தி கேரளா ஸ்டோரி விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றதாக அண்ணாமலை சொன்ன பொய் !

பரவிய செய்தி

கேரளா ஸ்டோரி படம் தவறு என்றால் அதன் தமிழக விநியோக உரிமையை  ஏன் ரெட் ஜெயண்ட் வாங்கியது?”  – அண்ணாமலை

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் டீசர் வெளியான போதே பல்வேறு சர்ச்சைகள் தொடங்கியது. இத்திரைப்படம் வெறுப்புணர்வையும், வன்முறையையும் ஏற்படுத்தக்கூடும் எனக் கூறி மேற்கு வங்காளத்தில் தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், படத்தினை திரையிடப்போவதில்லை எனத் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் (மே, 12ம் தேதி) செய்தியாளர் சந்திப்பில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அதில் உள்ள தகவல் உண்மையா என எனக்குத் தெரியாது. அப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் மையக்கருத்து உண்மை. அவர்கள் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கை சரியா? என எனக்குத் தெரியாது. மேலும், கேரளா ஸ்டோரி தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கான உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வாங்கியது எனக் கூறியிருந்தார்.

Twitter link 

https://twitter.com/ntk4tn/status/1657256808891973632

Archive link 

இதேபோல் Beef Fry (@ntk4tn) என்னும் டிவிட்டர் பக்கத்திலும் இத்திரைப்படத்திற்கான விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றதாக ஒரு ஸ்கிரீன் ஷாட் ஒன்றினை பதிவிட்டுள்ளது.

உண்மை என்ன ? 

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிடுவதற்கான உரிமத்தை ரெட் ஜெயன்ட் பெற்று வெளியிட்டதாக அண்ணாமலை கூறியது குறித்து, ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களில் தேடினோம். ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் விநியோக உரிமை குறித்தோ, அத்திரைப்படம் தொடர்பாகவோ எந்த செய்திகளும் அவர்களது பக்கத்தில் இல்லை. 

மேலும் இதுகுறித்துத் தேடியதில், கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் விநியோகம் தொடர்பான தகவல்களே ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணையதளத்தில் உள்ளது. அதன் பிறகு வேறு எந்த திரைப்படத்தினையும் அவர்கள் விநியோகம் செய்யவில்லை. மேலும், திரைப்படம் தொடர்பான விளம்பரங்கள், பேனர்களில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெயர் இடம்பெறவில்லை. 

நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் பதிவிட்டிருந்த செய்தி குறித்துத் தேடுகையில், அது ‘Box office world wide’ எனும் இணையதளத்தில் கடந்த 7ம் தேதி அக்கட்டுரை என அறிய முடிந்தது. அச்செய்தி எந்த தரவின் அடிப்படையில் எழுதப்பட்டது, யார் எழுதியது என்ற எந்த தகவல்களும் இல்லை. இணையதள உரிமையாளரைத் தொடர்பு கொள்ள எந்த தொடர்பு எண்ணும் அவர்களது பக்கத்தில் குறிப்பிடப்படவில்லை.

இந்த இணையதளத்தில் ‘Box office worldwide pvt ltd’ கீழ் இயங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைக் கொண்டு ஒன்றிய அரசின் Corporate Affairs தளத்தில் தேடுகையில், அப்படி எந்தவொரு நிறுவனமும் பதிவுசெய்யப்படவில்லை என்பதை அறிய முடிந்தது.

இந்நிலையில் இது குறித்து மேற்கொண்டு தேடியதில், திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் விகடனுக்கு அளித்த பேட்டியில், “தி கேரளா ஸ்டோரி படத்தின் விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் வாங்கவில்லை. அண்ணாமலை கூறியிருப்பது முற்றிலும் தவறான ஒன்று” எனக் கூறியுள்ளார்.

மேலும், இது குறித்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க முயன்றோம். அவர்கள் தரப்பில் அழைப்பினை ஏற்கவில்லை. அவர்களிடமிருந்து விளக்கம் கிடைத்தவுடன் கட்டுரையில் கூடுதல் தகவலாக இணைக்கப்படும்.

முடிவு : 

நம் தேடலில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தமிழ்நாட்டில் விநியோகிப்பதற்கான உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றதாக அண்ணாமலை கூறிய தகவல் உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader