்களின் வருகையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

பொன்னானி கடற்கரை வீடியோ :

பொன்னானி கடற்கரையில் மக்கள் நடந்து செல்லும் வீடியோவில் Abilash viswa photography என்ற பெயர் இடம்பெற்று இருக்கும். Abilash viswa செப்டம்பர் 15-ம் தேதி தன் முகநூல் பக்கத்தில் பரவும் வீடியோவை பதிவிட்டு பொன்னானி கடற்கரையில் மணல் சிற்பம் கேரளா பிரளயத்தால் உருவானது என பதிவிட்டு இருந்தார்.

செய்தி, பதிவுகளை வைத்து பொன்னானி கடற்கரையில் இருப்பது வெள்ளத்தால் உருவான மணல் பாதை மட்டுமே என்பதை இதில் இருந்து அறிவதன் மூலம் கடல் இரண்டாக பிரிகிறது எனப் பரவுவது வதந்தி என தெளிவாகிறது.

ராமர் பாலம் :

இராமாயணத்தில் இலங்கைக்கு செல்ல வானரங்களால் கட்டப்பட்ட ராமர் பாலம் என சோசியல் மீடியாவில் பொன்னானி கடற்கரை வீடியோ இணைத்து பதிவிட்டு தமிழ், தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட பல மொழிகளில் வைரலாகியது.

உயரத்தில் இருந்து பார்க்கும் பொழுது நிலப்பரப்பின் எல்லையில் இருந்து பாலம் போன்று காட்சியளித்த காரணத்தினால் ராமர் பாலம் என தவறாக புரிந்துக் கொண்டு வதந்திகளை பரப்பியுள்ளனர்.

அது ராமர் பாலம் அல்ல பொன்னானி கடற்கரை மணல் பாதை என கேரளா ஊடகத்திலும், Abilash viswa-வும் தகவல் வெளியிட்டு உள்ளனர்.

பொன்னானி கடற்கரை மணல் பாதை பார்க்க அற்புதமாக இருந்த காரணத்தினால் எடுக்கப்பட்ட வீடியோ பல புரளிகளுக்கு தொடக்கமாக அமைந்து விட்டது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button