கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஆதரவு பெண்ணை முஸ்லீம்கள் கொலை செய்ததாகப் பரப்பப்படும் வதந்தி !

பரவிய செய்தி
கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளராக இருந்த பெண் முஸ்லிம்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்..என்ன கொடுமையா இருக்கே?
Twitter link | Archive link
மதிப்பீடு
விளக்கம்
கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளராக இருந்த பெண்ணை முஸ்லீம்கள் சுட்டுக் கொன்றதாகவும், கொலை செய்த பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு ஆதரவு அளிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்ததாகவும் 1.37 நிமிட வீடியோ ஒன்றை வலதுசாரி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
Is this true @RSSOrg? @HMOIndia?
A woman, RSS supporter, was pulled out of her car and shot dead in Kerala.
The murderers, Muslims, thereafter delivered a speech warning all, to never support RSS or be prepared to meet the same fate. pic.twitter.com/CLc6oLTc13— Madhu Purnima Kishwar (@madhukishwar) May 21, 2023
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2017 செப்டம்பர் 9ம் தேதி கேரளாவைச் சேர்ந்த CPIM Cyber Commune எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் இவ்வீடியோ பதிவிடப்பட்டு இருக்கிறது.
இதேபோல், 2017 செப்டம்பர் 8ம் தேதி கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான DYFI Kalikavu MC எனும் ஃபேஸ்புக் பக்கத்திலும் இவ்வீடியோவை பதிவிட்டு உள்ளனர்.
இப்பதிவுகளில், ” கெளரி லங்கேஷ் கொலைக்காக தெரு நாடகம் மூலம் ஆர்எஸ்எஸ்-க்கு பொது விசாரணை ” எனக் குறிப்பிட்டு உள்ளனர். இதன் மூலம், இவ்வீடியோ கெளரி லங்கேஷ் கொலைக்காக கம்யூனிஸ்ட் கட்சியினரால் நடத்தப்பட்ட நாடகம் என்பதை அறிய முடிகிறது.
இவ்வீடியோ 2017ம் ஆண்டு சமூக வலைதளங்களில் வைரலான போதே அந்த அமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கம் செய்தி ஊடங்களிலும் வெளியிடப்பட்டு இருக்கின்றன. நியூஸ் 18 செய்தி நிறுவனத்திற்கு DYFI தலைவர் முகமது ரியாஸ் கூறுகையில், “இது கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரியில் நடைபெற்ற தெரு நாடகத்தின் பகுதி. பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதலில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்கை முன்னிலைப்படுத்துவதே அவர்களின் நோக்கம் ” எனத் தெரிவித்து இருக்கிறார்.
கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும், சமூக ஆர்வலருமான கெளரி லங்கேஷ் கொலை தீவிர வலதுசாரி அமைப்புடன் தொடர்புடைய நபர்களால் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டது என்று சிறப்பு புலனாய்வுக் குழுவின் குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க : கம்யூனிஸ்ட் இந்து பெண்ணை முஸ்லீம் காதலன் தாக்கியதாக தவறாகப் பரப்பப்படும் கேரளா நடிகையின் புகைப்படங்கள் !
மேலும் படிக்க : ஓம் என்ற வார்த்தையைக் கேரளாவில் தடை செய்ய இஸ்லாமியர்கள் வலியுறுத்தியதாக வதந்தி !
இதற்கு முன்பாக, கேரளாவில் மதம் சார்ந்து பரப்பப்பட்ட பல்வேறு போலிச் செய்திகள் குறித்த கட்டுரைகளையும் வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளராக இருந்த பெண் முஸ்லீம்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பரப்பப்படும் வீடியோ தவறானது. இவ்வீடியோ 2017ல் கெளரி லங்கேஷ் கொலைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் DYFI அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட தெரு நாடகம் என்பதை அறிய முடிகிரது.